Published:Updated:

எங்க வயித்தைக் கட்டி வாயில்லா ஜீவனுங்க பசியாத்துறோம்! - ஊரடங்கு துயரங்கள்

சர்க்கஸ் கலைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்க்கஸ் கலைஞர்கள்

அந்தரத்தில் தொங்கும் சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்க்கை...

எங்க வயித்தைக் கட்டி வாயில்லா ஜீவனுங்க பசியாத்துறோம்! - ஊரடங்கு துயரங்கள்

அந்தரத்தில் தொங்கும் சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்க்கை...

Published:Updated:
சர்க்கஸ் கலைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
சர்க்கஸ் கலைஞர்கள்

`கரணம் தப்பினால் மரணம்...’ இவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்தரத்தில் கம்பியின்மீது நடப்பதும், கயிற்றின்மீது சைக்கிள் ஓட்டுவதும் என அன்றாட பிழைப்புக்காக எமனுடன் மல்லுக்கட்டுகிறார்கள் சர்க்கஸ் கலைஞர்கள். ஏற்கெனவே இவர்களின் தொழில் நலிவடைந்து அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனா எனும் பெருந்தொற்று இவர்களின் வாழ்க்கையை அம்போவென அந்தரத்திலேயே தொங்கவிட்டிருக்கிறது!

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சர்க்கஸ் என்றாலே மனதில் சாகச மழை பொழியும். குறிப்பிட்ட சீஸன்களில், இரவு நேரத்தில் வானில் மிளிரும் சர்க்கஸ் கூடாரத்தின் ஒளிவட்டத்தில் மயங்கிக்கிடந்த நாள்களை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. சர்க்கஸில் முன்வரிசை தொடங்கி கடைசி வரிசை வரை கூட்டம் அள்ளும். கோமாளி வேடம் பூண்டவர் தொடங்கி விலங்குகளை ஆட்டுவிப்பவர் வரை அனைவருமே அங்கு ஹீரோக்கள்தான். ஆனால், காலத்துடன் சேர்ந்து காட்சிகளும் மாறத் தொடங்கின. நவீன யுகம் விழுங்கிய பாரம்பர்ய பொழுதுபோக்குகளில் ஒன்றானது சர்க்கஸ்.

எங்க வயித்தைக் கட்டி வாயில்லா ஜீவனுங்க பசியாத்துறோம்! - ஊரடங்கு துயரங்கள்

இப்போதோ நிலைமை இன்னும் மோசம்... கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முற்றிலுமாக முடங்கிக்கிடக்கிறது சர்க்கஸ் தொழில். `ஜம்போ சர்க்கஸ்’, `கிரேட் பாம்பே சர்க்கஸ்’ என தமிழ்நாட்டில் பிரமாண்டம் காட்டிய பெரும் சர்க்கஸ் கம்பெனிகளெல்லாம் இருக்கும் இடம் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது சிறிய அளவில் சர்க்கஸ் நடத்தும் சிறு குழுக்களின் பரிதாபநிலையைச் சொல்ல வேண்டியதில்லை... கரூர் மாவட்டம், நொய்யல் அருகிலுள்ள நத்தமேடு, குந்தானிபாளையம் ஆகிய கிராமங்களில் அப்படியான சிறு குழுக்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் நேரில் சென்றோம்...

பல தலைமுறைகளாக இங்கு வசித்தாலும் அவர்களிடம் சொந்த நிலமோ, சிறு வீடோகூட இல்லை என்பதுதான் சோகம். இன்னமும் சிறு கூடாரங்களில்தான் வசித்துவருகிறார்கள். குதிரையைவைத்து வித்தை காட்டும் கலைஞர் உமா சண்முகம். அவர் நம்மிடம், “எங்களுக்கு பூர்வீகம் குஜராத். எங்க முன்னோர்கள், நூறு வருஷத்துக்கு முந்தியே இங்கே வந்துட்டாங்க. ஒட்டகம், குதிரை, நாய், ஆடுனு வாயில்லாத ஜீவன்களைவெச்சுக்கிட்டு, ஊர் ஊரா போய் சர்க்கஸ் நடத்துவோம். இப்பல்லாம் வீதிக்கு வந்து சர்க்கஸ் பார்க்குறதை கௌரவக் குறைச்சலா மக்கள் நினைக்கிறாங்க. அதனால, போதுமான வருமானம் இல்லாம திண்டாடிக்கிட்டு இருந்தப்போ, கொரோனா பிரச்னை வேற வந்துருச்சு. இப்ப வீதிக்கும் போய் வித்தை காட்ட முடியலை. நாங்களாச்சும் பரவாயில்லை... எங்களை நம்பியிருக்குற இந்த வாயில்லாத ஜீவன்களைப் பார்க்குறப்போ ரொம்ப வேதனையா இருக்கு. ஒட்டகங்களுக்கும், குதிரைகளுக்கும், ஆடுகளுக்கும் தீவனம் வாங்கிப்போட முடியலை. எங்க வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கிட்டு, அந்த வாயில்லா ஜீவனுங்களோட பசியாத்துறோம்” என்று கண்கலங்குகிறார்.

நெருப்பு வளையத்தில் ஆடும் சர்க்கஸ் கலைஞரான மதியழகன், “இங்கே 200 குடும்பங்கள் வசிக்கிறோம். மொத்தம் 20 குரூப் இருக்கு. ஒட்டகம், குதிரை, ஆடு, நாய் இதைவெச்சு வித்தை காட்டுவோம். இதைத் தவிர சினிமா பாட்டுக்கு ரெக்கார்டு டான்ஸ் ஆடுற குரூப்புகளும் இருக்கு. வேடிக்கை பார்க்குறவங்க அஞ்சு, பத்து கொடுப்பாங்க. சிலர் உப்பு, புளி, அரிசி கொடுப்பாங்க. வெறும் தரையிலேயே அந்தர் பல்டி அடிக்கிறது, தீப்பந்த வளையத்துல பாயுறது, கத்தி பந்தத்துல பாயுறதுனு சாகசமும் பண்ணுவோம். கொஞ்சம் அசந்தா, நெருப்பு உடம்பைப் பொத்தல் போட்டுடும். கத்தி வெட்டிரும். அப்படிக் காயம்பட்டாலும் நிக்காம பொழப்பு ஓடிக்கிட்டிருந்துச்சு. இப்ப ரெண்டு வருஷமா சோத்துக்குக்கூட இல்லாம சீப்பாடு படுறோமய்யா” என்றபோது அவரது குரல் வேதனையில் கமறியது!

மதியழகன், உமா சண்முகம், குமார்
மதியழகன், உமா சண்முகம், குமார்

நத்தமேடு, குந்தானிபாளையம் போலவே அச்சுஅசலாக இருக்கிறது மானாமதுரை சிப்காட் கங்கையம்மன் குடியிருப்பு. அங்கும் சர்க்கஸ் தொழிலை வாழ்வாதாரமாகக்கொண்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு வசிக்கும் சர்க்கஸ் கலைஞர் குமார். “மோட்டார் வண்டியில ஊர் ஊராப் போய் சர்க்கஸ் நடத்தி, பொழப்பு ஓடிக்கிட்டிருந்துச்சு. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி மதுரைக்குப் பக்கத்துல பனையூருல சர்க்கஸ் போடப் போனோம். திடீர்னு ஊரடங்கு போட்டுட்டாங்க. அங்கே மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டோம். அதுக்கப்புறம் எந்த வருமானமும் இல்லைங்க. எத்தனை நாளைக்குத்தான் வீட்ல சும்மா இருக்குறது... எப்படிச் சாப்புடுறது? சில பேரு கூலி வேலைகளுக்குப் போறாங்க. சிலரு ரோட்டுல ஆடி வித்தை காட்டுறாங்க. நூறு இருநூறு கிடைக்கும். சில நாள் எதுவும் கெடைக்காது. போன வாரம் புதுக்கோட்டைக்குப் பக்கத்துல போய் சர்க்கஸ் பண்ணிட்டு திரும்பி வர்றப்போ, எங்க வண்டி கீழே சாய்ஞ்சு சாமானமெல்லாம் டேமேஜ் ஆகிடுச்சு...” விரக்தியுடன் பேசினார் குமார்.

பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கும் தமிழகத்தில் நல வாரியங்கள் இருக்கும் நிலையில் சர்க்கஸ் கலைஞர்களுக்கென்று நலவாரியம் எதுவும் இல்லை. இதனால், அரசின் கவனத்துக்கு இதுவரை இவர்களின் துயரம் எடுத்துச் சொல்லப்படவில்லை. இவர்களுக்கு நல வாரியம் அமைப்பதுடன், பசியிலும் பஞ்சத்திலும் வாடும் சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அனைவரையும் மகிழ்விக்கும் சர்க்கஸ் கலைஞர்களை மகிழ்விக்குமா தமிழக அரசு?