Published:Updated:

சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!

‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்
பிரீமியம் ஸ்டோரி
‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்

கடைக்குள் எப்படிச் செல்லலாம் என்பதையும் பலமுறை கள ஆய்வு செய்த ஆனந்த், அந்தக் கடையின் பின்பகுதியிலுள்ள 20 அடி உயரமுள்ள சுவரில் ஏறி உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறான்.

சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!

கடைக்குள் எப்படிச் செல்லலாம் என்பதையும் பலமுறை கள ஆய்வு செய்த ஆனந்த், அந்தக் கடையின் பின்பகுதியிலுள்ள 20 அடி உயரமுள்ள சுவரில் ஏறி உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறான்.

Published:Updated:
‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்
பிரீமியம் ஸ்டோரி
‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்

சென்னை பாரிமுனை, ரத்தன் பஜாரில் பொம்மைக்கடை, துணிக்கடை என அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடந்த 2-ம் தேதி கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதிகாலையில் நடந்த இந்தக் கொள்ளையில் மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனது. கடைக் கதவையோ, பூட்டையோ உடைத்து உள்ளே போகாமல், கொள்ளையடித்துவிட்டு உள்ளிருந்து பூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய கொள்ளையனை பூக்கடை போலீஸார் தேடிவந்தார்கள். இரண்டு வாரத் தேடுதலுக்குப் பிறகு அவனைப் பிடித்துவிட்டாலும், அவனது அசாத்திய ‘திறமை’ பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது போலீஸ்!

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “கொள்ளை நடந்த கடைகளிலிருந்த சிசிடிவி-க்கள் செயல்படவில்லை. அதைத் தெரிந்துகொண்டுதான் அந்தக் கடையையே தேர்ந்தெடுத்திருக்கிறான் கொள்ளையன். அதனால் உடனடியாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ரத்தன் பஜார் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஆளரவமற்ற அதிகாலையில் பேன்ட், சர்ட், தலையில் வெள்ளைத் தொப்பி, முதுகில் பெரிய பேக் அணிந்த ஒருவன் சாலையில் வேக வேகமாக நடந்துசெல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவனை சிசிடிவி மூலம் கண்காணித்தபோது ஆட்டோவில் ஏறிச்செல்வது தெரிந்தது. அடுத்தடுத்த கடைகள், சிக்னல்களில் இருந்த கேமரா பதிகளைக்கொண்டு, அந்த ஆட்டோவைத் தொடர்ந்து கண்காணித்தபோது அது திருவல்லிக்கேணி வரை சென்றதைக் கண்டறிந்தோம்.

சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!

திருவல்லிக்கேணியில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவன், சிவப்பு நிற ஸைலோ காரில் ஏறிச் சென்றான். ஆட்டோ, கார் பதிவு எண்களைக்கொண்டு விசாரித்தபோது, ஆட்டோ டிரைவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்தது. கார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடித்தோம். அந்த ஆனந்த், நான்கு மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான். அவன்மீது பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதியானது. இதையடுத்து ஆனந்த்தான் இந்த இரண்டு கொள்ளைகளிலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின்பேரில் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினோம்.

காரைப் பிடித்தால், ஆனந்த் தற்போது இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று சிசிடிவி பதிவுகள் மூலம் தேடினோம். சென்னையிலிருந்து மதுரையை நோக்கி கார் சென்றிருப்பது, டோல்கேட் சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதற்கிடையே கொள்ளையடிப்பதற்கு முன்பு, ஆனந்த் சென்னையில் சில லாட்ஜுகளில் தங்கியிருந்த தகவலும் கிடைத்தது. அங்கே அவன் கொடுத்திருந்த செல்போன் நம்பரின் சிக்னலையும் ஆய்வு செய்தோம். மதுரை, தஞ்சாவூர் பகுதிக்குச் சென்ற ஆனந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கிருந்து பெங்களூரு நோக்கிச் சென்றிருப்பதைக் கண்டறிந்தோம். போலீஸாரைக் குழப்பவே அவன் முதலில் மதுரையை நோக்கிப் போயிருக்கிறான்.

சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!
சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!

இதையடுத்து பெங்களூருக்கே சென்று ஆனந்த்தைக் கைதுசெய்து விசாரணைக்காக பூக்கடை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தோம். துணை கமிஷனர் மகேஸ்வரன் தலைமையிலான போலீஸார் அவனிடம் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கைவரிசைகாட்டிய ஆனந்த் முதன்முறையாக, சென்னையில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதற்காக 15 நாள்களுக்கு முன்பே சென்னைக்கு வந்த அவன், முக்கியமான வணிக நிறுவனங்களை நோட்டமிட்டு, பூக்கடை ரத்தன் பஜாரில் இருக்கும் இந்தத் துணிக்கடை, பொம்மைக்கடைகளைத் தேர்வுசெய்திருக்கிறான்.

கடைக்குள் எப்படிச் செல்லலாம் என்பதையும் பலமுறை கள ஆய்வு செய்த ஆனந்த், அந்தக் கடையின் பின்பகுதியிலுள்ள 20 அடி உயரமுள்ள சுவரில் ஏறி உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறான். வழக்கமாக எந்தக் கொள்ளையரும் இந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டார்கள். ஆனால், ஆனந்துக்கு எவ்வளவு உயரமான கட்டடம் என்றாலும் அதில் ‘ஸ்பைடர் மேன்’ போல எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஏறிச் செல்லும் அசாத்திய திறமை இருக்கிறது. அதற்காக விரல்நுனியில் அணியும் கிளிப் போன்ற சிறு கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறான். 20 அடிச் சுவரில் செங்குத்தாக ஏறி, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்தவன், கொள்ளையடித்த பிறகு முன்பக்க பூட்டை உடைத்துக்கொண்டு தப்பியிருக்கிறான்” என்றனர்.

சினிமா தயாரிப்பு... கொலை வழக்கு... சென்னையை மிரட்ட வந்த ‘ஸ்பைடர்மேன்’ கொள்ளையன்!

கைதான ஆனந்த் பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவன். வெல்டிங் வேலை பார்த்தவன். ஆனால் சினிமாவில் பணியாற்றிய அனுபவத்தால், ‘தூம்’ படத்தில் வரும் கொள்ளைக் காட்சிகள்போல, நிறைய தொழில்நுட்பத்தை கொள்ளைக்குப் பயன்படுத்தியிருக்கிறான். இது பற்றி நம்மிடம் பேசிய பூக்கடை உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, “ஆனந்தின் மனைவி பெங்களூரில் மளிகைக்கடை நடத்திவந்திருக்கிறார். அப்போது அவருக்கும் வேறொருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த ஆனந்த், மனைவியின் ஆண் நண்பரைக் கூலிப்படையை ஏவி 2019-ல் கொலை செய்திருக்கிறான். அந்த வழக்கில் சிறையிலும் இருந்திருக்கிறான். அந்த வழக்கிலிருந்து தப்பிக்கவும், கூலிப்படையினரை ஜாமீனில் எடுக்கவும் நிறைய பணம் தேவைப்பட்டிருக்கிறது. இது போதாது என்று கன்னட மொழியில் சினிமா படம் ஒன்றைத் தயாரித்துவந்திருக்கிறான். அதுவும் பாதியில் நிற்கிறது. அதற்கும் பணம் தேவை என்பதாலேயே தொடர் கொள்ளையில் ஈடுபடும் பெரிய திட்டத்துடன் சென்னைக்கு வந்திருக்கிறான். அவனிடமிருந்து 3,99,500 ரூபாய், மூன்று செல்போன்கள், ஸைலோ கார், கையுறைகள், முகமூடி, பூட்டை உடைக்கப் பயன்படுத்திய இரும்புக் கருவிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார்.

சபாஷ் போலீஸ்!