Published:Updated:

`கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு’ - ரேஷன் அட்டை வழங்க வெளிப்படையாக லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன்
குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன்

புதிய ரேஷன் அட்டை வழங்க, ரூ.500 லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கொரோனா நிவாரண நிதியாக, ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ரூ2,000 நிவாரணத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில், கொரோனா நிவாரண நிதி பெறுவதற்காக ரேஷன் அட்டை இல்லாதவர்கள், புதிய அட்டை வாங்க, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துவருகின்றனர். ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிப்போரிடம் தாலுகா அலுவலக அதிகாரிகள், ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.500 வீதம் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது.

திண்டுக்கல்: `உங்க தோட்டத்தில தங்கப்புதையல் இருக்கு’ - ரூ.22 லட்சம், 45 பவுன் நகை சுருட்டிய ஜோதிடர்

இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர், குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்று, அங்கிருக்கும் அதிகாரிகளிடம், ரூ.500 மக்களிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரித்துள்ளார். இது தொடர்பாக அவர் எடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய கம்யூனிஸ் கட்சி நிர்வாகி, `அரசாங்கம் காசு வாங்கச் சொல்லியிருக்காங்களா? 500 ரூபாய்க்கு ரசீது கொடுங்க’ என்கிறார். அதற்கு, குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன், `செலவுக்குத்தான் வாங்குறோம். கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு. கொடுக்குறவுங்ககிட்டதான் வாங்குறோம்’ என வெளிப்படையாகவே கூறுகிறார்.

குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன்
குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அதிகாரி சரவணன்

அரசு அதிகாரி ஒருவர், லஞ்சம் வாங்குவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்திப் பேசியது, திண்டுக்கல் மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பான தகவல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் என்ன நடக்கிறது என விசாரிக்க, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். விசாரணை முடிவில், வட்ட வழங்கல் அதிகாரி சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு