Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகு சென்னை எப்படி இருக்கிறது? - சி.ஐ.ஐ கருத்தரங்கின் சுவாரஸ்யங்கள்..!

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை

கொரோனா பாதிப்பால் விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளின் எண்ணிக்கை 94% வரை குறைந்துள்ளது.

டந்த ஆறு மாதங்களாக நிலவிவரும் கொரோனாவால் இந்தியாவின் எல்லா நகரங்களுமே மாறியிருக்கின்றன. ஆனால், சென்னை நகரமோ அதிக மாற்றங்களைக் கண்டுள்ளது என்பது சி.ஐ.ஐ (Confederation of Indian Industry) அமைப்பு சமீபத்தில் நடத்திய ‘சென்னை இன்ஃப்ரா’ என்ற கருத்தரங்கின் மூலம் தெரிய வந்திருக்கிறது. நான்காண்டுகளாக நடந்துவரும் இந்தக் கருத்தரங்கு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் தெரியவந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இனி...
சென்னை
சென்னை

பெரும் முன்னேற்றம் கண்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைமைச் செயல் அதிகாரியான ராஜ் செருபால் முதலில் பேசினார். ‘‘சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஊரடங்கு காலத்திலும் குறைந்த ஊழியர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குறைந்த ஊழியர்களுடன் வேலை நடந்தாலும், மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் பணிகள் சிறப்பாக நடந்துவருகிறது. இவ்வருட இறுதியில் வில்லிவாக்கம் டாங்க் முழுமையாகப் புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.

அதிக போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் வசதி இல்லாதது போன்ற காரணங்களால் தி.நகர் பகுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் சிறப்பு நடைபாதை, சைக்கிள் ஷேரிங் போன்ற வசதிகளால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தற்போது பயமின்றி பயணம் செய்கின்றனர். சைக்கிள் ஷேரிங் திட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்க்கிங் மற்றும் வாடகைத் தொகை அரசுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டித் தருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாண்டி பஜார் பகுதியில் பைப்லைன்கள் அனைத்தும் நிலத்தடியில் போடப்பட்டுள்ளன. குழாய்களைச் சரிசெய்ய தனியாகச் சுரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் உள்கட்டமைப்பை ஐரோப்பியத் தரத்துக்குக் கொண்டு செல்வதே நோக்கம்.

சென்னை
சென்னை

இனிவரும் காலங்களில் நகரைக் கட்டமைக்கும்போது, சமூக இடைவெளி, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றைக் கணக்கெடுத்தபின்பே கட்டமைப்பு வேலைகள் தொடங்கப்படும். வறட்சியாலும் வெள்ளத்தாலும் சென்னை பெரும் பாதிப்பை பலமுறை சந்தித்திருக்கிறது. அதனால் மழைநீர் சேகரிப்பைக் கவனத்தில் வைத்துக் கொண்டே பல திட்டங்களை அமைத்து வருகிறோம். உதாரணத்துக்கு, ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாக தி.நகரில் உள்ள பல இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு, நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

ராஜ் செருபால், சந்திரகுமார், கிஷோர்குமார்
ராஜ் செருபால், சந்திரகுமார், கிஷோர்குமார்

வரும் நாள்களில் வேளச்சேரி, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அடையாறு, மைலாப்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் புனரமைக்கப்படும். தானியங்கி சிக்னல்கள், பேருந்து சேவையைப் பற்றி அறிய மொபைல் ஆப் போன்ற திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு உலக வங்கியும் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

குறைந்தது 94% பயணிகள் எண்ணிக்கை..!

விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள உட்கட்டமைப்பு மாற்றங்களைப் பற்றி பேசினார் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் சுனில் தத். ‘‘கொரோனா பாதிப்பால் பயணிகளின் எண்ணிக்கை 94% வரை குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காலக்கட்டத்தைப் பயன்படுத்தி விமான நிலையத்தின் உட்கட்டமைப்பைச் சற்று மாற்றியமைத்துள்ளோம். லக்கேஜ் கவுன்ட்டர், கியோஸ்க் கவுன்ட்டர் போன்ற இடங்களில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்த சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறோம். அதிக பயணிகள் கொள்ளளவைத் தாங்கும் வடிவில் விமான நிலையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு படிப்படியாக விமானச் சேவை தொடங்கப்படும்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவ உள்கட்டமைப்பு வசதி எப்படி இருக்கிறது?

மருத்துவத் துறையில் நிகழும் உட்கட்டமைப்பு மாற்றங்களைப் பற்றி காவேரி மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் சந்திரகுமார் பேசினார்.

கொரோனாவுக்குப் பிறகு சென்னை எப்படி இருக்கிறது? - சி.ஐ.ஐ கருத்தரங்கின் சுவாரஸ்யங்கள்..!

‘‘மற்ற நாடுகள் ஜி.டி.பி-யில் 10% மருத்துவத் துக்காக ஒதுக்கும்போது, இந்தியாவில் 3% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தைச் சுகாதார அமைப்புகள் நிறுவியுள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆயிரம் நோயாளிகளுக்கு நான்கு மருத்துவர்கள் உள்ளனர். இது நார்வே, ஸ்வீடன் போன்ற முன்னேறிய நாடுகளில் காணப்படும் அளவாகும்.

பல சுகாதாரக் குறியீடுகளில் தமிழகம் முதல் இடத்தை வகித்துவருகிறது. ஆனால், 10% நோயாளிகளைக் கவனிக்கும் அரசு மருத்துவமனைகள் சுமார் 60% படுக்கை வசதிகளை வைத்துள்ளன. 90% நோயாளிகளைக் கவனிக்கும் தனியார் மருத்துவமனைகளிடம் 10% படுக்கை வசதிதான் இருக்கிறது. இதனாலேயே மருத்துவச் சேவைகளில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன’’ என்றார் அவர்.

கல்வித் துறையில் இமாலய மாற்றங்கள்..!

கல்வித்துறையில் கொரோனா பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார் செயின்ட் ஜான் பள்ளியின் முதல்வர் கிஷோர்குமார். ‘‘நவீன தலைமுறை மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக்கல்வி பெரும்பலமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் தொழில்நுட்ப பயன்பாட்டைக் கற்றுக்கொள்ள கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்தன. கரும்பலகை வைத்து மட்டுமே கற்றுத் தந்துவந்த ஆசிரியர்கள், தற்போது கணினி மூலமும் பாடம் கற்பிக்கின்றனர். எட்டு மணி நேரம் மாணவர்களை வகுப்பறைகளில் அடைத்து வைத்து பாடம் நடத்துவதைவிட இது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் மனப்பாட முறையிலிருந்து விலகி, கற்பனை மற்றும் அறிவுசார் கல்வியை நோக்கிச் செல்கின்றனர். வகுப்பறைகளை ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக ஈடு செய்யாது என்றாலும், ஆன்லைன் வகுப்புகள் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை’’ என்றார்.

தொழில்பேட்டைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்

இறுதியாக, தொழில்பேட்டைகள் மற்றும் சிப்காட்டுகளின் தரத்தை அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மேம்படுத்த சில வழிகளை மஹிந்திரா வேர்ல்டு சிட்டியின் தலைவர் வைபவ் மிட்டல் எடுத்துச் சொன்னார். துகர் ஹவுஸிங்கின் இயக்குநர் பதம் துகர், வாப்கோ இந்தியாவின் இயக்குநர் கன்னியப்பன் மற்றும் சி.ஐ.ஐ சார்பாக சங்கர் ஆகியோரும் உரையாடினர். ‘‘தடையற்ற மின்வசதி, போக்குவரத்து வசதி மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் வாழ குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை அமைத்து பராமரித்து வரும்போது அரசு தொழிற்பேட்டைகளும் தனியார் டவுன்ஷிப்களைப் போல் சிறப்பாக இயங்க முடியும்'' என்று அவர்கள் கூறினார்கள்.

கோவிட்டுக்குப் பிறகு, சென்னை இன்னும் வேகமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை!

மால்கள் இனி எப்படிச் செயல்படும்?

மெரினா மாலின் இயக்குநர் அஸ்லாம் பக்கீர் முகமது, ‘‘கொரோனாவால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள துறை பொழுதுபோக்கு துறைதான். கொரோனாவுக்குப் பிறகு, மால்களின் கட்டமைப்பு பெரும் மாற்றத்தைச் சந்திக்கும். ஏசிகளுக்குப் பதிலாகக் காற்றோட்ட வசதிகளை அமைத்து மக்கள் எவ்வித இடையூறுமின்றி நேரம் செலவிட ஏதுவாகக் கட்டமைப்பு மாற்றப்படும். உணவகங்கள் பார்சல் சேவைகளை மட்டுமே வழங்கும். நோ-கான்டாக்ட் டெலிவரி முறை பயன்படுத்தப்படும். திரையரங்குகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து திறக்கப்படும். ஆனால், குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் திறக்க மேலும் நாள்களாகும்’’ என்றார்.