Published:Updated:

விமான நிலையமும் சிறையும் யாருக்கு? - சென்னை காக்கிகளின் முக்கோண பாலிடிக்ஸ்!

தமிழகத்தில் வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு ஆகிய மண்டலங்களுக்கு நான்கு ஐ.ஜி-க்கள் உள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் 200 முதல் 250 காவல் நிலையங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

பிரீமியம் ஸ்டோரி

சென்னை பெருநகர காவல்துறைக்கு தினசரி சவால்களாக இருப்பவை மூன்று விஷயங்கள்... ஒன்று, வெளிநாடுகள் மற்றும் தலைநகர் டெல்லியிலிருந்து வரும் வி.வி.ஐ.பி-களை சென்னை விமான நிலையத்திலிருந்து பத்திரமாக அழைத்துவந்து, திருப்பி அனுப்புவது. இரண்டு, நீதிமன்றங்களுக்கும் புழல் சிறைக்கும் கைதிகளை பாதுகாப்பாகக் கையாள்வது. மூன்று, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், அரசு மருத்துவமனைகள், துறைமுகம், சட்டமன்றம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இல்லங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள். மேற்கண்ட வேலைப்பளுவிலிருந்து அழுத்தங்களைக் குறைப்பதற்காகத்தான் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், தலைவலி போய் திருகுவலி வந்துவிட்டதாகப் புலம்புகிறார்கள் காவல்துறையினர்!

விமான நிலையமும் சிறையும் யாருக்கு? - சென்னை காக்கிகளின் முக்கோண பாலிடிக்ஸ்!

சமீபத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து ஆவடி, தாம்பரம் எனக் கூடுதலாக இரண்டு புதிய ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆவடியின் புதிய ஆணையராக சந்திப் ராய் ரத்தோர், தாம்பரத்தின் புதிய ஆணையராக ரவி ஆகியோர் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில்தான், “வேலைப்பளு உள்ளிட்ட அழுத்தங்கள் குறையவில்லை; மாறாக நடைமுறைச் சிக்கல்கள் அதிகரித்துள்ளன” என்றபடியே பிரச்னைகளை நம்மிடம் விவரித்தார்கள் காவல்துறையினர்...

“தமிழகத்தில் வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு ஆகிய மண்டலங்களுக்கு நான்கு ஐ.ஜி-க்கள் உள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் 200 முதல் 250 காவல் நிலையங்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. மண்டலங்களில் இவ்வளவு காவல் நிலையங்கள் இருப்பதால், சட்டம் - ஒழுங்கைக் கவனிக்க இரண்டு மண்டலங்களுக்கு ஒரு கூடுதல் டி.ஜி.பி-யை நியமிக்கலாம் என்கிற திட்டம் ஏற்கெனவே பரிசீலனையில் இருந்தது. ஆனால், அதைச் செய்யவில்லை... இன்னொரு பக்கம், ஐ.ஜி அந்தஸ்திலேயே 250 காவல் நிலையங்கள் இருக்கும்போது, கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்திலுள்ள சந்தீப் ராய் ரத்தோரையும், ரவியையும் வெறும் 20, 25 காவல் நிலையங்களை கவனிக்கும் வகையில் கமிஷனர்களாக நியமித்திருப்பது உளவியல்ரீதியாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய எல்லை பிரிப்புகளின்படி சென்னை கமிஷனரிடம் இருந்த 137 காவல் நிலையங்களில் 104 காவல் நிலையங்கள் அவரிடமே இருக்கும். மீதியுள்ள 33 காவல் நிலையங்களைப் பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில காவல் நிலையங்களையும் சேர்த்து தாம்பரம் கமிஷனருக்கு 20 காவல் நிலையங்களும், ஆவடி கமிஷனருக்கு 25 காவல் நிலையங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இப்படி எல்லை பிரிக்கும்போது சென்னை ஆணையகரத்துக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை ஆராயவே இல்லை.

விமான நிலையமும் சிறையும் யாருக்கு? - சென்னை காக்கிகளின் முக்கோண பாலிடிக்ஸ்!

தற்போதைய புதிய அறிவிப்பின்படி மீனம்பாக்கம் விமான நிலையமும், புழல் சிறையும் சென்னை கமிஷனர் கட்டுப்பாட்டில் வருகின்றன. இவற்றில் விமான நிலையம் தாம்பரம் அருகே இருப்பதால், தாம்பரம் கமிஷனரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் சரியாக இருக்கும். அங்கு ஓர் அவசர பிரச்னை என்றால், தாம்பரத்திலிருந்து 10-15 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்துவிடலாம். ஆனால், சென்னை வேப்பேரியிலிருந்து விமான நிலையத்துக்கு கமிஷனர் வருவதற்கு ஒரு மணி நேரமாகும். புழல் சிறையும் ஆவடி கமிஷனர் ஏரியாவுக்கு அருகில்தான் உள்ளது. சிறை என்பது மிகவும் சென்சிட்டிவ் வாய்ந்த இடம். அங்கு திடீர் கலவரங்கள் ஏற்படலாம்; கைதிகள் தப்பி ஓடலாம். பயங்கரவாதம் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அசம்பாவிதங்கள் நடக்கலாம். இதையெல்லாம் எந்நேரமும் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். ஆனால், ஏதேனும் பிரச்னை என்றால் சென்னை போலீஸ் கமிஷனர் அங்கு செல்லவும் ஒரு மணி நேரமாகும். இன்னொரு பக்கம் 104 காவல் நிலையங்களை நிர்வகிக்க வேண்டிய வேலைப்பளுவுக்கு நடுவே சிறைக்கும் நீதிமன்றங்களுக்கும் கைதிகளைக் கையாள்வது கூடுதல் சிரமங்களைத்தான் உருவாக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால், சென்னை விமான நிலையமும், புழல் சிறையும் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள் சென்னை பெருநகர ஆணையரக அதிகாரிகள். தேவையில்லாத அந்த ஈகோவை தவிர்த்துவிட்டால், நிர்வாகரீதியாகவும் சிறப்பாகச் செயல்பட முடியும்; தேவையில்லாத வேலைப்பளுவும் குளறுபடிகளும் குறையும்” என்றார்கள் விரிவாக!

ஆனால், சென்னை பெருநகர ஆணையரக அதிகாரிகள் சிலரோ, “இது இரண்டு வேலை வைக்கும் விஷயம். விமான நிலையத்திலிருந்து ஒரு வி.ஐ.பி-யை அழைத்துவரும்போது தாம்பரம் போலீஸார் அழைத்துவருவார்கள்; சென்னை எல்லைக்குள் வரும்போது நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இது பாதுகாப்புக் குளறுபடிகளை ஏற்படுத்தும். புழல் சிறை கைதிகள் விவகாரத்திலும் இதே நடைமுறை பிரச்னை ஏற்படும். அதனால்தான் விமான நிலையத்தையும், சிறையையும் சென்னை கமிஷனரின் கட்டுப்பாட்டில் வைத்திருக் கிறார்கள். அதே நடைமுறை தொடர்வதுதான் பாதுகாப்பானது” என்கிறார்கள்.

சைலேந்திரபாபு, சங்கர் ஜிவால், ரவி, சந்தீப்ராய் ரத்தோர்
சைலேந்திரபாபு, சங்கர் ஜிவால், ரவி, சந்தீப்ராய் ரத்தோர்

டி.ஜி.பி சைலேந்திரபாபு தரப்பில் பேசினால், “பலமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தித்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். அனுபவம் மிக்க சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்ட பிறகே எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லை பிரிப்புகள் டி.ஜி.பி அறிக்கையாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் அரசு ஆணையாக வெளியாகவில்லை. ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையரக அதிகாரிகளின் கருத்துகளையும், அவர்கள் சொல்லும் நடைமுறைச் சிக்கல்களையும் பரிசீலித்து, நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்கள்.

மக்கள் மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்புடைய விஷயங்களில் தீர ஆராய்ந்தே முடிவுகளை எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு