Published:Updated:

ஏலம்விடப்படும் திருச்சிற்றம்பல தரிசனம்... சட்டவிரோத குழந்தை திருமணங்கள்... உடைகிறதா சிதம்பர ரகசியம்?

உடைகிறதா சிதம்பர ரகசியம்?
பிரீமியம் ஸ்டோரி
உடைகிறதா சிதம்பர ரகசியம்?

திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று இறைவனை தரிசனம் செய்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

ஏலம்விடப்படும் திருச்சிற்றம்பல தரிசனம்... சட்டவிரோத குழந்தை திருமணங்கள்... உடைகிறதா சிதம்பர ரகசியம்?

திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று இறைவனை தரிசனம் செய்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

Published:Updated:
உடைகிறதா சிதம்பர ரகசியம்?
பிரீமியம் ஸ்டோரி
உடைகிறதா சிதம்பர ரகசியம்?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொட்டிக் கிடக்கும் ஆச்சர்யங்களைப்போலவே சர்ச்சை களும் வரிசைகட்டி நிற்கின்றன. சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில் பல ஆண்டுகளாக தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்தக் கோயிலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், 1987-ல் எம்.ஜி.ஆரும், 2008-ல் கருணாநிதியும் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தீட்சிதர்கள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றனர். ஆனால், அங்கும் அரசுக்குச் சாதகமான தீர்ப்பு வரவே, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள் தீட்சிதர்கள். இந்த வழக்கு 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிதாகக் கண்டுகொள்ளாததால் கோயில், தீட்சிதர்கள் வசம் சென்றது. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோயிலில் திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை நிறுத்திவைத்திருந்த தீட்சிதர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய பிறகும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து ‘திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்’ என்று ஜெமினி ராதா என்பவர் நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

ஏலம்விடப்படும் திருச்சிற்றம்பல தரிசனம்... சட்டவிரோத குழந்தை திருமணங்கள்... உடைகிறதா சிதம்பர ரகசியம்?

தொடர்ச்சியாக வந்த முறைகேடு புகார்களின் அடிப்படையில், ஜூன் 7-ம் தேதி கோயிலை ஆய்வு செய்யச் சென்ற இந்து சமய அறநிலையத் துறைக்குழுவினர், 2014-லிருந்து தற்போது வரையிலான வரவு, செலவு கணக்குகளைக் கேட்டனர். ஆனால் ‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால், உங்களால் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது” என்றதுடன், கணக்குகளைக் காட்டவும் மறுத்துவிட்டனர் தீட்சிதர்கள். இதையடுத்து ‘சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து பொதுமக்களும் பக்தர்களும் கடலூர் அலுவலகத்தில் ஜூன் 20, 21 தேதிகளில் தங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

இந்த நிலையில், ‘திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை அனுமதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் சென்ற கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதாவுடன் பேசினோம். “திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று இறைவனை தரிசனம் செய்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. தற்போது தீட்சிதர்கள் அதற்குத் தடை விதித்திருப்பதற்குக் காரணம், தட்சணைகளைப் பிரித்துக்கொள்வதில் தீட்சிதர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைதான். திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்பவர்கள் ரூ.500 முதல் ரூ.5,000 வரை தட்சணை கொடுப்பார்கள். அதனால் திருச்சிற்றம்பல மேடை தரிசனம் தீட்சிதர்களுக்குள் அன்றாடம் ரூ.25,000 ரூபாய்க்கு ஏலம்விடப்படும். அதை ஏலம் எடுக்கும் தீட்சிதர் தரப்புக்கு மட்டும்தான் அன்றைய கலெக்‌ஷன் முழுவதும். அதேசமயம் திடீரென வரும் வி.வி.ஐ.பி-க்கள் ரூ.5,00,000 லட்சம் முதல் 2 கோடி வரை கொடுப்பார்கள். அந்தப் பணம் யாருக்கு என்பதில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்னையால்தான் திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை இழுத்து மூடிவிட்டார்கள்.

ஏலம்விடப்படும் திருச்சிற்றம்பல தரிசனம்... சட்டவிரோத குழந்தை திருமணங்கள்... உடைகிறதா சிதம்பர ரகசியம்?

இந்தக் கோயிலின் கட்டளைதாரர்களாக இருக்கும் வி.வி.ஐ.பி-க்கள் கோயில் புனரமைப்புக்காகவும், விசேஷங்களுக்காகவும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பார்கள். ஆனால், அது எந்தக் கணக்கிலும் வராது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் சென்றுவிட்டால் இந்த வருமானம் போய்விடும், உண்டியலும் வைக்கப்பட்டுவிடும் என்பதால்தான் தீட்சிதர்கள் அதை எதிர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு தீட்சிதரும் லட்சாதிபதி யாக, கோடீஸ்வரராக இருக்கின்றனர். பல தீட்சிதர்கள் ‘ஆடி’ உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்திருக்கிறார்கள். அதேசமயம் வி.ஐ.பி-க்களை கைக்குள் போட்டுக்கொண்டு காரியம் சாதிக்கத் தெரியாத பல தீட்சிதர்கள் இப்போதும் சாப் பாட்டுக்குக்கூட வழியில்லாமல் இருக்கின்றனர். 2014-ல் இந்த வழக்கில் தமிழக அரசு கவனம் செலுத்தாததால், எக்ஸ் பார்ட்டி தீர்ப்பில்தான் கோயில் தீட்சிதர்கள்வசம் போனது. அதிலும்கூட ‘சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கட்டினார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்பட வில்லை. பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்ட அது பொதுக் கோயில். ஆனால், இவர்களின் வாழ்வாதாரத்துக்காகக் கோயிலை நிர்வகித்து வரலாம். அதேசமயம் தீட்சிதர்கள் மீது முறைகேடு கள் புகார் வந்தால், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, கோயில் இவர்களுக்குத்தான் சொந்தம் என்று கூறவில்லை. இவர்களின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான் அரசிடம் தீட்சிதர்கள் கணக்கு காட்ட மறுக்கிறார்கள்” என்றார் அழுத்தமாக.

ஜெமினி எம்.என்.ராதா
ஜெமினி எம்.என்.ராதா

பெயர் வேண்டாமென்று நம்மிடம் பேசிய சில தீட்சிதர்கள், “இங்கு நாங்கள் 285 குடும்பங்கள் வசிக்கிறோம். ஆனால் வெறும் 50 தீட்சிதர்கள்தான் கோயிலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் கள். அவர்களால்தான் இவ்வளவு பிரச்னைகளும். இங்கு நடக்கும் அநியாயங்களைக் கேள்விப்பட்டால், எங்களுக்காக ஆஜரான சுப்பிரமணியன் சுவாமிகூட இனி ஆஜராக மாட்டார். இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தில் விளையாடும் கோடிக்கணக்கான பண வசூல்தான். பொதுமக்களால்தான் இந்தக் கோயில் இயங்குகிறது. உண்டியல் இல்லாத இந்தக் கோயிலில், தட்டில் அவர்கள் போடும் காணிக்கை தான் எங்களுக்கு வருமானம். அவர் களை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். அப்படியிருக்கும்போது அவர்களுக்கு நாம் துரோகம் செய்யலாமா... இந்த வகையில் திருச்சிற்றம்பல மேடை தரிசன விவகாரத்தில், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை நாங்கள் வரவேற்கிறோம்” என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, ‘‘பொதுமக்கள் மற்றும் ஒருசில நேர்மை யான தீட்சிதர்கள் அனுப்பிய புகார்களின் அடிப்படையில்தான் இந்து சமய அறநிலையத் துறை அங்கு ஆய்வுக்குச் சென்றது. அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இது தங்களுக்குச் சொந்தமான கோயில் என்றும் அதனால் கணக்கு வழக்குகளைக் காட்ட முடியாது என்றும் கூறியிருக்கின்றனர் தீட்சிதர் கள். தேவையேற்பட்டால், அரசு தலையிடலாம் என்ற சட்டம் இருக்கும் நாட்டில்தான் இந்தக் கோயில் அமைந்திருக்கிறதே தவிர, தனித் தீவில் இல்லை. சேரர், சோழர், பல்லவர், பராந்தகன், கிருஷ்ண தேவராயர் போன்றவர்களால், ஆயிரக் கணக்கான மக்களின் உழைப்பால் சுமார் 400 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். 2008-லிருந்து 2014 வரை கோயில் தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் திருவிழா உள்ளிட்ட செலவுகள் போக ரூ.3.31 கோடி கையிருப்பும், சுமார் 1,740 கிலோ வெள்ளி, 350 கிராம் தங்கமும் இருந்தன. ஆக, ஐந்து ஆண்டுகளில் அனைத்துச் செலவுகளும் போக சுமார் 4 கோடி ரூபாய் வருவாய் இருக்கக்கூடிய கோயிலில், தீட்சிதர்கள் இதுவரை எந்தக் கணக்கையும் காட்டியது இல்லை. குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் கோயில் நிலங்கள் குறித்த கணக்கையும் காட்டுவது கிடையாது.

ரமேஷ்பாபு
ரமேஷ்பாபு

எந்தக் கோயிலில், எந்தக் கடவுள் பெயரால் தேவாரம், திருவாசகம் இயற்றப் பட்டதோ... அந்தக் கோயிலிலேயே அவற்றைப் பாட அனுமதிக்க மறுப்பது ஏற்புடையதா... தேர்த் திருவிழாவின் போது நடராஜரும், சிவகாமி அம்மை யாரும் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து தான் வெளியே வருவார்கள். அந்த மண்டபத்தை வரலாற்றில் முதன்முறை யாகத் தொழிலதிபர் ஒருவரின் வீட்டு திருமணத்துக்காக தீட்சிதர்கள் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த அத்துமீறல்களை யார் தட்டிக் கேட்பது... அதனால் தமிழ்நாடு அரசு உடனே தனிச்சட்டம் இயற்றி காசி விஸ்வநாதர் கோயிலைப்போல இந்தக் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்” என்றார்.

தீட்சிதர்கள் குழுவின் செயலர் ஹேமசபேச தீட்சிதரிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, ‘‘எங்கள் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார் சுருக்கமாக. வழக்கறிஞர் சந்திரசேகர னிடம் பேசினோம். இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்த அவர், “தீட்சிதர்கள் தனி சமயத்தினர் என்று 1951-ல் சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய முன் தீர்ப்பை, 2014-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த வழக்கு போடப்பட்டாலும் அவர்கள் தனி சமயத்தினர் என்பது இறுதியாக்கப்பட்டுவிட்டதால், அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 26-ன்படி அனைத்து பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பாக குறிப்பிட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்து அறநிலையத்துறை சட்டப்பிரிவு 33-ன்படி கணக்கு கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும்?” என்றார்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism