Published:Updated:

ஆபரேஷனுக்கு அரசு தடை;காப்பீடு திட்டத்தில் நோயாளி அட்மிட்- ரூ.14 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை!

கோமதி சங்கர், அவரது தாயார் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகம் சிறைப்பிடித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கவுதம் லட்சுமி நாராயணன்
கவுதம் லட்சுமி நாராயணன்

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை செய்ய சென்னைப் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியிடம் ரூ.14 லட்சத்தைக் கட்டணமாக வசூலித்ததுடன், மேலும் 5.5 லட்ச ரூபாய் கேட்டு நோயாளிகளின் உறவினர்களைப் பதறவைத்துள்ளது.

நடந்தது என்ன என்பது குறித்து பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் பெஞ்சமினிடம் பேசினோம். ``தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி சிறப்பு நிதியை ஏழைகளின் சிறப்பு அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருதய மாற்று அறுவை சிகிச்சை பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் கடிதமும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குத் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அண்ணனின் உயிரைக் காப்பாற்ற அவரது சகோதரர் கோமதி சங்கரும் பல இடங்களில் கடன் வாங்கி மருத்துவமனை நிர்வாகத்திடம் பணம் செலுத்தியுள்ளார்.
வழக்கறிஞர் பெஞ்சமின்

இந்தக் கடிதம் திருநெல்வேலி மாவட்டம், பாளையம் கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகனான கவுதம் லட்சுமி நாராயணனுக்கு (40) அனுப்பப்பட்டது. இதையடுத்து, சென்னைப் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் செப்டம்பர் 6-ம் தேதி கவுதமை உறவினர்கள் அனுமதித்தனர். கவுதமை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு இதயம் கிடைக்கும் வரை உயிரைக் காப்பாற்ற பணம் செலவாகும் என்று கூறியுள்ளனர். கடந்த 15-ம் தேதிவரை ரூ.14 லட்சம் வரை கட்டணமாக வசூலித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். அண்ணனின் உயிரைக் காப்பாற்ற அவரது சகோதரர் கோமதி சங்கரும் பல இடங்களில் கடன் வாங்கி மருத்துவமனை நிர்வாகத்திடம் பணம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கோகுல் என்பவர், எங்களது மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சையைச் செய்ய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக கோமதி சங்கரிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோமதி சங்கர், மருத்துவமனையின் உயர் மருத்துவர்களை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம்தான், மருத்துவமனை நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சைக்கு அரசு தடை விதித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

கோமதி சங்கர், அவரது தாயார் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகம் சிறைப்பிடித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட தனியார் மருத்துவமனை மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் பெஞ்சமின்

அதே நேரத்தில் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய ரூ.5.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி சங்கர், என்னால் இனி பணம் திரட்ட முடியாது என்று கூறியிருக்கிறார். இதுவரை கொடுத்துள்ள பணத்தையே நான் கடன் வாங்கித்தான் செலுத்தி உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். கோமதி சங்கர் விசாரித்ததில், கடந்த ஒருவாரத்திற்கு முன்பே இந்த மருத்துவமனைக்கு அரசு சார்பில் இருந்து இதுபோன்ற இருதய மாற்று அறுவை சிகிச்சைக்குத் தற்காலிக தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரியவந்தது. அதை மறைத்து குளோபல் மருத்துவமனை நிர்வாகம் பணம் வசூலித்துள்ளனர்.

இது குறித்து கோமதி சங்கர், சென்னை டிஎம்எஸ்ஸில் உள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்திற்குச் சென்று கூடுதல் இயக்குநர் டாக்டர். செல்வ விநாயத்திடம் நடந்தவற்றைக் கூறி, அதை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளார். நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதனிடையே, கோமதி சங்கர், அவரது தாயார் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகம் சிறைப்பிடித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட தனியார் மருத்துவமனை மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" கூறினார்.

கே.ஒய்.சி மோசடி... பணம் பறிக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை நிர்வாகத்தைப் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர்கள், நிர்வாகத்திடம் பேசிவிட்டு பதில் அளிப்பதாகக் கூறிவிட்டனர். பல மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாம் சார்பில் விளக்கம் அளித்தால் உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.