அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அதிகார யுத்தம்... - தகிக்கும் தில்லை... கொதிக்கும் பக்தர்கள்!

நடராஜர் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜர் கோயில்

குழு அமைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர்களுக்கு அப்படி ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்வதை அண்மைக்காலமாக தீட்சிதர்கள் நிறுத்திவிட்டனர். இதையடுத்து ‘கனகசபை தரிசனத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்’ என்று கடந்த மே மாதம் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், அதன் பிறகும் பக்தர்கள் கனகசபை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் கனகசபை மீது நின்று இடையூறின்றி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த அதிகாரிகள்குழு ஒன்றை நியமித்தார் அறநிலையத்துறையின் இணை ஆணையர் சி.ஜோதி.

அதிகார யுத்தம்... - தகிக்கும் தில்லை... கொதிக்கும் பக்தர்கள்!

இதை எதிர்க்கும் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் பேசியபோது, “அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வராத ஒரு கோயில்மீது அரசாணை பிறப்பிக்க அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. அதன்படி கனகசபை குறித்து அவர்கள் வெளியிட்ட அரசாணை என்பதே தவறு.

இந்தக் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ள விரும்பினால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளட்டும். அதைவிடுத்து தீட்சிதர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறார்கள்... அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துக் கோயில்களிலும் நிர்வாகம் சரியாக நடக்கிறதா?” என்றார் காட்டமாக.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி என்.ராதா, ‘‘தனி சமயப் பிரிவினரான தீட்சிதர்கள் வருவாய்க்காக அந்தக் கோயிலை நிர்வகித்துக் கொள்ளலாம். அதேசமயம் அங்கு தவறுகள் நடந்தால் அறநிலையத்துறை ஆலோசனை கூறுவதுடன், நடவடிக்கையும் எடுக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அப்படியிருக்கும்போது அரசுக்கு அதிகாரமில்லை என்று எப்படிக் கூற முடியும்?” என்றார்.

 சந்திரசேகரன்
சந்திரசேகரன்
ஜெமினி என்.ராதா
ஜெமினி என்.ராதா

இந்த விவகாரம் குறித்துப் பேசிய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, “குழு அமைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர்களுக்கு அப்படி ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று முடித்துக்கொண்டார்.

இன்னொருபுறம், நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குடும்பங்களில், சட்டவிரோத குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகப் புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, தனது 13 வயது மகளுக்குத் திருமணம் செய்துவைத்த சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், சிறுமியைத் திருமணம் செய்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் இருவரும் தற்போது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அறநிலையத்துறை - தீட்சிதர்கள் இடையிலான அதிகார யுத்தத்தால், பக்தர்கள் பாதிக்கப்படக் கூடாது!