Published:Updated:

‘கிடைச்சிடுச்சு... ஆனா கிடைக்கலை...’ பலனளிக்காத பயிர்க் காப்பீடு!

பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
News
பிரச்னை

பிரச்னை

விதை தானாக விளைச்சலைக் கொடுப்பதில்லை. விவசாயிகளின் கடும் உழைப்பும் அதில் இருக்கிறது. விவசாயிகள் விதைப்பு முதல் அறுவடை வரை ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அவ்வப்போது ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகள் நிலைகுலைய வைத்து விடுகின்றன. மகசூல் இழப்பு ஏற்படும்போது, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடுகிறது. இது போன்ற பிரச்னைகளைச் சமாளிப்பதற்காகத்தான் விவசாயிகள் தங்கள் பயிரை, காப்பீடு செய்கிறார்கள். `விளைச்சல் கைவிட்டாலும், காப்பீட்டுத் தொகை தங்களைக் கரை சேர்க்கும்’ என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு நியாயமாகவும் சட்டப்படியாகவும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுக்கின்றன.

தனபால், ஜெயசீலன்,  சுந்தர 
விமல்நாதன்
தனபால், ஜெயசீலன், சுந்தர விமல்நாதன்

2016-17, 2017-18-ம் ஆண்டுகளில் வறட்சியால் விளைச்சலை இழந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில்தான் கஜா புயலால், கடந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதி முழுவதும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. வருவாய் இழப்பைச் சந்தித்த விவசாயிகள், இந்த முறை தங்களுக்கு இழப்பீடு கிடைத்துவிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர்க் காப்பீட்டு நிறுவனம் சில விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியபோதிலும், அது அவர்களுக்கு வந்து சேரவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் வாங்கியிருந்த கடனுக்கு, அந்தத் தொகை வரவு வைக்கப்படுவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

இது தொடர்பாகப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலூகா, பூதராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால், “நான் அஞ்சு ஏக்கருக்குப் பிரீமியம் கட்டியிருந்தேன். எங்க வருவாய் கிராமங்கள்ல, `45 சதவிகிதம் மகசூல் இழப்பு’னு இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இந்தக் கணக்குபடி எனக்கு ஏக்கருக்கு 13,275 ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கு. ஆனா, இந்தத் தொகையை நான் ஏற்கெனவே வாங்கியிருந்த விவசாயக் கடனுக்கு வரவு வெச்சிக்குவோம்னு எங்க ஊர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் சொல்றாங்க. பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையை, விவசாயக் கடனுக்கு வரவு வைக்கிறது முறைகேடானது. நான் முன்னாடி பயிர்க்கடன் வாங்கினப்போ, எனக்கு அஞ்சு ஏக்கர் 10 சென்ட் நிலம் இருக்கிறதா கணக்குக் காட்டியிருந்தேன். அஞ்சு ஏக்கர் வரை நிலம்வெச்சிருக்குற சிறு குறு விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்யறதா தமிழக அரசு அறிவிச்சுது. மற்ற விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்யணும்னு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, மதுரை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்ததால், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி பொருந்தும்னு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செஞ்ச வழக்கு, உச்ச நீதிமன்றத்துல நடந்துகிட்டு இருக்கு. நான் வாங்கியிருந்த கடன் என்னாகும்னே தெரியாத நிலையில, அதுக்கு என்னோட பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையை வரவு வைப்பது, நீதிமன்றத்தை அவதிமதிக்கும் செயல்” என்று ஆதங்கப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த விவசாயி ஜெயசீலன், “ரெண்டு ஏக்கருக்கு பிரீமியம் கட்டியிருந்தேன். பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு பெறும் விவசாயிகள் பட்டியல்ல என் பெயர் இல்லை. கஜா புயல்ல எங்க ஊர்ல இருக்குற எல்லா விவசாயிகளுக்குமே மகசூல் இழப்பு ஏற்பட்டுச்சு. எங்க வருவாய் கிராமங்கள்ல `58 சதவிகிதம் மகசூல் இழப்பு’னு பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிவிச்சிருக்கு. அந்தக் கணக்குப்படி பார்த்தா, எனக்கு ரெண்டு ஏக்கருக்கு, 34,000 ரூபாய்க்கு மேல இழப்பீட்டுத் தொகை வந்தாகணும். ஆனா எனக்குக் கிடைக்கலை. என்னை மாதிரி இன்னும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளோட பெயர் விடுபட்டிருக்கு. விதிமுறைப்படி, ஒரு குறிப்பிட்ட வருவாய் கிராமத்துக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டால், அந்த வருவாய் கிராமத்துல, பிரீமியம் கட்டின எல்லா விவசாயிகளுக்குமே இழப்பீடு வழங்கப்படணும்” என்றார்.

பிரச்னை
பிரச்னை

இது போன்ற ஆதங்கக் குரல்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஒலிக்கின்றன. திருவாரூர் மாவட்டத்தில் புள்ளியியல் துறை, வருவாய்த்துறை கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக ஏராளமான கிராமங்களுக்குப் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லையென இந்தப் பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலைமைதான்.

இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதன் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “2016-17, 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடம் வாங்கிய பிரீமியம் தொகை 47,467 கோடி ரூபாய். ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோ 31,612 கோடி ரூபாய். கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் பார்த்திருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால்தான், விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போகிறது. பயிர்க் காப்பீடு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு இழப்பீட்டுத் தொகை போய்ச் சேரும் வரை அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

‘‘இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடம் வாங்கிய பிரீமியம் தொகை 47,467 கோடி ரூபாய். ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோ 31,612 கோடி ரூபாய்.’’

`கடந்த இரண்டு ஆண்டுகளில், தகுதியிருந்தும் கொடுக்காமல் விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என எங்கள் சங்கத்தின் சார்பாக வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். பயிர்க் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் இழப்பீடு வாங்குவதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே பயிர்க் கடனுக்கு வரவு வைக்கின்றன. இது சட்டவிரோதம்” என்கிறார் கொந்தளிப்புடன்.

இது குறித்துத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். “தற்போது கிடைத்திருக்கும் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை மூலம் பழைய கடனை அடைத்துவிட்டு, புதிதாகப் பயிர்க் கடன் பெற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், `விவசாயிகள் விரும்பினால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். மகசூல் இழப்பைச் சந்தித்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு கிடைத்துள்ளது” என்றார்.