கட்டுரைகள்
Published:Updated:

எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடுகின்றன!

குழந்தைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள்

T.M.விஸ்வநாத்

``ஏதோ கடும் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளிலிருந்து எளிதாக மீண்டு பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதுபோல இப்போது திரும்பிவிட முடியாது.

கடந்தகாலம் இனி மீண்டும் திரும்பாது என்பதைத்தான் நிகழ்காலம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.இனி முற்றிலும் புதிய ஓர் உலகத்தில் புதிதாக ஒரு வாழ்க்கையை எங்களுக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் நாங்கள் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது” என்கிறார், இத்தாலியின் ஆவணப்பட இயக்குநர் ரோசெல்லா ஸ்கில்லாச்சி. உயிரச்சத்தின் பிடியில் இருப்பவர்களது வலியை நமக்குக் கடத்துகிறது அவரது கடிதம்.

``நண்பர்களே,இத்தாலியின் ஒவ்வொரு வீடும் மூடப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் கடந்துவிட்டது; அனுமதிக்கப்பட்ட மிக முக்கியமான அவசரத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. நண்பர்களையோ, உறவினர்களையோ வீட்டிற்கு அழைக்க முடியாது.

எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடுகின்றன!

என் 9 வயது மகனும், நானும் அவன் தாத்தா பாட்டியைப் பார்த்து 15 நாள்களுக்கும் மேலாகிவிட்டது. அவர்களுக்குத் தங்கள் பேரக் குழந்தையைப் பார்ப்பதுகூடப் பெரும் ஆபத்தாக மாறிவிட்டது.

பிற குழந்தைகளைப் போலவே எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா வைரஸ் என் மகனுக்கும் இருக்கலாம். அது ஒருவேளை அவன் தாத்தா பாட்டிக்குத் தொற்றிக்கொண்டுவி ட்டால் என்ன செய்வது? மக்களைச் சந்திப்பதையே கொண்டாட்டமாக நிகழ்த்தும் நாங்கள் எங்களது அன்றாட மாலைச் சந்திப்புகளை வீட்டின் பால்கனியில் இருந்தபடியே நிகழ்த்திக்கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் அவர்களின் வீட்டில் இருந்த ஒயின், பியர் ஆகியவற்றை எடுத்துவந்தார்கள். அவரவர் பால்கனிகளில் இருந்தவாறே “சியர்ஸ்” சொல்லியவாறு அருந்தினோம். ஒருசிலர் இசைத்தனர். ஒருசிலர் தங்கள் நட்புக்கோ, உறவினருக்கோ வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருந்தனர். இவை எல்லாமே அவரவர் வீட்டுப் பால்கனிகளில் இருந்தவாறே நடந்தன. கொரோனாவுக்காக நாட்டின் எல்லைகளை அடைத்தோம், பின்னர் வீதிகளை மூடினோம். தற்போது வீட்டின் கதவுகளுக்குப் பின்னால் உயிரைக் கையில் பிடித்தபடி அடைந்திருக்கிறோம். தற்போது எங்கள் பால்கனிகள் மட்டுமே எங்களுக்கான வானத்தைக் காட்டுகிறது. கொரோனா அதையும் பறித்துவிடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.

சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது பிடிக்காமல் குழந்தைகள் அவரவர் பால்கனிகளில் இருந்தபடியே விளையாட வழி கண்டுபிடித்துவிட்டார்கள். அவர்களது நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். விளையாட்டுகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் அவர்களது உரையாடல்களைக் கேட்கமுடிகிறது.

எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடுகின்றன!

என் மகனும் கீழ் வீட்டில் வசிக்கும் அவன் நண்பனும் கவனத்தோடு ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் விளையாடுகின்றனர். மூடியிருக்கும் தன் நண்பனின் வீட்டுக்கதவின் முன்பு என் மகன் ஒரு பொருளை வைத்துவிட்டு ஓடிவந்து பால்கனியில் நின்றுகொள்வான். அதன்பின் அவன் நண்பன் கதவைத் திறந்து, அது என்ன பொருள் என்றும், அதுபற்றியும் அவன் வீட்டுப் பால்கனியில் வந்துநின்று கொண்டு சொல்வான். இதேபோல அந்தச் சிறுவனும் செய்யவேண்டும். இப்படி இருவரும் விளையாடுவார்கள். சில நேரங்களில் இவர்கள் விளையாடுவதற்கு நாங்களும் உதவுவோம்.

மகனின் நண்பன் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வரை வாரத்திற்கு 4 முறை கால்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபடுவான். இப்போது அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டதால், செய்வதறியாமல் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறான்.

எங்கள் பால்கனியில் இருந்தவாறே என் மகனும் அவனை ஊக்கப்படுத்தி வருகிறான். இரண்டு பேரும் தொலைவில் நின்று விளையாட அனுமதிக்குமாறு என்னிடம் அவன் கெஞ்சுகிறான். ஆனால் அது இயலாத காரியம். ஆபத்தானது என்பதால் மிக உறுதியாக மறுத்து விடுகிறேன்.

குழந்தைகள்
குழந்தைகள்

மாடிப்படி மற்றும் பால்கனி வாழ்க்கையில் இருந்து விடுதலையடையும் நாளை எதிர்நோக்கியவாறு எங்களது வாழ்க்கை செல்கிறது.

இப்போது இந்தக் குடியிருப்பில் வசிக்கும் எவருக்கும் முந்தைய நாள்கள்போலப் பாடல் பாடுவதற்குத் துளியும் எண்ணம் எழவில்லை. மிக இறுக்கமான மனநிலைக்கும், சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இந்தக் கடினமான சூழல் எங்கள் குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. மீண்டும் அவர்கள் பள்ளிக்குச் செல்ல இரண்டு, மூன்று மாதங்களோ அல்லது ஒரு வருடமோகூட ஆகலாம்.

குழந்தைகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் சிலர் இணையம் மூலமாகத் தங்களின் மாணவ மாணவிகளுடன் தொடர்பில் இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் அதற்கான பயிற்சியும் கருவிகளும் இல்லை. ஆனால், இதே போன்று பால்கனி வழியாகவே வானத்தை, அடுத்த பால்கனியை, காலியாகக் கிடக்கும் குடியிருப்பின் பூங்கா, திடல், சாலையைப் பார்த்தபடியே நீண்ட நாள்கள் கிடந்து தாக்குப் பிடிக்க முடியாது, இதற்கெல்லாம் நாம் விரைவில் தீர்வு காண்போமா? தீர்வு காணவேண்டும்.”

ரோசெல்லாவின் இந்தக் கடிதம் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாமியின் வரிகளை நினைவூட்டுகிறது.

``இந்தப் புயல் நிச்சயம் ஓய்ந்துவிடும். இதிலிருந்து நீ எப்படிப் பிழைத்தாய் என்பது உனக்கு நினைவில் இருக்காது. இந்தப் புயல் ஓய்ந்ததைக்கூட நீ நம்ப மறுப்பாய். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். புயல் உன்னைப் புதியதொரு மனிதனாக மாற்றியிருக்கும்.”

நிச்சயம் மீள்வாய் அன்பின் தேசமே!