Published:Updated:

`சென்னைக்கு நாளையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர்!’ -ஜோலார்பேட்டையில் சோதனை ஓட்டம்

ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இன்று இரவுக்குள் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு நாளை முதல் தண்ணீர் கொண்டுசெல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுசெல்வதற்காகத் தமிழக அரசு ரூ.65 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இதற்கான பணிகள் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்தனர். 

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து சுண்ணாம்புக்காளை வழியாக பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரையில் மூன்றரை கிலோ மீட்டருக்கு ராட்சத பைப் லைன் இணைக்கப்பட்டு 99 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.

இன்று இரவுக்குள் 100 சதவிகித பணிகளை முடிப்பதற்கான ஆயத்த வேலை போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. உடனடியாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு நாளை முதல் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

50 வேகன்கள் கொண்ட ரயில்
50 வேகன்கள் கொண்ட ரயில்

தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் நான்கு தவணைகளாக சென்னைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக தலா 50 வேகன்கள் கொண்ட இரண்டு ரயில்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஒரு வேகனில் 55,000 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். அப்படியெனில், ஒரு நடைக்கு ஒரு ரயிலில் இரண்டரை மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்துச் செல்லலாம். 

இதற்காக ரயில்வேக்கு தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாயைக் கட்டணமாக செலுத்துகிறது. ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கம் செல்ல ஒரு லிட்டருக்கு 34 பைசா என்று செலவிட்டு ஒரு நடைக்கு 8.6 லட்சம் ரூபாயைக் கட்டணமாக கொடுக்கிறது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம்

30 நாள்களுக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல ரயில்வேக்கு ரூ.7.74 கோடியைக் கட்டணமாக தமிழக அரசு செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.