Published:Updated:

அன்று பசுமைச்சாலைத் திட்டம்... இன்று விரைவுச்சாலைத் திட்டம்! - புதிய பெயரில் மீண்டும் எட்டுவழி சாலை!

விரைவுச்சாலைத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விரைவுச்சாலைத் திட்டம்

என்ன செய்யப்போகிறது தி.மு.க அரசு?

அன்று பசுமைச்சாலைத் திட்டம்... இன்று விரைவுச்சாலைத் திட்டம்! - புதிய பெயரில் மீண்டும் எட்டுவழி சாலை!

என்ன செய்யப்போகிறது தி.மு.க அரசு?

Published:Updated:
விரைவுச்சாலைத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விரைவுச்சாலைத் திட்டம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்த திட்டங்களில் ஒன்று, ‘சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டம்.’ ஆனால், தற்போது தி.மு.க ஆட்சியில் அதே திட்டத்தை ‘சென்னை - சேலம் புதிய விரைவுச் சாலைத் திட்டம்’ என்கிற பெயரில் செயல்படுத்துவதில் மும்முரமாகியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதையடுத்து, கடந்த ஆட்சியின்போது தி.மு.க நடத்திய போராட்டங்களும், ஸ்டாலின் விடுத்த எதிர்ப்பு அறிக்கைகளும் நாடகமா என்று விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளன!

சென்னை - சேலம் இடையே ஏற்கெனவே மூன்று சாலைகள் இருக்கும் நிலையில், கடந்த 2018-ல் சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அப்போதைய அ.தி.மு.க அரசும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்ற நோக்கில், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது. இந்தத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளான சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அன்று பசுமைச்சாலைத் திட்டம்... இன்று விரைவுச்சாலைத் திட்டம்! - புதிய பெயரில் மீண்டும் எட்டுவழி சாலை!

பா.ம.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இந்தத் திட்டத்தை தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்குத் தடைவிதித்து 2019-ல் தீர்ப்பு அளித்தது. ஆனால், மேல்முறையீட்டில் இந்தத் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தற்போது இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைகளும் அதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

“நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!” -
தருமபுரி வட்டாட்சியர் கடிதம்...


2021, டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்கள் குறைதீர்ப்பு சிறப்புக் கூட்டம் தருமபுரியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘தருமபுரி மாவட்டத்தில் எட்டுவழிச் சாலைக்கான பணிகள் நடைபெறுகின்றனவோ என்ற அச்சம் நிலவுகிறது; அந்தத் திட்டத்துக்காக எங்கள் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது’ என்று மனு அளித்தனர். அந்த மனுவுக்கு டிசம்பர் 21-ம் தேதி பதில் கடிதம் அனுப்பிய தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் வ.முகுந்தன், `தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டங்களில் எட்டுவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு, அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், `சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை பணிகளைத் தொடங்குவதற்கு முதற்கட்டமாக பீகார் மாநிலம், தன்பாத் ஐஐடி வல்லுநர் குழுவைக்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. அடுத்தகட்டமாக கேரள அரசின் கிட்கோ நிறுவனம் மூலம் சமூக, பொருளாதாரத் தாக்கம் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. விரைவில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தவும், தமிழக அரசிடம் அனுமதி கேட்கவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது’ என்று அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி, விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின.

அன்று பசுமைச்சாலைத் திட்டம்... இன்று விரைவுச்சாலைத் திட்டம்! - புதிய பெயரில் மீண்டும் எட்டுவழி சாலை!

இந்த நிலையில் ராமதாஸ், சீமான் ஆகியோர், `எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் தி.மு.க அரசு இப்போது என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது... மக்களின் பக்கம் நிற்கப்போகிறதா, மத்திய அரசின் பக்கம் நிற்கப்போகிறதா?’ என்று கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பல நாள்கள் கழித்து வாய் திறந்த தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை; மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில், அதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர் ஆணைப்படி பணி நடைபெறும்” என்று மழுப்பினார்.

நிதின் கட்கரியின் குற்றச்சாட்டும்... ஸ்டாலினின் கிரீன் சிக்னலும்...

கடந்த ஜனவரி 21-ம் தேதி, ‘பிசினஸ்லைன்’ பத்திரிகை நடத்திய ‘Countdown To Budget - 2022’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``பணத்தைப் பற்றிக் கவலையில்லை, தமிழக முதல்வர் ஒத்துழைத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் தயார். தமிழகத்தின் சாலைக் கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிப்பேன்; ஆனால், தமிழகத்தில் சாலைகள் அமைப்பதில் பெரும் பிரச்னைகளை நாங்கள் சந்தித்துவருகிறோம்” என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு விளக்கமளித்து ஜனவரி 24-ம் தேதி நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், `எங்களைப் போன்ற தொழில்மயமான மாநிலத்துக்கு, சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்துள்ளோம். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். திட்டங்களைச் செயல்படுத்துவதில் தற்போதுள்ள பிரச்னைகள் பல ஆண்டுகளாக நிலவிவருபவை. அவை தொடர்பாக ஆராய்ந்து தீர்ப்பதற்காக தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகின்றன. அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எனது அரசு, முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு கிரீன் சிக்னல் கொடுத்தார். தொடர்ந்து, ஜனவரி 30-ம் தேதி விசாகப்பட்டினம் ஐ.ஐ.எம்-ல் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, ``வரும் 2025-ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும். முக்கியமாக, நாடு முழுவதும் 22 பசுமைவழி விரைவுச் சாலைகள் மேம்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.

அன்று பசுமைச்சாலைத் திட்டம்... இன்று விரைவுச்சாலைத் திட்டம்! - புதிய பெயரில் மீண்டும் எட்டுவழி சாலை!

சென்னை கதி சக்தி கூட்டமும்... கப்சிப் ஆன தமிழக அரசும்!

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பாக கடந்த மார்ச் 16-ம் தேதி பிரதமரின் கதி சக்தி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், ``சென்னை - சேலம் விரைவுச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்கவும், தொழில் வளர்ச்சிக்கும் புதிய விரைவுச் சாலை பயன்படும். இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார். தொடர்ந்து, மார்ச் 19-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ``சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார்” என்றார். லேட்டஸ்ட்டாக கடந்த மார்ச் 31-ம் தேதி டெல்லி அறிவாலயம் திறப்புவிழாவுக்குச் சென்ற ஸ்டாலின், நிதின் கட்கரியை சந்தித்து, ‘தமிழகத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இறுதியாக ஏப்ரல் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதின் கட்கரி, “சென்னை - பெங்களூரு, சென்னை - சேலம் இடையிலான இரண்டு சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; 2024-க்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

உண்ணாமலை
உண்ணாமலை
பச்சையப்பன்
பச்சையப்பன்

மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்!

இதையடுத்து, அதிருப்தியடைந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கிராமம்தோறும் கூட்டங்கள் நடத்தி கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் அவர்கள், `சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆட்சியில் தனது நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக வருவாய்த்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது கடும் எதிர்ப்பு தெரிவித்து கைதுசெய்யப்பட்ட சேலம், மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியான உண்ணாமலையிடம் பேசியபோது, ``என் பசங்க, பேரப்புள்ளைங்களுக்கு சொத்துனு சொல்லிக்கிறதுக்கு இது ஒண்ணுதான் இருக்கு. இதையும் எடுத்துக்கிட்டா தெருவுலதான் நிக்கணும். ஏற்கெனவே அதிகாரிங்க வந்தப்போ தடுத்து நிறுத்தினோம். அதனால எங்களைக் கைது பண்ணினாங்க. திரும்பவும் பிரச்னை ஆரம்பிச்சுருக்குன்னு சொல்றாங்க... என் சாவுலதான் இதுக்கு ஒரு முடிவு வரும்னா அதுக்கும் தயாரா இருக்கேன்” என்றார் வைராக்கியத்துடன்! திருவண்ணாமலை மாவட்டம் பெரியகிலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பச்சையப்பன், ``இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடி இதுவரைக்கும் ஒன்பது முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன். இப்பவும் போகத் தயாரா இருக்கேன். விவசாயிகளின் வயிற்றில் அடிக்க நினைச்சதாலதான் முந்தைய அ.தி.மு.க அரசு தோத்துப்போனது. எதிர்க்கட்சியாக இருந்தப்ப எட்டுவழிச் சாலையை அனுமதிக்க மாட்டோம்னு தேர்தல் அறிக்கையில் சொன்ன தி.மு.க இப்போ எதுக்காக நாடகம் ஆடுது?” என்றார் கொந்தளிப்புடன்!

இது குறித்து பதில் கேட்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவைப் பலமுறை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகரைப் பலமுறை தொடர்புகொண்டும், பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் அவர்களும் பதில் கூறத் தயாராக இல்லை.

கடந்த 2020-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ``விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது” என்று முழங்கினார். அதெல்லாம் வெறும் நாடகம்தானா முதலமைச்சர் அவர்களே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism