Published:Updated:

நெல்லை: தின்பண்டம் திருடியதாக ஏற்பட்ட சந்தேகம்... தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

தாயின் இரண்டாவது கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் உடலில் 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் உடம்பில் எரிச்சல் தாங்க முடியாமல் தவித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம், காவல்கிணறு பாரதிநகர் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள், சுஜா, ஜேசு அந்தோணிராஜ். இருவரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக காவல்கிணறு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்துவந்தார்கள்.

Vikatan

சுஜாவின் முதல் கணவர் எட்டு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதால் ஓர் ஆண், இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்தார். ஜேசு அந்தோணிராஜின் முதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வசித்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

சுஜாவும் அவரின் கணவர், குழந்தைகள் காவல்கிணற்றில் வசித்த நிலையில் பெற்றோர் இருவரும் ஹோட்டலில் வேலை செய்துவந்தார்கள். குழந்தைகள் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர்களின் குழந்தைகள் அங்குள்ள பேக்கரியில் தின்பண்டங்களைத் திருடியதாக, கடையின் உரிமையாளர், ஜேசு அந்தோணிராஜிடம் புகார் செய்துள்ளார்.

தீவைத்து எரிப்பு
தீவைத்து எரிப்பு

அதனால் கோபமடைந்த அவர் வீட்டுக்குச் சென்று குழந்தைகளை அடித்துள்ளார். ஆனாலும் கோபம் தனியாத அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குழந்தைகள் மீது ஊற்றியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த இரு குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டனர். 10 வயது சிறுமியான கடைசிக் குழந்தை மட்டும் மண்ணெண்ணெயுடன் இருந்த நிலையில், ஜேசு அந்தோணிராஜ் தீவைத்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி கதறித் துடித்து தந்தையின் கால்களைக் கட்டிப் பிடித்திருக்கிறது. அதில் ஜேசு அந்தோணிராஜுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சிறுமிக்கு 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

தீ
தீ
Pixabay

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்கிணறு காவல்துறையினர் ஏற்கெனவே கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஜேசு அந்தோணிராஜ் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி் உயிரிழந்ததால் ஜேசு அந்தோணிராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்கிணறு இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி இந்த வழக்கை விசாரித்துவருகிறார்.

குழந்தையைத் தீவைத்து எரித்துக் கொலை செய்த சம்பவத்தால் காவல்கிணறு பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு