Published:Updated:

தென்காசி:`வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்!' - நிவாரண உதவித் தொகை அறிவித்த முதல்வர்

உயிரிழந்த அணைக்கரை முத்து
உயிரிழந்த அணைக்கரை முத்து

தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார் என்பதற்காக விவசாயியை இரவு நேரத்தில் வனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்கள். அந்தச் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

வனத்துறை அலுவலகம்
வனத்துறை அலுவலகம்

சாத்தான்குளம் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து என்ற 75 வயது நிரம்பிய விவசாயி, வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தென்காசி: வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்! - மாஜிஸ்திரேட் விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்

உயிரிழந்த அணைகரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அவரைத் தாக்கியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மூன்று நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வனத்துறை அலுவலகத்தில் விசாரணை
வனத்துறை அலுவலகத்தில் விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தினார்.

வனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை
மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை

உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் குடும்பத்தினரில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்குப் பின்னர், தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு