Published:Updated:

கோயிலுக்குள்ளே சித்திரைத் திருவிழா! - கொந்தளிக்கும் மதுரை...

சித்திரைத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
சித்திரைத் திருவிழா

மதுரை மட்டுமன்றி, தென்மாவட்ட மக்களும் திரளாகக் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழா, மக்கள் உணர்வுடன் கலந்தது.

கோயிலுக்குள்ளே சித்திரைத் திருவிழா! - கொந்தளிக்கும் மதுரை...

மதுரை மட்டுமன்றி, தென்மாவட்ட மக்களும் திரளாகக் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழா, மக்கள் உணர்வுடன் கலந்தது.

Published:Updated:
சித்திரைத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
சித்திரைத் திருவிழா

‘கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா கோயிலுக்குள் மட்டும் நடக்கும்’ என்று கொரோனாவைக் காரணம் காட்டி அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பால் கொந்தளித்த மதுரை மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதே நேரத்தில், ‘சித்திரைத் திருவிழாவை பிரமாண்டமாக நடத்துவதைத் தவிர்ப்பதற்கு, கொரோனா மட்டும் காரணமல்ல’ என்று சொல்லப்படும் தகவல்களும் கவனிக்கவைக்கின்றன.

‘சித்திரைத் திருவிழாவை மக்கள் பங்களிப்புடன் நடத்தியே ஆக வேண்டும்’ என்ற கோரிக்கையுடன், ஏப்ரல் 12-ம் தேதி தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள், பெண்கள் எனப் பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன் நாட்டுப்புறக் கலைஞர்களும் போராட்டத்தில் சேர, போராட்டம் பெரிதாகிவிடக் கூடாது என்று நினைத்த காவல்துறையினர், அவர்களை அடித்து உதைத்து வேனில் ஏற்றினார்கள். இதனால், மதுரை மாநகரம் கொதிநிலையில் இருக்கிறது.

கோயிலுக்குள்ளே சித்திரைத் திருவிழா! - கொந்தளிக்கும் மதுரை...

இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் இது பற்றி நம்மிடம் கொதிப்புடன் பேசினார். ‘‘மதுரை மட்டுமன்றி, தென்மாவட்ட மக்களும் திரளாகக் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழா, மக்கள் உணர்வுடன் கலந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றும் நாளிலிருந்து கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிச் செல்லும் 10 நாள்களும் மதுரை மாநகரமே கொண்டாட்டமாக இருக்கும். திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, மதுரையில் வியாபாரம் களைகட்டும்.

ஆனால், தமிழக அரசோ கொரோனாவைக் காரணம் காட்டி, தமிழரின் பண்பாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையிலும், வழிபாட்டு உரிமையைத் தடுக்கும் வகையிலும் செயல்படுகிறது. வாக்குப்பதிவுக்கு முன்பு வரை கட்சிகள் பிரசாரம் செய்யவும், மக்கள் கும்பலாகச் செல்லவும் தடை விதிக்காத அரசு, சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தடை போடுவதை எப்படி ஏற்க முடியும்? கடந்த வருடமே பலரும் நேர்த்திக்கடனை முடிக்கவில்லை. இந்தநிலையில்தான், தேர்தல் பிரசாரம் நடந்ததைப் பார்த்து, எப்படியும் சித்திரைத் திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பலரும் நேர்த்திக்கடன் வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றுவது? மக்கள் பங்களிக்க அனுமதியளிக்கவில்லை என்றால், நாங்களே சாமியைத் தூக்கி வந்து பாரம்பர்யமான முறையில் சித்திரைத் திருவிழாவை நடத்துவோம்’’ என்றார்.

தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி, ‘‘கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்காமல் இருந்தாலும், சித்திரைத் திருவிழாவை அதிகாரிகள் நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. காரணம், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரை மாநகரத்தை அலங்கோலப் படுத்தியிருக்கிறார்கள். சித்திரைத் திருவிழாவுக்கு வரும் வெளியூர் மக்கள் இரவில் தங்கும் தமுக்கம் மைதானத்தில் புதிய அரங்குகள் கட்டுவதாகக் கூறி அடைத்துவிட்டார்கள். தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காகவே இந்த முயற்சி. இதை எதிர்த்து, கடந்த வருடம் சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை.

கோயிலுக்குள்ளே சித்திரைத் திருவிழா! - கொந்தளிக்கும் மதுரை...

அதேபோல, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாசி வீதிகளில் தரமற்ற சிமென்ட் சாலை அமைத்திருக்கிறார்கள். அங்கு தேரோட்டம் நடத்தினால், அந்தச் சாலை தாங்காது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி, கரையோர சாலைப் பணியை இன்னும் முடிக்கவில்லை. ஏற்கெனவே, மதுரைக்குள் பரந்து விரிந்து ஓடிய வைகையை ஆக்கிரமித்து அகலத்தைச் சுருக்கிவிட்டார்கள். இந்தநிலையில், கரையோர சாலைகள் அமைப்பதாகக் கூறி கால்வாய் மாதிரி ஆக்கிவிட்டார்கள். இப்படி இருக்கும்போது, அவர்கள் எப்படித் திருவிழாவை வெளியில் நடத்துவார்கள்? அதனால்தான், கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி மக்களைப் பங்களிக்கவிடாமல் தடைவிதித்துவிட்டார்கள். இதைப் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம்’’ என்றார் கொந்தளிப்பாக.

மீனாட்சியம்மன் கோயிலில் ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், ‘குறிப்பிட்ட நேரம் மக்கள் வந்து வழிபடலாம்’ என்று கோயில் நிர்வாகம் முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கும் அனுமதி இல்லை. இது மக்களை இன்னும் கோபப்படுத்தியுள்ளது. ‘அதிகாரிகள், வி.ஐ.பி-கள் மட்டும் கலந்துகொள்ளவும், பிரமாண்ட சித்திரைத் திருவிழாவை சிறிய விழாவாக மாற்றவும்தான் இந்தக் கட்டுப்பாடா?’ என்ற கேள்வியை மக்கள் எழுப்பிவருகிறார்கள்.

சோலைக்கண்ணன் - அன்புநிதி - கருமுத்து கண்ணன்
சோலைக்கண்ணன் - அன்புநிதி - கருமுத்து கண்ணன்

இது பற்றி மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் கேட்டபோது, ‘‘திருக்கோயில் ஆகமங்கள்படி பூஜைகள், விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், அரசின் உத்தரவுப்படி மக்கள் அதில் கலந்துகொள்ள முடியாது. அதேநேரம், கோயிலுக்குள் வழக்கம்போல் தரிசனம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ‘கடந்த ஆண்டுதான் முடியவில்லை. இந்த ஆண்டாவது மக்கள் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும்’ என்றுதான் நாங்களும் விரும்பினோம். ஆனால், தற்போது கொரோனா மிகவும் வேகமாகப் பரவுவதாகச் சொல்கிறார்கள். மக்கள்நலனைக் கருதியே, அரசு வழிகாட்டுதல்படி திருவிழாவை நடத்துகிறோம்’’ என்றார்.

மேற்கண்ட எல்லா விவாதங்களையும் சர்ச்சைகளையும் தாண்டி அச்சுறுத்துகிறது கொரோனா. நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism