சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்!

மகன், மகளுடன் பாபுவின் மனைவி உஷா...
பிரீமியம் ஸ்டோரி
News
மகன், மகளுடன் பாபுவின் மனைவி உஷா...

பதினைஞ்சு நாள் ஆனபிறகுதான் கொஞ்சம் பயம் எட்டிப் பாத்துச்சு. திரும்பவும் சண்டை போட்டோம்.

மீன்வேட்டைக்காகக் கடல் செல்லும் மீனவர்களின் உயிர், வீடு திரும்பும்வரை நிச்சயமில்லாதது. இந்தத் துயர உண்மையின் இன்னொரு சாட்சியம் சென்னை எண்ணூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள். கடலுக்குள் நிராதரவாக 55 நாள்கள் போராடி பாதி உயிரோடு, கடந்த மாதம் மியான்மரில் கரை சேர்ந்திருக்கிறார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகளையெல்லாம் சந்தித்து முடித்து, இரு நாட்டு அதிகாரிகளின் துணையோடு கடந்த வாரம் எட்டுப் பேர் மட்டும் வீடு திரும்பியிருக்கிறார்கள். கடலுக்குள் என்ன நடந்தது, வீடு திரும்பாத இன்னொருவர் எங்கே, அரசாங்கம் என்ன செய்தது எனப் பல கேள்விகளோடு அவர்களைச் சந்தித்தேன்.

சிலர் தயங்க, சிலர் தவிர்க்க, சிலர் மட்டும், 55 நாள் நடுக்கடல் வாழ்க்கையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் மதுரையிலிருந்து பிழைப்புதேடி வந்து, சென்னையில் கடலோரத்தில் குடியேறி டெய்லராகப் பணியாற்றிவந்த முருகன் அனைவரின் சார்பாகவும் நம்மிடம் பேசினார்.

அந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்!

“எனக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் தொடர்பில்லை. இவ்வளவு வருஷமா இந்த ஜனங்களோடுதான் இருக்கோம், கடல் கிட்டகூடப் போனதில்லை. கொரோனாவால வேலை இல்லாம, வருமானம் இல்லாம தவிச்சப்போ, ‘கடலுக்கு வர்றியா’ன்னு கூப்பிட்டாங்க. முதல்முறை கடலுக்குள்ள போனேன். அதிகபட்சம் பத்து நாள், திரும்பி வந்துருவேன்னுதான் வீட்டுல சொல்லிட்டுப் போனேன். என்னோட சேர்ந்து ஒன்பது பேரு. அதுல நாலஞ்சு பேருக்குத்தான் தொழில் தெரியும். வேலை தெரிஞ்சவங்க அங்க புடி, இங்க இழுன்னு சொல்ற வேலைய செய்வோம், அவ்ளோதான். கடலுக்கு இறங்கி மூணு நாளுல 3 டன் மீனு பிடிபட்டுச்சு. இன்னும் ரெண்டு நாளுதான், எடுத்துட்டுப் போன ஐஸ் பெட்டியை நிரப்பிக்கிட்டு கரைக்குத் திரும்பலாம்னு இருந்தோம். ஆனா போதாத காலம் படகுல ஏதோ கோளாறு. திடீர்னு நின்னுடுச்சு. அடுத்து ஒரு இன்ச்கூட நகரல. இனி என்ன வழி, எப்படிக் கரைக்கு ஏறுவோம்னு பயம் வந்துச்சு. என்னைக் கூட்டிட்டுப் போன டிரைவர்கிட்ட கேட்டா, ‘பத்து பதினஞ்சு நாலு கழிச்சுதான் தேடவே தொடங்குவாங்க... எப்படியும் இந்தப்பக்கம் வேற ஏதாவது படகு வரும்... கரை கண்டிரலாம்’னு சொல்லிட்டாரு.

கேஸ், அரிசி, டீத்தூளுன்னு எல்லாம்தான் இருக்கே. நாங்க மூணு வேள ஆக்கித் திண்ணு, அப்பப்போ டீ குடிச்சு சாதாரணமாதான் இருந்தோம். பதினைஞ்சு நாள் ஆனபிறகுதான் கொஞ்சம் பயம் எட்டிப் பாத்துச்சு. திரும்பவும் சண்டை போட்டோம். ஆனா பாவம் டிரைவர் மட்டும் என்ன செய்வாரு. அமைதியா விட்டுட்டோம். இத்தனை நாளுல காத்துக்கு அசைஞ்சு அசைஞ்சு படகு ரொம்ப தூரம் நகர்ந்துருச்சு. எங்ககிட்ட இருந்த போன், டாக்கி எதுவும் வேலை செய்யல. பதினாறாவது நாள் ராத்திரி, தூரத்துல சின்னதா வெளிச்சம் தெரிஞ்சுது. தூங்குறவுங்கள எல்லாம் எழுப்பி விட்டு, பாக்கச்சொன்னேன். எங்க படகுல இருந்து டார்ச் லைட் ஆன் பண்ணி மேல கீழ அசைச்சுக் காட்டினோம். அவங்களும் லைட்டை ஆன் பண்ணி ஆப் பண்ணிப் போட்டாங்க. ‘காலைல வந்து பாக்குறோம்’னு அர்த்தமாம்.

அந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்!

அடுத்த நாளு வந்து பார்த்தாங்க. அது இலங்கைப் படகு. என்னாச்சுன்னு கேட்டாங்க. படகு ஸ்டார்ட் ஆகலேன்னு எங்களுக்குத் தெரிஞ்ச இங்கிலீஸ்ல சொன்னோம். அவங்க படகுல எங்க படகைக் கட்டி இழுக்க முயற்சி செஞ்சாங்க. கயிறு அறுந்திருச்சு. ரெண்டு புது பேட்டரி கொடுத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னாங்க. அப்பவும் ஸ்டார்ட் ஆகல. ரெண்டு பேரு எங்க படகுல இறங்கி என்ஜினை செக் பண்ணினாங்க. ‘ஆயிலும் தண்ணியும் கலந்திடுச்சு... என்ஜின் சீஸ் ஆயிடுச்சு’ன்னு சொன்னப்போ எங்களுக்கு ரொம்பவே கலக்கமாயிடுச்சு.

“எங்க ஊருக்கு நீங்க வந்தா உங்கள அரெஸ்ட் பண்ணுவாங்க. உங்க ஊருக்கு நாங்க வந்தா எங்களை அரெஸ்ட் பண்ணுவாங்க. அதனால எங்களால உங்களுக்கு உதவ முடியலே... கோஸ்ட் கார்டைப் பார்த்தா உங்க நிலைமையைச் சொல்றோம்”னு சொல்லிட்டு அவங்ககிட்ட இருந்த தண்ணி, பிஸ்கட் எல்லாம் கொடுத்துட்டுப் போனாங்க. கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைய ஆரம்பிச்சுச்சு. அன்னைக்கு ராத்திரி கடுமையான புயல்... அடுத்த ஒருவாரம் பகல் எது ராத்திரி எதுன்னு தெரியலே. திசை, நேரம் எதுவும் தெரியல. ஒருவேளை படகு கவுந்தா, சிலநாள்களாவது கடல்ல மிதக்கலாம்னு காலி கேன்ல கயிறு கட்டி தயார் பண்ணி வெச்சிருந்தோம். படகு வேற கடலுக்குள்ள இறங்குற மாதிரியிருந்துச்சு. சாப்பாடு இருப்பும் குறைய ஆரம்பிச்சது. வெறும் மூணு டம்ளர் அரிசி போட்டுச் சோறாக்கி ஒன்பது பேர் சாப்பிட்டோம். அதுவும் ரெண்டு வேளைதான். அடுத்த ஒருவாரத்துல ரெண்டுவேளை ஒருவேளையா கொறஞ்சிடுச்சு. 25வது நாளுல உணவுக் கையிருப்பு தீர்ந்திடுச்சு...” முருகனின் கண்களில் மிரட்சி படர்கிறது.

“30 நாள் கடலுக்குள்ள திரிஞ்சும் கரையோ மனுஷங்களோ கண்ணுக்குப் படலே. இனி அவ்வளவுதான்னு நெனச்சப்போ தூரத்துல ஒரு மலை தெரிஞ்சுச்சு. அப்போதான் ஒரு பர்மாப் படகு எதிர்ல வந்துச்சு. எங்களைப் பாத்ததும் என்ன வேணும்னு கேட்டாங்க. அப்போ எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பசி மட்டும்தான். வயித்தத் தொட்டுக் காட்டினோம். அவங்க ஆக்கி வெச்சிருந்த சோற்றையும் மீன் குழம்பையும் பெரிய பிளாஸ்டிக் கவருல கட்டி எங்க படகுல இறக்குனாங்க. ரெண்டு கையாலயும் அள்ளி அள்ளித் தின்னோம். கோஸ்ட் கார்டுக்குத் தகவல் சொல்லச் சொன்னோம். அடுத்த பத்தாவது நிமிஷம் எங்க பக்கத்துல பெரிய கப்பல் வந்து நின்னுச்சு. அப்போதான் பிழச்சுட்டோம்னு தெரிஞ்சது...” தங்கள் உயிர்ப்போராட்டத்தைச் சொல்லி உணர்ச்சிவசப்படுகிறார் முருகன்.

சில நாள்கள் படகிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்து பின்னர் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு வாரம் தங்கவைத்து இந்திய அதிகாரிகளுக்கும் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறது மியான்மர் அரசு. இந்தியா கிளம்புவதற்கு ஆயத்தமான நேரத்தில்தான் அந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மியான்மர் ஆற்றுமுகத் துவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நம் மீனவர்கள் சென்ற படகு, கடும் மழையில் தள்ளாட, அது சேதமடையாமல் காப்பாற்ற நீரில் இறங்கியிருக்கிறார் ஒன்பது பேரில் ஒருவரான மீனவர் பாபு. நீருக்குள் இறங்கியவர், கரை திரும்பவில்லை. அன்று இரவு முழுவதும் மியான்மார் அரசு அவரைத் தேடியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றுவரை அவரைக் காணவில்லை. மீதமுள்ள எட்டுப் பேருக்கும் எமர்ஜென்சி பாஸ்போர்ட் வழங்கி, தனிவிமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

மகன், மகளுடன் பாபுவின் மனைவி உஷா...
மகன், மகளுடன் பாபுவின் மனைவி உஷா...

சுனாமிக் குடியிருப்புகளின் ஒரு பகுதியில், நான்காவது மாடியில் இருக்கும் பாபுவின் வீட்டிற்குச் சென்றோம். பாபுவின் மனைவி உஷா, 17 வயது மகன், 15 வயது மகள் மூவரும் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் சோர்வோடு நம்மை எதிர்கொண்டார்கள். தன் கண்ணீரை எல்லாம் மென்று விழுங்கிக்கொண்டு பேசினார் உஷா. “நாங்க காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. பெருசா குடும்பத்துல சப்போர்ட் இல்ல. எங்க மூணு பேருக்கும் அவர் மட்டும்தான். எனக்கு நம்பிக்கை இருக்குங்க. ஐம்பத்தைஞ்சு நாள் கழிச்சு திடீர்னு இவங்கெல்லாம் உசுரோட வந்துடலையா? மியான்மர்ல இருந்து போன்ல பேசும்போதும் ‘வந்துடுறேன் குட்டி’ன்னு ஆசையா பேசினார். ஆனா அன்னைக்கு சாயங்காலம்தான் இது நடந்திருக்கு. அவருக்குத் தெரியும்ங்க, எங்களுக்கு வேற யாரும் இல்லைன்னு. நிச்சயம் வந்திடுவாரு...” அவ்வளவு நம்பிக்கை அவர் குரலில்.

தன் காதல் கணவனின் மீது உஷா கொண்ட நம்பிக்கையை மட்டுமல்ல... உஷாவைப்போல இந்தியக் கடலோரங்களில் கண்ணீரோடு தங்கள் அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருக்கும் மொத்தப் பெண்களின் நம்பிக்கையையும் காப்பாற்றுவது சமூகத்தின், அரசின் கடமை!