Published:Updated:

சிறார் வன்கொடுமைகள்... வழக்கை மாற்றிப் பதிவு செய்கிறதா நீலகிரி போலீஸ்?

உதகமண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
உதகமண்டலம்

நீலகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறார் வன்கொடுமைகள்... வழக்கை மாற்றிப் பதிவு செய்கிறதா நீலகிரி போலீஸ்?

நீலகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
உதகமண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
உதகமண்டலம்

தமிழ்நாட்டிலேயே குற்றச்செயல்கள் குறைவாகப் பதிவாகும் நீலகிரி மாவட்டம், அமைதிப் பூங்கா என்றே நம்பப்படுகிறது. ஆனால், கள நிலவரமோ தலைகீழாக உள்ளது. சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், குழந்தைத் திருமணங்களும் ஊரடங்கு காலத்தில் இந்த மாவட்டத்தில் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இன்னசென்ட் திவ்யா, விஜயன்
இன்னசென்ட் திவ்யா, விஜயன்

மாவட்ட காவல்துறை தரும் தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டில், நீலகிரியில் சிறார்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளுக்காக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டில் 56 வழக்குகளாக அதிகரித்துள்ளது. 2021-ல் ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே 22 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் 2020-ம் ஆண்டு முதல் கடந்த 2021, ஏப்ரல் வரை நீலகிரியில் 17 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் சட்டரீதியாகப் பதிவான சம்பவங்கள் மட்டுமே. வெளிவராதவை இன்னும் அதிகம் இருக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

நீலகிரியில் சிறாருக்கு எதிரான குற்றங்கள் குறித்து கள ஆய்வில் ஈடுபட்டுவரும் அரசு சமூக நலத்துறையின் அதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘பள்ளிகள் மூடியிருப்பதுதான் குற்றங்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கீழ் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில் பெரும்பாலும் தாய், தந்தை இருவருமே கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால், பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்க நேரிடுகிறது. இதனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்களாலேயே சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வாய்ப்பு அதிகம். பெற்றோரோ, இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, ‘யார் கையிலாவது பிடித்துக்கொடுத்துவிட்டால் நிம்மதி’ என்றெண்ணி 14 அல்லது 15 வயதிலேயே பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நாங்களே ஆறு குழந்தைத் திருமணங்களை நிறுத்தி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுத்துளோம்” என்றார் ஆற்றாமையுடன்.

சிறார் வன்கொடுமைகள்... வழக்கை மாற்றிப் பதிவு செய்கிறதா நீலகிரி போலீஸ்?

பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் நிகழ்ந்தாலும், காவல் நிலையங்களில் போக்சோ பிரிவுகளில் அவை பதியப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகிறார் ‘மக்கள் சட்ட‌ மைய’ நிறுவனர் வழக்கறிஞர் விஜயன். ‘‘கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுமியருக்கு எதிரான அத்துமீறல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஆனால், இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் அனைத்தும் வழக்காகப் பதியப்படுவ தில்லை. பல விவகாரங்களில் பேசி முடித்துவிடுகிறார்கள். தவிர, பழங்குடி கிராமங்களில் வெளியில் தெரியாமல் நடக்கும் வன்கொடுமைகள் ஏராளம். வன்கொடுமையில் ஈடுபட்டவரின் அரசியல் மற்றும் பண செல்வாக்கு அடிப்படையில் வழக்குகள் மாற்றிப் பதியப்படுகின்றன. 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமையில் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய அவருக்கு 19 வயது எனப் பொய்யாக மாற்றி வழக்கு பதிவு செய்கிறார்கள். இந்த முறைகேட்டை விசாரிக்கவே தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

மேற்கண்ட பிரச்னைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கொண்டு சென்றோம். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், ‘‘குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகநலத்துறை ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism