Published:Updated:

சென்னை: இறப்பிலும் பிரியாத தம்பதி! - ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்

மரணம்
மரணம் ( Representational image )

சென்னையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மனைவி இருந்த சோகத்தில் கணவர் உயிரிழந்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்தார்.

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (63). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரின் மனைவி ராஜலட்சுமி (55). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ராஜலட்சுமியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனால் அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் மனவருத்தத்தில் தியாகராஜன் இருந்திருக்கிறார்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

வீட்டில் யாரும் இல்லாததால் தனிமையில் தியாகராஜன் இருந்திருக்கிறார். இந்தச்சமயத்தில் வீட்டுக்கு குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அப்போது தியாகராஜன் மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து கிடந்திருக்கிறார். அதனால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு தியாகராஜனுக்கு மராடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். அதனால் தியாகராஜனின் சடலத்தை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். அவருக்கான இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தியாகராஜன் உயிரிழந்தச் செய்தியை மனைவி ராஜலட்சுமிக்கு கூறினால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என குடும்பத்தினர் கருதினர். அதனால் தந்தையை இழந்த சோகத்தை அவரின் மகளும் மகனும் அம்மாவிடம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில் திடீரென ராஜலட்சுமியின் உடல் நலம் மோசமாகியிருக்கிறது. தியாகராஜன் இறந்த சில மணி நேரத்திலேயே ராஜலட்சுமியும் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

 மரணம்
மரணம்

இந்தத் தகவலைக் கேள்விபட்ட தியாகராஜனின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். ஒரே நாளில் தாயையும் தந்தையையும் இழந்த அவரின் மகன், மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் குடும்பத்தினரும் உறவினர்களும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களும் தவித்தனர். இதையடுத்து ராஜலட்சுமியின் சடலத்தையும் குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கணவனும் மனைவியும் அடுத்தடுத்து இறந்தத் தகவல் திருவொற்றியூரில் பெரும் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு