Published:Updated:

சேரிகளை அகற்றினால்தான் சென்னை சிங்காரம் ஆகுமா?

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

ஏற்கெனவே சென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த 61,432 குடும்பங்களை சென்னைக்கு வெளியே குப்பைகளைப்போலக் கொண்டுபோய்க் கொட்டியிருக்கிறது குடிசைமாற்று வாரியம்

சேரிகளை அகற்றினால்தான் சென்னை சிங்காரம் ஆகுமா?

ஏற்கெனவே சென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த 61,432 குடும்பங்களை சென்னைக்கு வெளியே குப்பைகளைப்போலக் கொண்டுபோய்க் கொட்டியிருக்கிறது குடிசைமாற்று வாரியம்

Published:Updated:
சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை
ஸ்டாலின் அரசின் நூறு நாள் ஆட்சியில் அதிகமும் விமர்சனத்துக்குள்ளானது, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு விவகாரம்தான். சென்னை புளியந்தோப்பு, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் குடியிருப்புப் பிரச்னைகளில் அரசின் முரண்பட்ட செயல்பாடுகளால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

சென்னை, புளியந்தோப்பு கேசவப்பிள்ளை பூங்காவில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட பன்னடுக்குக் குடியிருப்பு பாழ்பட்டுக் கிடப்பதையும், பங்களிப்பாளர் தொகை 1.5 லட்சத்தைக் கட்டமுடியாததால் அங்கு குடியேற வேண்டிய மக்கள் 200 சதுர அடி தகரக்கொட்டகைகளில் தவிப்பதையும் குடிசை மாற்று வாரியத்தை நிர்வகிக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கவனத்துக்குக் கொண்டு சென்றது ஆனந்தவிகடன். அந்தக் குடியிருப்பை ஜூன் 26-ம் தேதியன்று நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் ஆடி மாதத்துக்குள் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்கள். ஆனால் இன்னும் அது நடந்தபாடில்லை.

112.61 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என்றும், லேசாகத் தட்டினாலே உடைந்து உதிரும் அளவுக்குத் தரமற்ற பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டி ருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குடியிருப்பின் தரத்தை ஆய்வுசெய்ய ஐ.ஐ.டி நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது தமிழக அரசு. குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் 93 வீடுகள் அகற்றப்பட்டதும் சர்ச்சையா கியிருக்கிறது. அதில் 91 குடும்பங்களுக்கு புளியந்தோப்பு கேசவப்பிள்ளை பூங்கா குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த 61,432 குடும்பங்களை சென்னைக்கு வெளியே குப்பைகளைப்போலக் கொண்டுபோய்க் கொட்டியிருக்கிறது குடிசைமாற்று வாரியம். மறுகுடியமர்வு செய்து 20 ஆண்டுகளாகியும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூடச் செய்துதரவில்லை அரசு. குடியமர்வை வடிவமைத்த குடிசைமாற்று வாரியம் அம்மக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்த ஏற்பாட்டையும் திட்டத்தில் இணைக்கவில்லை என்பது முதன்மைக் குற்றச்சாட்டு.

1970-கள்வரை சென்னையின் அடையாளமாக இருந்தவை குடிசைப்பகுதிகள்தான். பிற மாவட்டங்களிலிருந்து சாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டும் பிழைப்புத் தேடியும் சென்னை நாடிவந்த மக்கள் நதிக்கரைகள், சுடுகாடு, அரசு அலுவலக காம்பவுண்ட் சுவர் களோரங்களில் குடிசைகள் கட்டித் தங்கினார்கள். தலைமுறை கடந்தும் அவர்கள் நிலை மாறவில்லை. இவ்விதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சென்னைக்குள் இருந்தன.

1971-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க, ‘குடிசை மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம்’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. அச்சட்டத்தின்கீழ், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த வாரியத்துக்கு இராம.அரங்கண்ணல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சேரிகளை அகற்றினால்தான் சென்னை சிங்காரம் ஆகுமா?

தமிழகமெங்கும் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளைக் கணக்கெடுத்து அங்கீகரித்து அந்த மக்களுக்கு மாற்று வீடுகளைக் கட்டித்தருவது இந்த வாரியத்தின் பணி. முதல் அடுக்கு மாடிக் குடியிருப்பு நந்தனத்தில் கட்டப்பட்டது. மயிலாப்பூர் லஸ், விசாலாட்சி தோட்டம், பல்லக்கு மாநகர், தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில், தியாகராய நகர் என குடிசைப்பகுதிகள் இருந்த இடங்களிலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழுப்பப்பட்டன. வீட்டின் அளவு சிறிதாயினும் நகருக்கு மத்தியில் இருந்ததால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லை.

1980களின் பிற்பகுதி வரை குடிசை மாற்று வாரியப் பணிகள் அனைத்தும் மாநில அரசின் நிதி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. அதனால், மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவுக்குள் உலக வங்கியின் ஆதிக்கம் தலைதூக்கியது. பல்வேறு திட்டங்களில் ‘நிதியுதவி’ என்ற பெயரில் உள்நுழைந்தது. நகரங்களின் முகம் மாறத்தொடங்கியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடு களிலும் அது எதிரொலித்தது. அடுக்ககக் குடியிருப்புகளைச் சென்னைக்கு வெளியே உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. சென்னைக்கு வெளியே முதல் குடியிருப்பு, திருவான்மியூரில் கட்டப்பட்டது.

1990களில் விவசாயத்தில் ஏற்பட்ட சரிவு, கிராமியத் தொழில்களின் நசிவு, பொருளாதார மந்த நிலை காரணமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் இடம் பெயர்ந்தார்கள். அதேநேரம் மலிவுவிலையில் கிடைத்த மனித சக்தி, இயற்கை வளங்கள், அரசியல் சூழல் போன்ற காரணங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையைக் குறிவைத்தன. அவர்களை ஈர்க்கும் வகையில், சீர்மிகு சென்னை, அழகுமிகு சென்னை, சென்னையைச் சிங்கப்பூராக்கும் திட்டம், சென்னை-2000 எனப் பல திட்டங்கள் உருவாக்கப் பட்டன. சாலை விரிவாக்கம், மேம்பாலம், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் எனக் காரணங்கள் சொல்லி, குடிசைப்பகுதிகள் அகற்றப்பட்டன. குடிசை மாற்று வாரியம் நகருக்குள் புதிய குடியிருப்புகளை உருவாக்கும் பணியையும் கைவிட்டது.

வனேசா பீட்டர்
வனேசா பீட்டர்

நகருக்குள் வசித்த மக்களை முதன்முதலில் சென்னைக்கு வெளியே அனுப்பியது, 1996-ல். பறக்கும் ரயில் திட்டத்துக்காகக் கலங்கரை விளக்கம் பகுதியில் வசித்த மக்களைப் பள்ளிக்கரணைக்கு இடமாற்றியது அரசு. அங்கு வசித்த 2,200 குடும்பங்களுக்கு தலா 220 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்காகச் சிறிய தொகையும், ஓடுகளும் தரப்பட்டன.

1997-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, கண்ணகி நகர் குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சாந்தோம், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், சைதாப்பேட்டை, பெரம்பூர், ஆயிரம்விளக்கு உட்பட சென்னை முழுவதும் இருந்த 62 குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டார்கள்.

2004-ல் அ.தி.மு.க ஆட்சியில் செம்மஞ்சேரி குடியிருப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. அங்கு சுமார் 20,376 வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள். நாவலூர் ஒரகடம், தண்டையார்பேட்டை, ஆல் இந்திய ரேடியோ நகர், திருமழிசை, அத்திப்பட்டு என சென்னையைச் சுற்றிலும் நகருக்கு வெளியே குடியிருப்புகளை உருவாக்கி, குடிசைவாழ் மக்களைத் தனிமைப்படுத்தியது குடிசை மாற்று வாரியம்.

இசையரசு
இசையரசு

“இவ்வளவு பிரமாண்ட குடியேற்றத் திட்டங்களை அவசரக் கோலத்தில் உருவாக்கிய குடிசை மாற்று வாரியம், அந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பற்றிக் கவலைப்பட வேயில்லை. இத்தனை ஆயிரம் மக்களுக்கு ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரே ஒரு சமூக நலக்கூடம்... அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காமல் அந்த மக்கள் தவிக்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துக்காட்டி மக்கள் இடம்பெயர மறுத்தால் ‘குண்டாஸ் போடுவோம்’, ‘வீடு ஒதுக்க மாட்டோம்’ என்று கூறி, காவல்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள். அரசியல்வாதிகளும் இந்த மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே கருதுகிறார்கள். குடிசை இல்லா மாநிலம்-2023 திட்டம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இப்போதைய அரசும் பட்ஜெட்டில் குடிசை இல்லாத் தமிழகம் திட்டத்தை அறிவித்துள்ளது. குடிசை மாற்று வாரியம் கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது...” என்று வருந்துகிறார் செயற்பாட்டாளர் இசையரசு.

சென்னையில் எந்தக் குற்றம் நடந்தாலும் காவல்துறை போய் நிற்பது இந்தக் குடியேற்றப் பகுதிகளில்தான். காவல்துறையைப் பொறுத்தவரை சென்னையின் அங்கீகரிக்கப்பட்ட குற்றப்பகுதிகள் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர். குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டு உருவாக்கியவை இவை.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதற்காக உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் இப்போது வந்து நிற்பது, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முகவராக. மாநில சுயாட்சி பேசுகிற கட்சி இப்போது ஆட்சியிலிருக்கிறது. இந்தியாவில் யாருமே யோசிக்காத தருணத்தில் குடிசைவாழ் மக்களைப்பற்றிக் கவலைப்பட்ட தமிழகம், இப்போது மத்திய அரசு வழங்கும் சொற்ப நிதிக்காக அவர்களின் விதிமுறைகளுக்கு இணங்கி, பயனாளிகளிடம் பணம் கேட்பது முரண்.

இதுவரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தியது மாறி, சென்னைக்குள்ளேயே தி.மு.க அரசு குடியமர்த்துவது ஆறுதல். அதேநேரத்தில் சென்னை புளியந்தோப்பு கேசவப் பிள்ளை பூங்காவில் என்றேனும் வீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தகரக் கொட்டகையில் எலிக்கடியிலும் கொசுக்கடியிலும் தவித்த மக்களிடம் இப்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டப்படி பயனாளர் பங்களிப்பாக 1.5 லட்சம் தரவேண்டும், பராமரிப்புத் தொகையாக மாதம் 700 ரூபாய் தரவேண்டும் என்கிறது குடிசை மாற்று வாரியம். அன்றாடம் காய்ச்சிகளாக அந்த எளிய மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு 9 அடுக்குகளாகக் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு தட்டினால் சிதறிவிழும் வகையில் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அருகில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளும் தரமற்றதாக இருக்கிறது என்கிறார்கள்.

“குடிசை மாற்று வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பயனாளிகள் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்கிறது இப்போதைய அரசு. தேர்வு முறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. உள்ளூர் கட்சிக்காரர்களின் தலையீட்டால் ஒதுக்கீட்டில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்கிறார் செயற்பாட்டாளர் தேவநேயன்.

தேவநேயன்
தேவநேயன்

“நிலத்தில் தனித்தனியே இருந்த குடிசைகளை அகற்றிவிட்டு பன்னடுக்குக் குடியிருப்பு என்ற பெயரில் அம்மக்களின் நில உரிமையைப் பறிக்கிறது குடிசை மாற்று வாரியம். கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வீடு, நிலம், படிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் நகரத்தில், குடிசை மக்களுக்கு வீட்டை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுகிறது அரசு. வீட்டைக் கட்டிக் கொடுத்தால் சமூக முன்னேற்றம் வந்துவிடுமா? சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு என எல்லா வற்றையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். இந்த மக்களைத் தனிமைப்படுத்தாமல் சமூகத்தோடு இணைந்து வாழச் செய்ய வேண்டும்” என்கிறார் செயற்பாட்டாளர் வனேசா பீட்டர்.

இதுபற்றிப் பேச குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். எவரும் பேச முன்வரவில்லை. குடிசைகளை மாற்றுவது நல்லநோக்கம்தான். ஆனால் அது குடிசைவாழ் மக்களை ஏமாற்றுவதாக ஆகிவிடக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism