Published:Updated:

மகாராஜாவின் காதலி - வரலாறு

மகாராஜாவின் காதலி
பிரீமியம் ஸ்டோரி
மகாராஜாவின் காதலி

சுகுமாரன்; ஓவியம்: வெங்கடேசன்

மகாராஜாவின் காதலி - வரலாறு

சுகுமாரன்; ஓவியம்: வெங்கடேசன்

Published:Updated:
மகாராஜாவின் காதலி
பிரீமியம் ஸ்டோரி
மகாராஜாவின் காதலி

கண்டதும் காதல் தோன்றுமா? தோன்றும். அது உயிர் பிரியும்வரை நீடிக்குமா? நீடிக்கும். நொடி நேர ஸ்பரிசம் வாழ்நாள் முழுவதும் பரவசம் தருமா? தரும். `பங்கமில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்' என்று இருக்க முடியுமா? முடியும். இந்த உணர்வுக்கு ஆளானவர் பெயர் செல்லம்மா ஆக இருந்தால், இவை எல்லாமும் சாத்தியம். அவருடைய கதை திருவனந்தபுரம் நகரத்தின் வரலாற்றில் எழுதப்படாதது. ஆனால், இன்றும் பலரும் நினைவுகூர்வது.

நீண்ட காலம் ஒரு நகரத்தில் வசிப்பவருக்கு அந்த நகரம் சொந்தமாகிவிடுகிறது. வசிப்பவரும் நகரத்துக்குச் சொந்தமாகி விடுகிறார். நகரம் தன்னுடைய கதைகளைக் கேட்கச் செய்கிறது. தன்னுடைய வரலாற்றைச் சொல்லுகிறது, தன்னை அடையாளம் காட்டும் ஞாபகச் சின்னங்களை, தன்னுடைய மாளிகைகளில் வாழ்ந்து மடிந்த புகழ்பெற்ற மனிதர்களை, தன்னுடைய தெருக்களில் அலைய விதிக்கப்பட்டு ஆதரவில்லாமல் மறைந்த ஜீவன்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறது. இருபத்தொரு ஆண்டுகளாக நான் திருவனந்தபுரவாசி. இந்த நகரம் சொன்ன கதைகளில் மறக்க முடியாத ஒன்று, சுந்தரி செல்லம்மாவுடையது. அடைய முடியாத உறவுக்காக அரை நூற்றாண்டுக் காலம் காத்திருந்து, தன்னையே அழித்துக்கொண்ட பெண்ணின் கதை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரபூர்வமான கடைசி மன்னர், சித்திரைத் திருநாள் பாலராம வர்மா. திருவிதாங்கூர் அரசர்களில் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மகாராஜாவும் அவர்தான். திருவிதாங்கூர் அரசதிகாரம் மருமக்கள் தாய மரபில் தொடர்வது. அரசரின் நேர் வாரிசுகளுக்கு ஆட்சியில் உரிமை கிடையாது. சகோதரியின் பிள்ளைகளுக்கே அந்த உரிமை. எனவே, மன்னர்கள் பலரும் மணவாழ்வில் ஈடுபட்டவர்கள் அல்லர். மாமாவான மூலம் திருநாள் ராமவர்மாவின் மறைவுக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்த சித்திரைத் திருநாள், நவீன திருவனந்தபுரத்தை உருவாக்கினார். அவர் காலத்தில்தான் முதலாவது பல்கலைக் கழகம் உருவானது; விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது; பெண்களுக்கான கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன; அனைத்துச் சாதியினரும் ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது; அலோபதி, ஆயுர்வேத மருத்துவமனைகள் பரவலாக எழுந்தன; திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றில், பாலராம வர்மாவின் ஆட்சிக்காலமே பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்களை மிகவும் நேசித்த மன்னரை மக்களும் ‘பொன்னு தம்புரான்’ என்று கொண்டாடினார்கள். மணமாகாத பொன்னு தம்புரானைத் தன்னுடைய கணவனாக வரித்துக் கொண்டு வாழ்ந்தவர் செல்லம்மா.

பத்மநாப சுவாமி ஆலயத்தின் வடக்கு நடையில் (வடக்கு வாசல்) இருந்த பெண்கள் பள்ளியில், இசை – நடன ஆசிரியராகப் பணியாற்றியவர் செல்லம்மா. அவருடைய அபாரமான அழகைப் பாராட்டி ஊர்க்காரர்கள் இட்ட பெயர், சுந்தரி செல்லம்மா. தன்னுடைய மாணவிகளை சாலையைக் குறுக்காகக் கடந்து அழைத்துச் செல்லும் வேளையில், அவர்கள் கடந்து செல்வதற்கு உதவியாக நிறுத்தப்பட்ட காரைப் பார்த்தார். காரின் முன் பக்கத்தில் திருவிதாங்கூர் அரசின் சங்கு முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பேரழகரைச் செல்லம்மா ஒரு விநாடி ஏறிட்டுப் பார்த்தார். அது மன்னர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா. அந்த ஒரு நொடியில் செல்லம்மாவின் மனம் பித்தானது. தன்னை மகாராஜா ஏறிட்டுப் பார்த்தார் என்று நம்பிய செல்லம்மா, பின்னர் அந்தப் பார்வைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். பொன்னு தம்புரான் செல்லம்மாவுக்குத் தெரியாமலே அவருடைய மனதுக்குள் இடம் பிடித்தார். வகுப்பில் மாணவிகளுக்குக் கற்பிக்கும் சமயங்களில் சங்கு முத்திரை சுமந்த வாகனம் சாலையில் வருவதைக் கண்டால், ஓடி வந்து சாலையோரம் நிற்பதும், அதிகாலையில் பத்மநாப சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும் மன்னரைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டத்தில் ஒருத்தியாக நிற்பதும் செல்லம்மாவின் வழக்கமானது. அவருடைய அன்றாட நடவடிக்கைகளிலும் அந்தக் கானற்காதல் மின்னியது.

மகாராஜாவின் காதலி  - வரலாறு

இயற்கையில் அழகியான செல்லம்மா, பொன்னு தம்புரானுக்காகத் தன்னை மேலும் அழகுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார். அரச குடும்பத்துப் பெண்களைப்போலக் கூந்தலைச் சரித்து முடிந்துகொண்டார். மல்லிகைப்பூவைச் சூடிக்கொண்டார். நெற்றியில் சந்தனத் திலகமிட்டுக் கலையாமல் பார்த்துக் கொண்டார். பச்சை ரவிக்கையையும் அரை வெள்ளை நிற செட்டு முண்டையும் சீருடையாக்கிக்கொண்டார். எல்லா நேரமும் தங்க நகைகளை அணிந்தும் கைநிறையப் பொன் வளையல்களை மாட்டிக்கொண்டும் புது மணப்பெண்ணாக நடமாடினார். கால்களில் சுருதி சுத்தமாக ஒலிக்கும் தண்டைகளை அணிந்தார். எந்த நேரமும் தன்னுடைய நாயகன் வந்துவிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அப்படியான நாளும் வந்தது.

செல்லம்மாவுக்கு இருபத்தொரு வயது நிரம்பியிருந்தது. அந்தத் தருணத்தில் தான் காத்திருந்த நன்னாள் வாய்த்தது. சக ஆசிரியரான பானுமதி டீச்சர், பள்ளி ஆண்டு விழாவில் அரங்கேற்றுவதற்காக எழுதித் தயார் செய்த நாடகத்தில் செல்லம்மாவை மையப் பாத்திரத்தில் நடிக்கவைத்தார். விழாவுக்குத் தலைமையேற்றவர், மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மா. பருவமடைந்த பெண்கள் நாடகத்தில் நடிப்பது தகாது என்று கருதப்பட்ட காலம். பெண்களின் முன்னேற்றத்திலும் சுதந்திரத்திலும் அக்கறை காட்டிய மகாராஜா, அவர்களை ஊக்குவிப்பதற்காகவே தலைமை தாங்க இசைந்திருந்தார். வந்தமர்ந்து நாடகம் முழுவதையும் பார்த்தார். இறுதியில் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளிக்க எழுந்தார். செல்லம்மா கனவு கண்டிருந்த சுபவேளை அது. நாடகத்தில் நடித்த மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் மன்னர் கசவு நேரியலைப் பரிசளித்தார். மற்றவர்களுக்கு ஜரிகைத் துண்டாகத் தெரிந்த அந்த மேலாடை, செல்லம்மாவுக்கு வேறொன்றாகத் தென்பட்டது.

மலையாளி திருமணங்களில், தாலி அணிவித்தல் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சடங்கு. மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதே முக்கியமான சடங்கு. வயது வந்த ஒரு பெண்ணுக்கு அவளை மணக்கவிருக்கும் ஆண் மட்டுமே புடைவையை அளிக்க முடியும். எந்தப் பெண்ணுக்கு ஓர் ஆண் புடைவையைக் கொடுக்கிறானோ, அவனே அவளுடைய கணவன். மன்னர் கொடுத்த கசவு நேரியலை செல்லம்மா தன்னுடைய திருமணச் சேலையாகவே நினைத்தார். அந்தப் பரிசளிப்பு விழாவைத் தன்னுடைய புடைவைக் கொடையாகவே – திருமணச் சடங்காகவே – கற்பித்துக்கொண்டார். அந்த நொடியில் தன்னைத் தீண்டிய மன்னரின் தொடுகையை உறவின் தொடக்கமாகக் கற்பனை செய்து திளைத்தார். அந்தத் தருணத்துக்குப் பிறகு அந்தத் திளைப்பிலேயே ஆழ்ந்தார்.

தன்னை மகாராஜா புடைவை கொடுத்து மணந்துகொண்டார் என்று செல்லம்மா நம்பினார். தான் இப்போது சாதாரணப் பெண் அல்லள். பட்ட மகிஷி. மகாராணி. அந்தத் தகுதிக்குப் பொருத்தமாகத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டார். அவருடைய மனம் அவரை விட்டு விலகி சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காலடியில் கிடந்தது. அவருக்காகவே தன்னை அழகு படுத்திக்கொண்டார்; அவருக்காக மட்டுமே சிரித்தார்; அவர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆடினார்; அவர் ரசிப்பதற்காகப் பாடினார்; அவரைத் தவிர வேறு சிந்தனையே இல்லாதவரானார். அவருடைய இந்த நிலையைப் பார்த்து மாணவிகள் அஞ்சினார்கள். விலகி ஓடினார்கள். வெகு சீக்கிரமே செல்லம்மா ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். குடும்பத்துக்கு வேண்டாதவர் ஆனார். வீட்டை விட்டும் விரட்டியடிக்கப்பட்டார். பித்து முற்றி உன்மத்த நிலையை எட்டியிருந்த செல்லம்மாவுக்கு எதுவும் பொருட்டாக இல்லை. அவர் வாழ்ந்தது அவருடைய தனி உலகத்தில். அங்கிருந்த இரண்டாவது பிரஜை, மகாராஜா சித்திரைத் திருநாள் மட்டுமே.

பத்மநாப சுவாமி ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் பித்தியாக அலைந்தார் செல்லம்மா. அப்படி அலைந்தபோதும் தானாக வரித்துக்கொண்ட அன்றாடக் கடமைகளிலிருந்து தவறியதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்து அலங்காரபூஷிதையாகக் கோவில் வாசலில் வந்து நிற்பார். சுவாமி தரிசனம் முடித்து வரும் ‘காதல் கணவரை’ப் பார்ப்பதற்காக வழியோரம் காத்திருப்பார். அவரைக் கண்ட உற்சாகத்தில் தெருக்களில் நடந்து திரிவார். அபூர்வமாகச் சில நாள்களில் ஆலயத்துக்குள்ளேயும் மகாராஜா இருக்கும்போது, மகாராணியின் செருக்குடன் நுழைந்திருக்கிறார். சுவாமி தரிசனத்துக்காக வந்திருப்பவரைத் தடை செய்யலாகாது என்று அனுமதித்த பணியாளர்கள், அவர் தரிசிக்க வந்தது காக்கும் கடவுளை அல்ல; காதற் கடவுளை என்று தெரிந்ததும் வலுக்கட்டாயமாக விரட்டியடித்தார்கள். தெருவில் சுருண்டு விழுந்த சுந்தரி செல்லம்மாவுக்கு ஊர் மக்கள் புதிய பெயரைச் சூட்டினார்கள். ‘பிராந்தி செல்லம்மா.’ அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் ஆலயத்துக்குள் நுழையவே இல்லை. அவருடைய கடவுள் உள்ளே அறிதுயிலில் ஆழ்ந்திருப்பவர் அல்லவே. சங்கு முத்திரையுள்ள சாரட்டிலோ, காரிலோ வருபவர் அல்லவா? அவருக்காக ஆலயத்துக்கு வெளியில் காத்திருந்தார். ஏறத்தாழ ஐம்பத்தொரு ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால், கற்பனைக் கணவரின் பார்வை ஒருமுறைகூட அவர் பக்கம் திரும்பவில்லை.

செல்லம்மாவின் மனப்பிறழ்வுக்கு இரங்கியவர்கள் இருந்தார்கள். சக ஆசிரியர்களில் ஒருவராக இருந்த அம்பிகா டீச்சர், தனது இல்லத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். பித்தச் சூழலில் அகப்பட்டிருந்த செல்லம்மாவின் மனம் அதை மறுத்து அவரை மீண்டும் தெருவில் தள்ளிவிட்டது. அவருடைய தடுமாற்ற நிலையைச் சிலர் ஆதாயமாக்கிக் கொள்ளவும் செய்தார்கள். அவரைத் துன்புறுத்தினார்கள். அணிந்திருந்த நகைகளைப் பறித்துக்கொண்டார்கள். ஆனால், செல்லம்மாவுக்குத் தனது காதல் வழிபாட்டைத் தொடர அது தடையாக இல்லை. தங்க நகைகளுக்குப் பதிலாக கல் மாலைகளையும் வண்ணமயமான பாசிமணி மாலைகளையும் யாசித்து வாங்கி அணிந்து அழகுபடுத்திக்கொண்டார். வடக்கு நடையிலிருந்த ஓர் உணவகத்தில் மகாராணி செல்லம்மாவுக்கு இலவச உணவு கிடைத்தது. ஆலய மண்டபத்தில் பள்ளிகொள்ளும் பாக்கியமும் வாய்த்தது. தன்னைச் சீண்டுபவர்களையும் தன்மேல் கல்லை வீசியெறியும் சிறுவர்களையும் திட்டுவது மட்டுமே மற்றவர்களுடன் அவர் நடத்திய உரையாடல். ஆனால், ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார். யாரோ கேட்கும் கேள்விகளுக்கு அடக்கமான குரலில் பதில் சொன்னார். யாரிடமோ குலுங்கிச் சிரித்தார். யாருக்காகவோ பாடினார். இவையெல்லாம் யாருக்காக என்று சாதாரண மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பாட்டுடைத் தலைவனுக்கு ஒருபோதும் இதில் எதுவும் தெரிந்திருக்கவில்லை. காதல் கடவுள் அறியாமலே பைத்தியக்கார பக்தை ஒரு நாள் கண்மூடினார்.

கால் வீக்கம் காரணமாக அதிக நடமாட்டமில்லாமலிருந்த அம்பிகா டீச்சர் தன் தோழியைப் பார்க்கப் புறப்பட்டார். அவருக்குப் பிடிக்குமே என்று பால் அப்பத்தையும் எடுத்துக்கொண்டு பத்மநாபசாமி ஆலய நடைக்கு வந்தவர் வடக்கு வாசலை ஒட்டிய சாலையோரத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த செல்லம்மாவின் சடலத்தைத்தான் பார்க்க முடிந்தது. நகராட்சி ஊழியர்கள் வந்து புரட்டிப் போட்டபோது, இறுக அணைத்திருந்த மூட்டையைப் பார்த்தார்கள். அதற்குள் இருந்தவை கொஞ்சம் மணிமாலைகள். ஒரு கசவு நேரியல். ஒரு புகைப்படம். மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் படம்.

அரை நூற்றாண்டுக் காலமாகக் கலையாமலிருந்த சுந்தரி செல்லம்மாவின் கனவு, நகராட்சியின் சொர்க்க ரதத்தில் பயணம் செய்து பொது மயானத்தின் தர்மச் சிதையில் எரிந்து சாம்பலானது. செல்லம்மாவின் பிறந்த தேதி யாருடைய நினைவிலும் இல்லை. ஆனால், மறைந்த தேதி நாளிதழ்களில் இடம்பெற்று வரலாற்றுச் சான்றாக நிலைத்திருக்கிறது. அது 1996 ஜூலை 30.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்து வந்த ஆரம்ப நாள்களில் கேட்ட நகரக் கதைகளில் சுந்தரி செல்லம்மாவுடையதும் ஒன்று. சொன்னவர்கள் இதை நிஜம் என்று உறுதி செய்தபோதும் நம்பிக்கை ஏற்படவில்லை. சுவாரசியம் கருதி யாரோ திரித்துவிட்ட கைச்சரக்கு என்றே தோன்றியது.

‘`இல்லை. அது உண்மையான கதைதான்’’ என்று உறுதிப்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் அமரர் நரேந்திர பிரசாத். கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், மலையாளத்தின் முக்கியமான இலக்கியவாதிகளில் ஒருவர். விமர்சகர்; நாடகாசிரியர். `நாட்டிய க்ருஹம்' என்ற குழுவை உருவாக்கி நாடகங்களை இயக்கியவர். மலையாளத் திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்தவர். கவிஞர் இந்திரபாபுவின் ‘நாட்டிய சாலை’ என்ற நூல் வெளியீட்டில் நரேந்திர பிரசாத்துடன் நானும் பங்கேற்றேன். வருடம் 2002. அவரும் திருவிதாங்கூர்க்காரர்; அதிலும் பாலராம வர்மாவின் காலத்தைச் சேர்ந்தவர் என்பதால், கேள்விப்பட்ட செல்லம்மாவின் கதை உண்மைதானா என்று விசாரித்தேன்.

‘`சந்தேகமே வேண்டாம். அது நூறு சதவிகிதம் வாஸ்தவம். நானே அவரைப் பார்த்திருக்கிறேன். அவரை மையமாக வைத்து ‘ராணி அம்மச்சி’ என்று நாடகமும் எழுதியிருக்கிறேன். ஆனால், அதை மேடையேற்றுவதில் சிக்கல்கள் இருக்கின்றன’’ என்றார். குறிப்பிட்ட நாடகம் எழுதப்பட்டு முப்பத்தைந்தும், எழுதிய நரேந்திர பிரசாத் மறைந்து பதின்மூன்றும் ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு மேடையில் நிகழ்த்தப்பட்டது.

மகாராஜாவின் காதலி  - வரலாறு

இரண்டாமவரான நண்பர் ரவிகுமார் பத்திரிகையாளர், கவிஞர். அவரும் சுந்தரி செல்லம்மாவைப் பார்த்திருப்பதாகச் சான்றளித்தார். ‘`வடக்கே நடையிலிருந்த ஒரு ஓட்டலில்தான் அவருக்கு உணவு கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டதும் `பொன்னு தம்புரான் நீண்ட நாள் வாழ்க’ என்று வாழ்த்துவார். அப்படிச் சொல்லும்போது `இந்தப் பெண்மணிக்கா பைத்தியம்' என்று நினைக்கத் தோன்றும்.’’

இவ்வளவு பேர் பார்க்கத் தெருவில் அலைந்த சுந்தரி செல்லம்மாவை, மகாராஜா ஒருமுறையாவது பார்க்காமல் இருந்திருப்பாரா? பார்த்திருக்கலாம்.

பத்மநாப சுவாமி ஆலய உற்சவத்தின் பகுதியாக நடைபெறும் ஆறாட்டில் மன்னர் உடைவாள் ஏந்தி முன்னணியில் நடந்து வருவது வழக்கம். ஒருமுறை ஆறாட்டின்போது நடந்துவந்த தன் காதல் நாயகனை சுந்தரி செல்லம்மா பார்த்திருக்கிறார். திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி மன்னரை நோக்கி ஓடிவந்த செல்லம்மாவைப் படைவீரர்கள் தடுத்து விரட்டினார்கள். தள்ளாடி விழுந்த செல்லம்மாவை ஓரமாக இழுத்துச் செல்ல முயன்றபோது, மன்னர் கைகாட்டித் தடுத்தார். அப்போது அந்த உன்மத்தக் காதலியை அவர் பார்த்திருப்பாரா இல்லையா?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தின் நான்கு நடைகளைக் கடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் பார்த்தே இராத சுந்தரி செல்லம்மாவின் நிழலான தோற்றமும் தொடர்ச்சியாக இந்தக் கேள்வியும் அபூர்வமாக மனதுக்குள் எழும். துக்கம் ததும்பும். பைத்தியக்கார மனசு என்று சொல்லிக்கொள்ளவும் தோன்றும்!