Published:Updated:

20 ஆண்டுகளாக போராடும் தி.மு.க தொண்டரின் குடும்பம்

முருகேசன் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
முருகேசன் குடும்பத்தினர்

நீதியும் கிடைக்கவில்லை... நிதியும் கிடைக்கவில்லை!

20 ஆண்டுகளாக போராடும் தி.மு.க தொண்டரின் குடும்பம்

நீதியும் கிடைக்கவில்லை... நிதியும் கிடைக்கவில்லை!

Published:Updated:
முருகேசன் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
முருகேசன் குடும்பத்தினர்

`தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்பார்கள். அப்படித்தான் சென்னையில் தி.மு.க தொண்டர் ஒருவரின் குடும்பம் நீதியும் கிடைக்காமல், நிதியும் கிடைக்காமல் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறது. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று அங்கு மர்மமான முறையில் இறந்தவருக்கு நிவாரணம் வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டும் அவர்களின் துயரத்துக்குத் தீர்வு கிடைக்காததுதான் வேதனை!

சென்னை, மகாகவி பாரதி நகரில் வசித்தவர் முருகேசன். தி.மு.க அடிப்படை உறுப்பினராக இருந்த முருகேசன், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் முரட்டு பக்தராக வலம்வந்தார். ‘‘அவரோட ஆட்டோவுல தி.மு.க கொடி கட்டியிருப்பாரு. ஆட்டோ உள்ளேயும் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்களெல்லாம் இருக்கும்” என்கிறார்கள் ஏரியாவாசிகள். அப்படிப்பட்ட அதிதீவிரத் தொண்டர், தலைவருக்கு ஒரு பிரச்னை என்றால் சும்மா இருப்பாரா?

2001, ஜூன் 30-ம் தேதி ஜெயலலிதா அரசால் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட நேரம்... தமிழகம் முழுவதுமே தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படித்தான் சென்னை உயர் நீதிமன்ற வாசலில் முருகேசன் உள்ளிட்ட தி.மு.க-வினர் சிலர் போராட்டம் நடத்தி, கைதானார்கள். அதன் பிறகு நடந்தவற்றை முருகேசனின் கடைசி மகன் ரவீந்திரன் நம்மிடம் விவரித்தார்...

‘‘போராட்டம் நடத்தியவர்களைக் கைதுசெய்து முதலில் சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். ஆனால், அப்பாவை மட்டும் அன்று மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றினார்கள். அங்கு சேர்க்கப்பட்ட நான்காவது நாளே அப்பா மர்மமான முறையில் இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 38. வயிற்றுவலியால் இறந்ததாக போலீஸார் சொன்னாலும், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. உண்மையில் அப்பாவை போலீஸார் அடித்தே கொன்றிருக்கிறார்கள். ‘பிரச்னை செய்யாமல் உடலைப் பெற்றுச் செல்லுங்கள். இல்லையெனில், உங்கள் பிள்ளைகளும் கஷ்டப்படவேண்டியிருக்கும்’ என்று போலீஸார் மிரட்டியதால் பயந்துபோன என் அம்மா, உடலைப் பெற்று அடக்கம் செய்தார்.

இது நடந்தபோது, நான் நான்காவது படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு இரண்டு அக்கா, இரண்டு அண்ணா இருக்கிறார்கள். அப்போது எங்கள் எல்லோருக்குமே சிறு வயது என்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு என் அம்மா இந்த விஷயத்தை தி.மு.க-வினர் சிலர் மூலம் தலைவர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, அவர் நான்கு வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தார். மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஆணையம், எங்கள் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக, நான்கு வாரங்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று 2002, ஏப்ரல் 1-ம் தேதி தீர்ப்பு அளித்தது. ஆனால், 20 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம்... இன்னமும் அந்த ஒரு லட்சம் ரூபாய் எங்களுக்குக் கிடைக்கவில்லை’’ என்றார் கண்கள் கலங்க!

முருகேசன்
முருகேசன்

முருகேசனின் மனைவி ரேவதி நம்மிடம், ‘‘மனித உரிமை ஆணையத்தில் தீர்ப்பு பெற்ற பிறகும் நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து முறையிட்டோம். 2004-ல் ஜெயலலிதா ஒருமுறை எங்கள் ஏரியாவுக்கு பிரசாரத்துக்கு வந்தபோது அவரிடமும் மனு கொடுத்தேன். எதுவும் நடக்கவில்லை. 2006-ல் தி.மு.க ஆட்சி அமைந்ததும், ‘எப்படியும் பணம் கிடைத்துவிடும்’ என்று நம்பினோம். டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணனை அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தோம். இரண்டு மாதங்கள் நடையாக நடந்ததுதான் மிச்சம். அன்றைக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த சுப.தங்கவேலன், வட சென்னை தி.மு.க எம்.பி-யாக இருந்த குப்புசாமி உள்ளிட்டவர்களைச் சென்று பார்த்து முறையிட்டோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இப்படியே தி.மு.க ஆட்சியும் முடிந்துவிட்டது. கிடைத்த சிறு சிறு வேலைகளைப் பார்த்துக்கொண்டு, மகன்களையும் வேலைக்கு அனுப்பித்தான் காலத்தை ஓட்டினோம். இப்போது மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்திருப்பதால், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறோம்’’ என்றார் வேதனையுடன்.

கடந்த 2004-ம் ஆண்டு ரேவதி, தலைமைச் செயலகத்துக்குச் சென்று தீக்குளித்து, தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து ரேவதியை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், ‘உங்களுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை தயாராகிவிட்டது. ஆனாலும், உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி உத்தரவு இன்னும் வரவில்லை. கொஞ்சம் காத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, அதிகாரிகள் தரப்பில் நாம் பேசியபோது, “20 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம் என்பதால், சரியாக விவரம் தெரியவில்லை. ஒரு லட்சம் ரூபாயைக் கொடுப்பதில் அரசு தரப்பில் சட்டச் சிக்கல் ஏதேனும் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை... செக் செய்கிறோம்” என்றார்கள்.

முருகேசன் குடும்பம் தற்போது வசித்துவரும் பெரம்பூர் பகுதியின் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகரிடம் விஷயத்தைத் தெரிவித்தோம். ‘‘கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். ஆவணங்களை எடுத்துக்கொண்டு, என்னை நேரில் வந்து சந்திக்கச் சொல்லுங்கள்’’ என்றார். இந்தத் தகவலை முருகேசனின் குடும்பத்தினருக்குத் தெரிவித்திருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின், தி.மு.க தொண்டரின் குடும்பத் துயரைக் களைவாரா?