பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

தொழில்முனைவோர் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்முனைவோர் திருவிழா

பிசினஸ்

மிழகம் முழுக்க இருக்கும் தொழில்முனைவோர்கள் ஒன்றுகூடி, தங்கள் வெற்றி ரகசியங்களை ஒளிவுமறைவில்லாமல் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தலைநகர் சென்னையில் அடிக்கடி நடக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான வளர்ச்சியே. ஆனால், கடந்த வாரம் சென்னையில் நடந்ததை நிகழ்ச்சி என்பதைவிட, `தொழில்முனைவோர் திருவிழா’ என்றுதான் சொல்ல வேண்டும். டை சென்னை, ஜென்-இ அமைப்புகள் இணைந்து நடத்திய ‘டைகான்’ இரண்டு நாள் திருவிழாவில் சென்னையின் முக்கியத் தொழில்முனைவோர்களும், தமிழகம் முழுக்க இருக்கும் வளரும் தொழில்முனைவோர்களும் கலந்துகொண்டனர்.

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

இந்த விழாவின் முதல் நாளன்று மாலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது (பார்க்க, அடுத்த பக்கத்திலிருக்கும் பெட்டிச் செய்தி). இரண்டாம் நாள் முழுக்க ஆறு அமர்வுகளில் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசினார் டை சென்னை அமைப்பின் தலைவரும், கவின்கேர் நிறுவனத்தின் தலைவருமான சி.கே.ரங்கநாதன்.

“தற்போது பிசினஸ் மாடல் மாறிக்கொண்டே வருகிறது. தமிழகம் அறிவுக்கொள்முதலுக்கு ஏற்ற இடமாக இருந்தாலும், தொழில்முனைவதில் பின்தங்கியிருக்கிறது. புதிது புதிதாகத் தொழில்களைத் தொடங்குவதில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறட்து. கடைவைத்து விற்பனை செய்பவர்களுக்குச் சவால்விடும்படியாக ஆன்லைன் வர்த்தகத்துறை பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இ-காமர்ஸ் துறையுடன் போட்டிபோடும் விதமாக வர்த்தக நிறுவனங்களும் தங்களது விற்பனை உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

நதிக்குத் தொலைவிலிருக்கும் மரம்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கப் பேச்சாளரான சம்பர்க் ஃபவுண்டேஷன் நிறுவனரான வினீத் நாயர், தன் முதல் பணியைச் சென்னையிலிருந்து தொடங்கியதாகக் கூறினார். ‘‘தொழில்முனை வோர்கள் வண்ணத்துப் பூச்சியைப்போல உயரப் பறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்குப் பல தொழில்முனைவோர்கள் உருவாக வேண்டும். நதிக்குப் பக்கத்திலிருக்கும் மரம் எப்போதும் பசுமையாக இருக்கும். நதிக்குத் தொலைவிலிருக்கும் மரம் பசுமையாக இல்லாமல் வாடிப் போயிருக்கும். ஆனால், அதன் வேர்கள் நீரைத் தேடி வெகு ஆழத்துக்குத் துளைத்துச் சென்றிருக்கும். அதுபோல, தொழில்முனைவோர்களும் தங்கள் யோசனைகளை ஆழ்ந்த பார்வையைக்கொண்டு உருவாக்கினால் எந்தச் சூழலையும் தாங்கி, எதிர்கொள்ள முடியும். வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், கனவுகளைத் துரத்துதல் போன்ற குணங்களைக்கொண்டிருந்தால் தொழில் முனைவோர்கள் எப்போதும் முன்னேற முடியும்’’ என்றார்.

அடுத்துப் பேசிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பாதுகாப்பாளர் ஹரீஷ் பட், வசதியான இந்தியா, இளம் இந்தியா, வளர்ச்சியடையும் நகர இந்தியா, இணைக்கப்பட்ட இந்தியா, உடல்நலம் பேணும் இந்தியா மற்றும் உள்ளார்ந்த இந்தியா என்ற தலைப்புகளின்கீழ் புதிய தொழில் வாய்ப்புகள் பற்றிப் புள்ளிவிவரங்களுடன் விரிவாகப் பேசினார்.

ஜி.எஸ்.டி-யால் பயன்பெற்றிருக்கிறோம்!

இந்தக் கருத்தரங்கில், ‘இதயம்’ ஆயில் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.முத்துவுடன் கலந்துரையாடினார் `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன். அதில் பேசிய ‘இதயம்’ முத்து, “1978-ம் ஆண்டில்தான் வியாபாரத்துக்குள் வந்தேன். 1980-களில்தான் வர்த்தகத்தை தமிழகம் முழுக்க வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே, எங்கள் நிறுவனத்தின் சீனியர் பணியாளர்களிடம், ‘இன்னும் இரண்டாண்டு களுக்குள் தமிழகம் முழுக்க நம் நிறுவனத்தைக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டேன். அவர்கள்தான், வீட்டுக்கு வீடு சென்று சந்தைப் படுத்தும் உத்தியைக் கூறினார்கள். அந்த உத்திதான் இன்றுவரை எங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது. எனவே, நம் முன்னேற்றத்துக்கான யோசனையை வெளியில் இருப்பவர்களிடம் கேட்பதைவிட நம்முடனிருக்கும் பணியாளர்களிடம் கேட்பதே சிறந்தது. எனவே, எந்தப் புதுமுயற்சியை எடுத்தாலும் பணியாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பது வழக்கம்.

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

பொதுவாக, வரவு செலவுக் கணக்கை மாதக் கணக்கில் பார்ப்பார்கள். ஆனால், நான் வாரக் கணக்கில் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தேன். அதன் மூலம் எங்கள் வர்த்தகத்தை இன்னும் நுட்பமாகத் தெரிந்துகொள்ளவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் முடிந்தது.

ஜி.எஸ்.டி வரி, வரவு செலவுக் கணக்கை முறையாகக் கடைப்பிடிக்கும் வர்த்தகர்களுக்கு பலனளிப்பதாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வந்த பிறகு எங்கள் தயாரிப்புச் செலவு குறைந்ததால், லிட்டருக்கு 5 ரூபாய் விலையைக் குறைத்தோம். ஆனாலும், முறையான கணக்கு வழக்குவைத்து வர்த்தகம் செய்பவர்களை தொந்தரவு செய்வதுபோல ரெய்டு நடத்துவதை அரசு தவிர்க்க வேண்டும்” என்று அரசுக்கு தனது வேண்டுகோளை வைத்தார் அவர்.

சவாலான வேலையை விரும்பும் இளைஞர்கள்

இந்த நிகழ்ச்சியின் அடுத்த அமர்வாக ‘நாளைய மனிதர்கள்’ என்ற தலைப்பில், எதிர்காலத்தில் பணியாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்தது. இந்தக் கலந்துரையாடலை ஆம்பியர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான ஹேமலதா அண்ணாமலை நடத்தினார். ‘‘ஆர்வம் கொண்ட இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து, பணியில் அமர்த்த வேண்டும். நான் ஒருமுறை என் அலுவலகத்திலிருந்து வேறிடத்துக்குச் செல்ல ஏதாவது வாடகை கார் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னைத் தேடிவந்த ஒரு கார் டிரைவர், ‘மேடம், நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். சிங்கப்பூரில் 15 வருடங்கள் கார் டிரைவராக இருந்திருக்கிறேன். எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா?’ என்று கேட்டார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்து, அவருக்கு வேலை தந்தேன். இன்று அவர் எனது நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்’’ என்றார்.

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

‘‘எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் பண்பாட்டைப் பின்பற்றி நடக்கக்கூடிய பணியாளர்கள் வேண்டும்’’ என்றார் சவிதூர் பிசினஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் லதா நம்பீசன்.

‘‘ `இன்றைய இளைஞர்கள் மேம்போக்காக வேலை செய்வார்கள். அடிக்கடி வேலை மாறிவிடுவார்கள்’ என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர்களுக்குப் பிடித்திருந்து, அவர்களின் திறமைக்குச் சவால் தரும் எந்த வேலையையும் உற்சாகமாகச் செய்பவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கேற்ற சூழ்நிலையை அமைத்துத் தருவதுதான் நம் வேலை’’ என்றார் ஆஸ்பைர் நிறுவனத்தின் தலைவரும், சக நிறுவனருமான கெளரி சங்கர் சுப்பிரமணியன்.

தனித்துவம் தேடும் இளைஞர்கள்

அடுத்த அமர்வில் இளம் தலைமுறைத் தொழில்முனைவோர்கள் மூன்று பேர்களுடன் கலந்துரையாடினார் ஈழவர்ஆந்த்ரப்ரனார் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஆர்.ராம்ராஜ். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த வினோத் தாசரியின் மகனும் வேகூல் ஃபுட்ஸ் அண்டு புராடக்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனருமான சஞ்சய் தாசரி, சி.கே.ரங்கநாதனின் மகனும் சி.கே பேக்கரியின் மேலாண்மை இயக்குநருமான மனு ரஞ்சித், ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகனும் லிங்க் லாஜிஸ்ட்டிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனருமான அபினவ் ராஜாவும் இந்தக் கலந்துரையாடலில் தங்கள் பிசினஸ் முயற்சிகளைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். இந்த மூன்று இளைஞர்களின் பெற்றோர்கள் பெரிய பிசினஸ்மேன்களாக இருந்தாலும் தங்களுக்கென தனி அடையாளத்தைப் பெறுவதற்காக இவர்கள் முயல்வதைப் பற்றி எளிமையாக எடுத்துச் சொன்னார்கள்.

ஆசியாவிலேயே பெரிய தொழிற்சாலை

அடுத்த அமர்வில், மில்க்கி மிஸ்ட் டைரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சதீஷ்குமார், மேட்ரிமோனி டாட் காம் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் ஆகியோருடன் கலந்துரையாடினார் ஸ்பார்க் கேப்பிட்டல் நிறுவனத்தின் சீனியர் மேனேஜிங் டைரக்டர் ராமகிருஷ்ணன். முதலில் பேசிய மில்க்கி மிஸ்ட் சதீஷ்குமார், ‘‘எட்டாம் வகுப்புக்குமேல் படிக்க எனக்கு வசதி இல்லை. படிப்பின் முக்கியத்துவத்தை அப்போது உணர முடியவில்லை. படிப்பு என்பது பிசினஸுக்கு மிகவும் அவசியம். அமுல் நிறுவனத்தில் உயரதிகாரிகளாக இருந்தவர்கள் எனது நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் மூலம் பிசினஸை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்கிறேன். 2014-ம் ஆண்டே வாட்ஸ்அப்பைக் கொண்டு எங்கள் பிசினஸை வளர்த்தோம். ரூ.500 கோடி முதலீட்டில் தெற்காசியாவிலேயே இல்லாத அளவுக்கு பெரிய அளவில் பனீர் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கடந்த ஆண்டு தொடங்கியிருக்கிறோம்’’ என்றார்.

மேட்ரிமோனி டாட் காம் நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், ‘‘என்னதான் டேட்டிங் கலாசாரம் போன்ற மேற்கத்திய விஷயங்கள் நம் கலாசாரத்தில் ஊடுருவினாலும் பாரம்பர்யமான முறையில் திருமணம் செய்துகொள்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை’’ என்றவர், ஜாதகப் பரிமாற்றம் என்பதைத் தாண்டி மண்டபம் பார்ப்பது, போட்டோகிராபரை நியமிப்பது எனப் பல வசதிகளையும் வாடிக்கை யாளர்களுக்குச் செய்துதருவதாகச் சொன்னார்.

இந்தக் கருத்தரங்கின் கடைசி அமர்வில் தொழில்முனைவோர் ஆலோசகரான சந்து நாயர், கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வான சுரேஷ் சம்பந்தம், கோ ஃபேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கௌதம் சரோகி ஆகியோர் கலந்துரையாடினர். சாஸ் (SaaS) தொழில்நுட்பம் மூலம் நம் நாடு ஒரு பில்லியன் டாலரை எப்படி ஈட்ட முடியும் என்பது குறித்து விரிவாகப் பேசினார் சுரேஷ் சம்பந்தம். ஆன்லைன் வணிகம் என்னதான் வளர்ந்தாலும், துணிமணி வாங்குவது போன்றவற்றைக் கடைகளுக்குச் சென்று வாங்கவே மக்கள் விரும்புவதாகச் சொன்னார் கௌதம் சரோகி.

ஆக மொத்தத்தில், அறிவுக்கு விருந்தாக இருந்தது இந்தத் தொழில்முனைவோர் திருவிழா!

துரோணாச்சார்யா அருண் ஜெயின்!

தொழில் துறையில் சாதனை படைத்தவர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிப்பது டை சென்னை நிறுவனத்தின் வழக்கம். இந்த ஆண்டும் ஐந்து முக்கிய நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ்.ஆனந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இன்டெலக்ட் டிசைன் எரீனா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ஜெயினுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.

கோ ஃபேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கௌதம் சரோகிக்கு இந்த ஆண்டின் நிலைப்புத் தன்மைகொண்ட நிறுவனத்துக்கான விருது (Sustaining Enterprise of the Year) வழங்கப்பட்டது. சம்முன்னதி ஃபைனான்ஷியல் இன்டர்மீடியேஷன் அண்டு சர்வீசஸ் நிறுவனத்தின் எஸ்.ஜி.அனில்குமாருக்கு வளர்ந்துவரும் நிறுவனத்துக்கான விருது (Scale Up Enterprise of the Year) வழங்கப்பட்டது. கீர்திலேப்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இந்த ஆண்டின் ஸ்டார்ட்அப் விருது வழங்கப்பட்டது. குவி ஜீக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் அருண் பிரகாஷுக்கு அசோசியேட் மெம்பர் விருது வழங்கப்பட்டது!

பரிசு பெற்ற ஸ்டார்ட்அப்!

தமிழகம் முழுக்க இருக்கும் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் இந்தத் திருவிழாவில் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்வுசெய்து கெளரவிப்பதுடன் பரிசுத் தொகையையும் வழங்குவது டை சென்னை அமைப்பின் வழக்கம். இந்த ஆண்டு நடந்த டைகான் நிகழ்ச்சியில் மூன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொண்டன.

டைகான், ஜென்-இ... சென்னையில் நடந்த தொழில்முனைவோர் திருவிழா!

இந்த நிறுவனங்களின் தொழில், அதிலுள்ள சிறப்பு, இந்த நிறுவனத்தின் முன்னிருக்கும் பிசினஸ் வாய்ப்புகள், போட்டி நிறுவனங்கள், எதிர்காலத்தில் வளர்வதற்கான வாய்ப்புகள் எனப் பல கோணங்களில் ஆராய்ந்து, சிறந்த நிறுவனமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டது. ட்ரோன்களைத் தயாரிக்கும் பேப்ஹெட்ஸ் ஆட்டோ மேஷன் பிரைவேட் லிமிடெட், இயற்கையான முறையில் கொசுக் களைக் கொல்லும் போக் ஆர்கிட் உள்பட மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டன. இவற்றில் பேப்ஹெட்ஸ் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட துடன், இந்த நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டது. வென்சர்ஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் நடராஜன் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்.