Published:Updated:

2K kids: பாத பூஜை இருக்கட்டும், தண்ணி கேட்டா கொடுப்பீங்களா?!

 அஞ்சலை -  ராணி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலை - ராணி

- ப.திவ்யபாரதி

ஒவ்வொரு வேலையிலும் அதற்கான சாதக, பாதகங்கள் உண்டு. என்றாலும், சில வேலைகளில் கைக்கு வரும் சொற்ப சம்பளக் காசைத் தவிர, சாதகம் என்று எதையும் நம்மால் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேலைதான், தூய்மைப் பணியாளர்களின் பணி. அந்த வேலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த இவர்கள்.

அஞ்சலை

‘`41 வயசாகுது. ஒன்பது வருஷமா இந்த வேலதான் செய்றேன். 15 வயசுல வீட்டுல கல்யாணம் பண்ணி வெச்சாங்க. மூணு ஆம்பளப் புள்ள, ஒரு பொம்பளப் புள்ள. வீட்டுக்காரர் குப்புசாமி பெயின்ட் வேலை செய்றார். நாலு புள்ளைகளயும் பசியாத்தி வளர்த்து நல்லா படிக்க வைக்கத்தான் ஆசப்பட்டோம். ஆனாலும், ஒரு புள்ளையதான் படிக்க வெக்க முடிஞ்சது. புள்ளைக கல்யாணத்துக்கு கடன் வாங்கு னோம். கடன் தொல்லைய சமாளிக்க முடியாமதான் நான் இந்த வேலைக்கு வந்தேன்.

எந்த வேலை இங்க சுலபமா இருக்கு, எல்லா வேலையும் கஷ்டம்தான். ஆனா, நாங்க செய்ற இந்த வேலைக்கு சகிப்புத்தன்மை ரொம்ப அவசியம். மக்குற குப்பை, மக்காத குப்பைனு அரசாங்கம் பிரிக்கச் சொன்னாலும், மக்கள் கேட்க மாட்டாங்க. குப்பையைக் கொண்டு வந்து கொட்டும்போது, அதை அப்புறப்படுத்துற வேலைய அவங்கள மாதிரி சக மனுஷங்கதானே பார்க்கணும்னு எல்லாம் துளியும் நெனச்சுப் பார்க்க மாட்டாங்க. உடைஞ்ச கண்ணாடித் துண்டுகளை ஒரு பாக்கெட்ல போட்டு கொட்டாம, அப்படியே குப்பையோட குப்பையா கொட்டிடுவாங்க. நாப்கினை ஒரு பேப்பர்ல சுத்தி போடமாட்டாங்க. சாப்பாட்டுக் கழிவையெல்லாம் சொதசொதனு கொண்டு வந்து கொட்டுவாங்க. எங்க கையெல் லாம் மரத்துப்போச்சு.

இந்தக் கொரோனா காலத்துல, எங்க வேலை இன்னும் அதிகமாகிப் போச்சு. ஆரம்பத்துல உலகமே வீட்டுக்குள்ள முடங்கினப்பவும், நாங்க மட்டும் உயிரை கையில புடிச்சுக்கிட்டு வேலைக்கு வந்துகிட்டு இருந்தோம். ஆனாலும், நாங்க கொஞ்சம் லேட்டா வந்தாகூட திட்டுவாங்க பாருங்க... அப்போதான் மனசு வெறுத்துப் போகும். ‘தூய்மைப் பணியாளர் கொரோனாவால் மரணம்’னு செய்தி பாக்கும்போதெல்லாம், எங்கள்ல யாரு பொழைச்சு மிஞ்சப்போறானு நம்பிக்கையிழந்து போயிட்டோம். மருத்துவக் கழிவுகள், ரோட்டுல தூக்கி வீசுற மாஸ்க்னு சுத்தம் செஞ்சப்போ, நாளைக்கு நாம உசுரோட இருந்தாதான் உறுதினு நெனச்சுக்கிட்டேதான் பண்ணினோம். இதோ இப்பவும் பண்ணிக்கிட்டிருக்கோம்.’’

 அஞ்சலை -  ராணி
அஞ்சலை - ராணி

ராணி

‘`21 வருஷமா இந்த வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இப்போ எனக்கு 49 வயசாகுது. வீட்டுக்காரர் உடம்பு சரியில்லாம இருக்கார். ஒரு பொண்ணு, படிச்சுக்கிட்டு இருக்கு. குடும்பச் செலவு, வீட்டுக்காரருக்கு மருந்து, மாத்திரை, புள்ளையோட படிப்பு செலவுனு எல்லாத்தையும் இந்த வேலையில வர்ற காசுலதான் சமாளிக்கணும். கஷ்டமெல்லாம் என்னோட போகட்டும். என் பொண்ணு பேங்க்குல வேலை பார்க்கணும். அதுக்கு அவளை படிக்க வைக்கணும். எனக்கு சர்க்கரைநோய், மூட்டுவலினு எல்லாம் இருக்கு. ஆனா, அதுக்காகவெல்லாம் ஒரு நாள், பொழுது உடம்புக்கு ஓய்வு கொடுக்க முடியாது. ஓடிக்கிட்டேதான் இருக்கணும். குப்பையை அள்ளி அள்ளி கைவலி திகுதிகுனு அதிகமாகும்போது, வீட்டோட நிலைமையை நெனச்சுக்குவேன்.

எங்களை இனி துப்புரவுப் பணியாளர் கள்னு சொல்லக் கூடாது, தூய்மைப் பணியாளர்கள்னு சொல்லணும்னு சொன்னாங்க. கொரோனா காலத்துல எங்களுக்கு ‘முன்களப் பணியாளர்கள்’னு பேரு சொன்னாங்க. சில ஊருகள்ல எங்கள மாதிரி பணியாளர்களுக்கு பாத பூஜையெல்லாம் செஞ்சதை நியூஸுல பார்த்தோம். ஆனாலும், எங்க நிலைமை என்ன மாறியிருக்கு... வேலைக் களைப்புல தாகமா, பசியா, மயக்கமானு தெரியாம கண்ணைக் கட்டிக்கிட்டு வரும்போது, நாங்க தண்ணி கேட்டா, எத்தனை வீடு கள்ல எங்களை மனுஷங்களா நெனச்சுக் கொடுப்பாங்கனு நெனக்கிறீங்க... இதுதான் எங்களோட உண்மையான நிலைமை.’’

நாட்டின் சுத்தம், சுகாதாரம் எல்லாம் இந்தக் கைகள் இடும் கருணையே!