Published:Updated:

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

சத்தீஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர்

சுற்றுலா - பிரசன்னா சக்ரவர்த்தி ஐ.ஏ.எஸ்.

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

சுற்றுலா - பிரசன்னா சக்ரவர்த்தி ஐ.ஏ.எஸ்.

Published:Updated:
சத்தீஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
சத்தீஸ்கர்

கேரள மாநிலத்தைக் கடவுளின் தேசம் என்பார்கள். ஆனால், கடவுளின் பிறப்பிடமும் இருப்பிடமுமாக இருப்பது சத்தீஸ்கர் மாநிலம். பெயரைக் கேட்டவுடனே, நக்சல் பூமி என்ற எண்ணமே மனதில் தோன்றும். ஆனால், தற்போது வன்முறை குறைந்து மாநிலம் முழுவதும் அமைதி திரும்பிவருகிறது. அமாவாசை முடிந்து பெளர்ணமி அன்று முழுநிலவாகக் காட்சி தரும் நிலவின் அழகுபோல, சத்தீஸ்கரின் உண்மையான அழகு இப்போதுதான் வெளியுலகுக்குத் தெரியவருகிறது. இயற்கையின் பேரெழில் கொட்டிக்கிடக்கும் அதன் அழகை ரசிக்காமல், இத்தனை நாள் தவறவிட்டுவிட்டோமே என ஆதங்கப்படுகிறார்கள் சுற்றுலாப் பிரியர்கள்.

அப்படியென்ன இருக்கிறது சத்தீஸ்கரில்?

மாநிலத்தின் மொத்தப் பரப்பில் 44 சதவிகிதம் காடுகள். மக்கள்தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் தொல்குடிகள். இந்தியாவின் முதல்தரமான சால் மற்றும் தேக்கு மரங்கள் விளையும் பூமி. 3 தேசிய வனவிலங்குச் சரணாலயங்கள்; 13 தேசிய வனவிலங்குப் பூங்காக்கள்; ஒரு பல்லுயிர் வளம் பெருக்கப் பூங்கா; மனிதனால் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மாபெரும் வனவியல் பூங்கா; 5 நதிகள்; சுமார் 40 அருவிகள்; இவற்றில், `இந்தியாவின் நயாகரா' என்று அழைக்கப்படும் `சித்ரகூட்' அருவியும் ஒன்று. இப்படி இயற்கை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட வனதேசம் சத்தீஸ்கர்.

இந்தியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள காரணத்தினால், கிட்டத்தட்ட 7 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது சத்தீஸ்கர். `சேடி வம்சத்து மன்னர்கள் ஆட்சியின் காரணமாக, சேடிஸ்கர் என அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி சத்தீஸ்கர் ஆனது' என்று சிலர் சொல்கிறார்கள். `இந்தப் பிராந்தியத்தில் 36 மண் கோட்டைகள் இருந்த காரணத்தினால், சத்தீஸ் (36 என்று பொருள்) கட் (கோட்டை) என்ற பெயர் வந்தது' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

இந்த மாநிலத்தின் தனித்தன்மையே வனவளம்தான். தொல்குடிகளின் மேலாண்மையில் இருப்பதால், வனங்கள் இன்னும் வனங்களாகவே இருக்கின்றன. சால் மரங்கள் இங்குள்ள வனங்களின் பெருமை. இந்த மரங்களை மனிதர்கள் நடவுசெய்து வளர்க்க முடியாது. அந்த முயற்சி பலமுறை தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால், இயற்கை சால் மரங்களைத் தேவையான இடங்களில் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அதேபோல், இந்தியாவின் முதல்தரமான தேக்குகள் இங்குதான் விளைகின்றன. இங்குள்ள வனங்கள் அற்புதமானவை. கானகத்திற்குள் காணும் இடமெல்லாம் ஆள் உயரத்தில் பிரமாண்ட கறையான் புற்றுகளைப் பார்க்கலாம். அதுவே தனி அழகு. காடுகளில் வளரும் பீடி இலைகள், மூலிகைகள்தான் தொல்குடிகளுக்கான முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது. இயற்கை வளங்களையும் தொல்குடிகளின் வாழ்க்கைமுறையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இயற்கையோடு இணைந்த வளங்களை அளவோடு பயன்படுத்தி, நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதனால்தான் இங்கு கானகம் கானுயிர்களின் காப்பமாக இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான மகாநதி இங்குதான் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டுக்கு எப்படி காவிரி முக்கிய நதியோ, அதேபோல சத்தீஸ்கரின் முக்கிய நதி மகாநதி. கங்கை, நர்மதா, கோதாவரி நதிகளின் வடிகால் பகுதியாகவும் இந்த மாநிலம் இருக்கிறது.

சித்ரகூட் இந்தியாவின் நயாகரா!

இந்தியாவின் மிக நீளமான அருவியான சித்ரகூட் இங்குதான் இருக்கிறது. அருவிகள் என்றாலே அழகுதான். ஆனால், சித்ரகூட் பேரழகு கொண்ட ராட்சத அருவி. அதனைப் பார்த்து வியந்துபோகாத விழிகளே இருக்க முடியாது. அவ்வளவு அழகு. சுமார் 980 அடி அகலம், 300 மீட்டர் நீளம், 98 அடி உயரம் கொண்ட இந்த அருவி பிரமாண்டத்தின் உச்சம். பஸ்தர் மாவட்டத்தில் கோதாவரியின் கிளை நதியான இந்திராவதியில் மிக ரம்மியமான சூழலில் இந்த அருவி அமைந்துள்ளது. பருவமழைக் காலத்தில் பேரிரைச்சலுடன் அருவி கொட்டும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அத்தனை ரம்மியமாக இருக்கும்.

பருவ மழைக்காலம் முடிந்தவுடன் ஆறேழு பகுதிகளாகப் பிரிந்து, தனித்தனியே நீர் கொட்டும். அப்போது அங்கு உருவாகும் வானவில் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். `வாருங்கள் மானிடரே...என் எழிலைப் பாருங்கள்' என கர்வத்தோடு பல்லாண்டுக் காலமாக மனிதர்களை அழைத்துக்கொண்டே இருக்கிறது சித்ரகூட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

அருவியின் பேரழகை மக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. பசுமைச் சுற்றுலா (e-co Tourist) மையமாக இந்தப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் என ஒரு முழுமையான சுற்றுலா மையமாக மாற்றியிருக்கிறார்கள்.

ராய்ப்பூரிலிருந்து 300 கி.மீ, விசாகப்பட்டினத்திலிருந்து 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி. இந்த அருவியைச் சுற்றிப் பல்வேறு அருவிகளும், தேசியப் பூங்காக்களும் இருக்கின்றன. செப்டம்பர் முதல் மார்ச் வரை, இதை ரசிப்பதற்கு ஏற்ற காலம். ராய்ப்பூரிலிருந்து தினசரி விமான சேவையும், விசாகப்பட்டினத்திலிருந்து தினசரி ரயில் சேவையும் பஸ்தர் மாவட்டத்துக்கு உண்டு.

பஸ்தர் தசரா

இயற்கை, வனவிலங்கு ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய பகுதி, மாநிலத்தின் தெற்குப் பகுதியான பஸ்தர். குடும்ப சார் குகைகள், காங்கேயர் வேலி தேசியப் பூங்கா, நாராயணன் பால் கோயில் மற்றும் காவல் தெய்வமான தந்தேஸ்வரி அம்மன் கோயில் ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். இத்தனை இடங்கள் இருந்தாலும் உலகத்தின் கவனத்தை அதிகம் கவர்வது பஸ்தரில் நடக்கும் தசரா திருவிழாதான். தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டினர் வருவதுபோல, தசரா திருவிழாவைக் காண மற்ற மாநிலத்தினர், வெளிநாட்டினர் அதிக அளவு வருகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தின் முக்கியமான பண்டிகை தசராதான். உலகிலேயே மிக அதிக நாள்கள் கொண்டாடப்படுவதும் இங்கேதான்.

நவராத்திரி முடிந்து, தீமையை நன்மை வென்றதன் குறியீடாக ராவணனை எரிப்பது வடமாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை. ஆனால், பஸ்தர் தசரா முழுக்க முழுக்க காவல் தெய்வமான தந்தேஸ்வரி அம்மனைப் போற்றும் சடங்காகவே கொண்டாடப்படுகிறது. ராவணனை எரிக்கும் சடங்கு இங்கு நடக்காது. தங்கள் காவல் தெய்வத்தை அரண்மனைக்கு அழைத்துவந்து பாராட்டி, சீராட்டிக் கொண்டாடும் விழா. இதில் அதிக கவனம் ஈர்ப்பவை இரண்டு தேர்கள்தான். இரண்டு தேர் வடிவமைத்து, அலங்கரித்த அம்மனை வழிபடும் நிகழ்ச்சியாக இருக்கும்.

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

இரண்டு தேர்களில் ஒவ்வொரு வருடமும் ஒரு தேர் மட்டுமே புதிதாகச் செய்யப்படும். அந்தத் தேர் செய்வதற்கான கட்டையை அறுக்கும் தேதியிலிருந்து தொடங்குகிறது திருவிழா. அன்று முதல் அடுத்த 75 நாள்கள் கொண்டாட்டம்தான். அதில் முக்கியமான கொண்டாட்டங்கள் 16 நாள்கள் நடைபெறும். காகதிய மன்னர் பரம்பரையினரால் 1454-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பண்டிகை, கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாகச் சடங்குகள் மாறாமல் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தத் திருவிழாவில் 120 குழு, தொல்குடிகள் பஸ்தரில் இணைவார்கள். தேர் செய்யக் கட்டை செய்வது, வடம், கயிறு, மண்பாண்டங்கள், அலங்காரம் என ஒவ்வொரு பிரிவினரும் ஒரு வேலையைப் பிரித்துக்கொண்டு செய்வார்கள். வேலை முடித்து ஒரு குறிப்பிட்ட நாளில் ஜக்தல்பூர் நகரத்தில்கூடி, திருவிழாப் பணியைச் சிறப்பாக நடத்தி முடிப்பார்கள்.

சுமார் 80 தொல்குடிகளின் குழுக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிகலன் மற்றும் குல தேவதைகளின் கூடை, அலங்கரிக்கப்பட்ட கட்டை அல்லது தலைக்கவசம் ஆகியவற்றுடன் விழாவில் கலந்துகொள்வார்கள். நகரத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவற்றை வைத்துப் பூஜை செய்து, தசரா அன்று ஒன்றுகூடித் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசிக்கும் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருக்கும். நகரமே அன்று வண்ணமயமாகக் காட்சியளிக்கும்.

பஸ்தரிலிருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள கோயிலிலிருந்து தந்தேஸ்வரி அம்மனை அழைத்துக்கொண்டு, பஸ்தர் மகாராஜாவின் அரண்மனைக்கு வருவார்கள். கோயிலில் கிளம்பியதிலிருந்து அரண்மனையை வந்துசேர 60 நாள்கள் அம்மன் பயணம் செய்வார். அம்மன் வரும் வரை தேர் செய்யும் பணிகள் மற்றும் திருவிழா ஏற்பாடுகள் நடக்கும். அரண்மனைக்கு அம்மன் வந்து சேர்ந்ததும், 16 நாள்கள் ராஜாவின் மகளாக பாவித்து, கொண்டாடப்படும் திருவிழா ஓர் அதிசயம். 16 நாள்கள் முடிந்து அம்மனை வழியனுப்ப ராஜ குடும்பத்தினர் உள்ளிட்ட மொத்த நகரமும் கூடும். 21 குண்டுகள் முழங்க, சீர்ப்பொருள்களுடன் அரண்மனையை விட்டு அம்மனைத் தேரில் வழியனுப்பும் நிகழ்ச்சி மனதை உருக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் இது, ஒவ்வொருவரும் வாழ்நாளில் கண்டுகளிக்க வேண்டிய பண்டிகை.

பண்டிகையின் கடைசி நாள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பூர்வகுடிகளின் பிரதிநிதிகள் பஸ்தர் மகாராஜாவிடம் தங்கள் நிறைகுறைகளை விவாதிக்கும் `மூர்யா தர்பார்' நிகழ்ச்சி நடைபெறும். அதுவொரு தனித்துவமான நிகழ்ச்சி. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இன்றும் சூர்யா தர்பார் நடந்துவருகிறது. தற்போது தர்பாரில் முதலமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு தொல்குடிகளின் நிறைகுறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

******

எப்போது பார்க்கலாம்?

கோடைக்காலத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். ஆனாலும் மற்ற வடமாநிலங்களைப்போல் இல்லாமல் இங்கு கோடையின் கடுமை சற்றுக் குறைவாக இருக்கும். தென்மேற்குப் பருவமழைக் காலம் மற்றும் குளிர்காலம் இந்த மாநிலத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றவை. மழைக்காலம் முடியும் செப்டம்பர் முதல் கோடைக்காலத்தின் ஆரம்பமான மார்ச் மாதம் வரை சுற்றிப் பார்க்கப் பொருத்தமான காலம். தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். அந்தக் காலத்தில் காடுகளும், நீர்வீழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்து படைக்கும். கோடை வாசஸ்தலங்களான மலைப் பகுதிகளைச் சுற்றிப்பார்ப்பதற்கு ஏப்ரல், மே மாதங்கள் மிகவும் உகந்தவை.

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

ஸ்ரீபுரம் எனும் சிர்பூர்

ஸ்ரீபுரம். செல்வச் செழிப்பு மிக்க நகரம். மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் மகாநதி நதிக்கரையில் உள்ள வெளியுலகம் அதிகம் அறியாத ஒரு பழங்கால நகரம். கி.பி 5 முதல் 8-ம் நூற்றாண்டுவரை புகழ்பெற்று விளங்கிய நகரம். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மகாநதிக் கரையிலிருந்த காரணத்தினால் மணலில் புதையுண்டுபோனது. 1882-ம் ஆண்டு தொல்லியல் துறை வல்லுநர் அலெக்சாண்டர் கன்னிங்காம் சிர்பூரைக் கண்டுபிடித்தார். கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட லக்ஷ்மணா கோயிலின் அழகு வியப்பூட்டுகிறது. நாலந்தாவைவிட நான்கு மடங்கு மிகப் பரந்து விரிந்த புத்தமத கல்வி கேந்திரமாகவும் சிர்பூர் இருந்துள்ளது. 27 இந்துமத ஆலயங்கள், 10 புத்த விகாரைகள், 3 சமண ஆலயங்கள், வணிக வளாகம் மற்றும் குளியல் வளாகம், மாலுமிகள் தங்கும் விடுதிகள் போன்றவை தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

இந்தியாவின் கடல்குதிரை

2000-ம் ஆண்டு நவம்பர், மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து இந்தியாவின் 26வது மாநிலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது, சத்தீஸ்கர். மாநிலத்தின் தலைநகர் நவா ராய்ப்பூர். கடல் குதிரை போன்ற அமைப்பில் இந்தியாவின் மையப்பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. தெற்கு வடக்காக நீண்டு பரந்து இருக்கும் இந்த மாநிலத்தின் பரப்பளவு சுமார் 1,35,000 சதுர கிலோ மீட்டர்கள். தமிழ்நாட்டைவிட 5,000 சதுர கிலோ மீட்டர்கள் பெரியது. மக்கள்தொகை இரண்டரைக் கோடி. (2011 கணக்குப்படி) நாட்டின் ஒன்பதாவது பெரிய மாநிலம். மிகப்பெரும் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது வளத்தைக்கொண்டுள்ள மாநிலம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, இதன் வளமே அச்சமாக மாறிவிட்டது.

எப்படிப் போவது?

சத்தீஸ்கர், மத்திய இந்தியாவில் உள்ள மாநிலம். தெற்கே சென்னை, வடக்கே புதுடில்லி, மேற்கே மும்பை, கிழக்கே கொல்கத்தா செல்லும் முக்கிய ரயில்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூரைக் கடந்து செல்கின்றன. சென்னையிலிருந்து நேரடி விமானச் சேவையும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு மார்க்கமாகக் காபின் சர்வீஸ் தொடர்பும் உள்ளது. சென்னையிலிருந்து வாரமிருமுறை நேரடி ரயில் சேவையும், வாரம் ஐந்து முறை ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் சேவையும் உள்ளது. சாலை மார்க்கமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாகச் சத்தீஸ்கரை அடையலாம். வடக்கு திசையில் அமைந்துள்ள மெயின் பாட், சத்தீஸ்கரின் எல்லையில் அமைந்துள்ள அமர்கண்டக் மற்றும் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பச்சேலி இவை மூன்றும் கோடையில் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றதாகும். ஆந்திரா எல்லைக்கு அருகேயுள்ள அரக்குவேலி பிரபலமான சுற்றுலாத்தளம். சத்தீஸ்கர் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சுற்றுலாத் தலங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்திய நயாகராவின் இருப்பிடம்!

பூர்வகுடிகளின் பூமி

42 வகையான பூர்வகுடிகள் இங்கே வசிக்கிறார்கள். இதில் கோண்டு, கவர், ஓராவ், ஹல்பா, பாத்ரா ஆகிய 5 பிரிவினர்தான் சுமார் 85 சதவிகிதம் இருக்கிறார்கள். மற்ற 37 பிரிவினர் மீதமுள்ள 15 சதவிகிதம் இருக்கிறார்கள்.