Published:Updated:

சென்னை மெட்ரோ... வளர்ச்சியை சமன் செய்யும் கோல்!

சென்னை மெட்ரோ
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை மெட்ரோ

முன்னதாக சென்னையின் ரயில் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்.

கொரோனா காலத்தில் பொதுப் போக்குவரத்துகள் முடங்கிக்கிடக்கின்றன.

இந்தியப் பொதுப்போக்குவரத்தின் அதிநவீன முகமான மெட்ரோ ரயில்களும் பணிமனைகளில் காத்துக்கிடக் கின்றன. தேவையெனில், ஒரு சமிக்ஞையில் அவை உயிர் பெற்றுவிடும். சரி எப்படி இருக்கின்றன சென்னை மெட்ரோவின் அடுத்தடுத்தகட்ட திட்டங்கள்?

முன்னதாக சென்னையின் ரயில் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம். சென்னைவாசிகளுக்கு ரயில்கள் ஒன்றும் புதிதல்ல; நீண்டகாலமாகப் பரிச்சயமானவை. தாம்பரம்-கடற்கரை... புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளை நெருங்குகிறது. அந்நாள்களில் தொலைதூர ரயில்களெல்லாம் நீராவியில் இயங்கியபோது, சென்னையில் புறநகர் ரயில்கள் மின்சாரத்தில் இயங்கின. எல்லோரும் வியந்தார்கள். அன்று புறநகர் ரயில்கள் `சென்னையின் நவீன முகம்’ எனில், இன்று மெட்ரோ ரயில்களை `சென்னையின் அதிநவீன முகம்’ எனலாம். இந்தப் புறநகர் ரயில்களைவிட மெட்ரோ ரயில்கள் துரிதமானவை, தூய்மையானவை, குளிரூட்டப்பட்டவை, நகருக்குள் ஊடுருவிப் பாய்பவை. இவை எல்லாரும் அறிந்தவைதான்.

சென்னை மெட்ரோ... வளர்ச்சியை சமன் செய்யும் கோல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்னும் சில வேறுபாடுகள் முக்கியமானவை. இந்திய ரயில்கள் முன்னொரு காலத்தில் மீட்டர் கேஜின் மீது ஓடின. அதாவது, ஒரு மீட்டர் அகலம். ரயில் பெட்டிகளின் கொள்ளளவை அதிகரிக்கப் பின்னாளில் இவை அகலப் பாதைக்கு (Broad Gauge) மாறின. இதன் அகலம் 1.676 மீட்டர். இப்போதைய தொலைதூர ரயில்களும், புறநகர் ரயில்களும் இந்த அகலப் பாதையின் மேல்தான் ஓடுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மெட்ரோ... தமிழக அரசின் சொத்து!

சென்னை மெட்ரோ ரயில் பாதையின் பெயர் `நிலைப் பாதை’ (Standard Gauge). இதன் அகலம், மீட்டர் கேஜைவிட அதிகம். அகலப் பாதையைவிடக் குறைவு. அதாவது, 1.435 மீட்டர். மெட்ரோ ரயில்கள் நெரிசலான நகரப் பகுதிகளுக்குள் ஓடுவதால், அவற்றில் வளைவுகள் அதிகம் இருக்கும். நிலைப் பாதையில்தான் அகலப் பாதையைவிடக் கூர்மையான வளைவுகளை அமைக்க முடியும்; மேலும், அகலப்பாதையைவிட வேகமாகப் போகவும் முடியும்.

அடுத்த வேறுபாடு, மெட்ரோ ரயில் நிலையங்கள் நகரத்துக்குள்ளான போக்குவரத்துக்கானது. ஆதலால், அவை அருகருகே அமைந்திருக்கும். இரண்டு நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரம் பொதுவாக 1 கிலோமீட்டர் என்பதாக இருக்கும். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான தூரத்தின் இடைவெளி எப்படிக் குறைவானதோ, அதுபோல அடுத்தடுத்து வரும் ரயில்களுக்கு இடையிலான கால இடைவெளியும் குறைவானது. சென்னை மெட்ரோ ரயில்கள் இப்போது ஐந்து நிமிடங்கள் முதல் 14 நிமிடங்கள் வரையிலான இடைவெளிகளில் ஓடுகின்றன.

ஹாங்காங் போன்று 90 சதவிகிதம் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் நகரங்களில், நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் நடைபாதையைக் கடந்தபடியே இருக்கும். சென்னை மெட்ரோ ரயில்களாலும் வருங்காலத்தில் தேவை நேரும்போது கால இடைவெளியைக் குறைத்துக்கொள்ள முடியும். அதற்கேற்றவாறுதான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக, தொலைதூர ரயில்களும் புறநகர் ரயில்களும் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுபவை; ஒன்றிய அரசுக்குச் சொந்தமானவை. ஆனால், மெட்ரோ ரயில்கள் அந்தந்த மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை. ஆதலால், சென்னை மெட்ரோ ரயில், தமிழக அரசின் சொத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொலைதூர ரயில்களுக்கும், மெட்ரோ ரயில்களுக்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. முன்னது மிகுதியும் தரைத்தளத்தில் ஓடும். பின்னது ஏற்கெனவே வளர்ச்சியடைந்த நகரத்தில் நிறுவப்படுவதால், அவை மேம்பாலப் பாதையிலும் சுரங்கப் பாதையிலும் ஓடும். இதிலும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்திய நகரங்களின் மெட்ரோ ரயில் தடங்கள் அதிகமும் மேம்பாலப் பாதையின்மீதே அமைந்தவை. ஆனால், சென்னை மெட்ரோவின் முதல்கட்டத்தின் செம்பாதி சுரங்கப் பாதையால் ஆனது.

சென்னை மெட்ரோ... வளர்ச்சியை சமன் செய்யும் கோல்!

இன்றைய சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டத்தின் பகுதியாக ஏழு நிலையங்கள் 2015-ல் சேவையைத் தொடங்கின. அடுத்தடுத்து 32 நிலையங்கள் திறக்கப்பட்டன. 2019-ன் தொடக்கத்தில் முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்தன. சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்டம் இரண்டு வழித்தடங்களால் ஆனது. அவை தடம்-1 (நீல வழிப்பாதை), தடம்-2 (பச்சை வழிப்பாதை) என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு தடங்களின் மொத்த நீளம் 45 கிலோமீட்டர்.

முதல் தடம் வண்ணாரப் பேட்டையில் தொடங்கி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக விமான நிலையத்தை அடைகிறது. இரண்டாவது தடம் சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, நூறடி சாலை வழியாக பரங்கிமலையை அடைகிறது.

தடம் 1-ன் நீட்சியான வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரையிலான பணிகள் கொரோனா ஊரடங்கு கால சுணக்கத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கி யிருக்கின்றன. பணிகள் இந்த ஆண்டு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளைய சென்னை மெட்ரோ!

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால், இந்திய மெட்ரோ ரயில் வரலாற்றில் இது ஒரு மைல்கல் லாக அமையும். சென்னையில் ஏற்கெனவே இரண்டு தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கிவரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டம் மூன்று தடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. 

தடம் 3:

இதன் சுரங்கப் பணிகள்தான் முதலில் தொடங்கும். வடசென்னையின் மாதவரத்தில் தொடங்கும் தடம் பெரம்பூர், அயனாவரம் வழியாக கீழ்ப்பாக்கத்திலுள்ள இப்போதைய மெட்ரோ நிலையத்தைச் சந்திக்கும். அங்கிருந்து சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் வழியாக ஓ.எம்.ஆர் சாலையை அடையும். இதுவரைக்கும் சுரங்கப் பாதையாக இருந்த தடம் இங்கிருந்து மேம்பாலப் பாதையாக மேலேறும். சோழிங்கநல்லூர் வழியாக சிப்காட் தொழிற் பேட்டையை அடையும். இதன் மொத்த நீளம் 46 கிலோமீட்டர். 50 நிலையங்கள்.  

 தடம் 4:

மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கத்தில் தொடங்கும். மயிலாப்பூர், நந்தனம், கோடம்பாக்கம் வழியாக வடபழனியை அடையும். அங்கிருந்து மேம்பாலப் பாதையாக மேலேறி ஆற்காடு சாலை வழியாக பூந்தமல்லியை அடையும். மொத்த நீளம் 26 கிலோமீட்டர். 30 நிலையங்கள்.

தடம் 5:

மாதவரத்தில் தொடங்கும். கொளத்தூர், திருமங்கலம் வழியாக ஆழ்வார் திருநகரை அடையும். அங்கிருந்து சற்றுத் திரும்பி போரூர், ஆலந்தூர் வழியாக மடிப்பாக்கம் வரும். தொடர்ந்து மேடவாக்கம் சாலை வழியாக சோழிங்கநல்லூரில் வந்து சேரும். மொத்த நீளம் 47 கிலோமீட்டர். 47 நிலையங்கள்.

 ஆக, இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் தடத்தின் மொத்த நீளம் 119 கிலோமீட்டர். மொத்த நிலையங்களின் எண்ணிக்கை 127. 

இடைமாற்று நிலையங்கள்! 

இப்போது சேவையாற்றும் சென்னையின் முதல் இரண்டு தடங்களில் இரண்டு நிலையங்கள், அடுத்த இரண்டு தடங்களிலும் (தடம் 3, 4) இடம்பெற்றிருக்கும். அவை, சென்னை சென்ட்ரல், ஆலந்தூர். அதாவது, இந்த இரண்டு நிலையங்களிலும் ஒரு தடத்திலிருந்து இறங்கி இன்னொரு தடத்துக்கு மாறிக்கொள்ள முடியும்.

இப்படியான இடைமாற்று நிலையங்கள் இனிக் கட்டப்படவிருக்கும் 3, 4, 5-வது தடங்களிலும் அமைக்கப்படும். மாதவரம், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், நந்தனம், வடபழனி, போரூர் ஆகியவை புதிய இடைமாற்று நிலையங்கள். ஒரு தடத்திலிருந்து மற்றொரு தடத்துக்கும், மற்றதிலிருந்து பிறிதொன்றுக்கும் மாறிக்கொள்ளலாம். இதனால் நகரின் எந்த மூலையிலிருந்தாலும், அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து நகரின் வேறு எந்த மூலைக்கும் போய்ச் சேர்ந்து விடலாம். இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டம் நிறைவடையும்போது சென்னை மக்கள் பரவலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள்.

வரைபட மேசையில் வண்டலூர் திட்டம்!

இதைத் தவிர இன்னொரு திட்டமும் வரைபட மேசையிலிருந்து விரைவில் கீழிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய வெளியூர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் தயாராகிவருகிறது. அந்த நிலையத்துக்குள்ளேயே ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும். இது வண்டலூர், தாம்பரம் வழியாக விமான நிலையத்தின் முதல் தடத்தில் சேர்ந்துகொள்ளும். வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் மெட்ரோ ரயில் மூலமாகவே நகரின் எந்தப் பகுதிக்கும் சென்று விடலாம். 

சென்னை மெட்ரோ ரயில், மக்கள் செறிவாக வசிக்கும் வடசென்னைப் பகுதிகளை யும் தொழிலும், வணிகமும், கல்வியும் மிகுந்த மத்திய மற்றும் தென் சென்னைப் பகுதிகளையும் இணைக்கும். ஆகவே, பணியிடமும் வாழிடமும் அருகருகே அமைய வேண்டியதில்லை. ஒருவிதத்தில் மெட்ரோ ரயிலானது, அனைத்துக் காரணிகளிலும் வளர்ச்சியைச் சமன் செய்யும் கோலாகவும் அமையும்.

உலகெங்கும் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. இவற்றில் சில நூறாண்டுப் பழைமை மிக்கவை. பல 50 ஆண்டுகளை நெருங்குபவை. இவற்றுடன் ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோவின் பயணம் தாமதமாகத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இரண்டாம் கட்டத்தின் சேவையை மக்கள் அனுபவிக்கும்போது, சென்னை நகரம் உலக மெட்ரோ வரைபடத்தில் குறிப்பிடத்தக்க நகரமாக மாறியிருக்கும்!

‘அதுதான் ஒட்டுமொத்தமாக மெட்ரோவே முடங்கிக் கிடக்கிறதே... இந்த நேரத்தில் எங்கள் ஏக்கத்தை ஏன கிளறிவிடுகிறீர்கள்?’ என்கிற குரல்கள் கேட்கின்றன. மெட்ரோ ரயில், கனவாகப் பூத்து... நனவான ஒன்று. இடையில் கொரோனா காரணமாக சிறு முடக்கம் ஏற்பட்டுள்ளது. சீக்கிரமே அவை மீண்டு வேகமெடுத்து ஓடத்தொடங்கும். அதேபோலவே, வரைபடத்திலிருக்கும் 3,4,5 உள்ளிட்ட திட்டங்களும் விரைவில் நனவாகும்... காத்திருப்போம்!

கேடில்லா சுரங்கப் பாதைகள் 

`உலகின் முதல் மெட்ரோ ரயில் டியூப்’ என்று அழைக்கப்படுகிறது லண்டன் மெட்ரோ. 1863-ல் தொடங்கிய ஓட்டம் இன்றும் தொடர்கிறது. பாரிஸ் (1900), நியூயார்க் (1904), டோக்கியோ (1927), மாஸ்கோ (1935) ஆகிய மெட்ரோ ரயில்களும் பழைமையானவை. ஆனாலும், 1960-களுக்குப் பிறகுதான் மெட்ரோ கட்டுமானம் சூடுபிடித்தது. பீஜிங் (1969), ஹாங்காங் (1970), சிங்கப்பூர் (1987), ஷாங்காய் (1993) என மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து உருவாகின.

இந்த நகரங்களின் மெட்ரோ தடங்கள் மிகுதியும் சுரங்கப் பாதைகளால் ஆனவை. இந்தப் புகழ்பெற்ற நகரங்கள் ஏன் செலவு பிடிக்கிற சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தன? ஏனெனில், சுரங்க மெட்ரோ நகரின் கட்டமைப்புக்கு ஊறு விளைவிப்பதில்லை. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குத் தடையாக இருப்பதில்லை. சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதில்லை. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதில்லை. இதனால்தான் சென்னை மெட்ரோவின் முதல்கட்டம் மட்டுமல்ல, அதன் இரண்டாம் கட்டத்திலும் கணிசமாக சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.