Published:Updated:

கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்!

கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்

அந்தக் காலத்துல தலைமைப் பொறுப்புல இருந்தவங்க சேவை மனப்பான்மையோட இருந்தாங்க. பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம, எந்தப் பிரச்னையா இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே சுமுகமா, நியாயமா தீர்த்துவெச்சாங்க.

கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்!

அந்தக் காலத்துல தலைமைப் பொறுப்புல இருந்தவங்க சேவை மனப்பான்மையோட இருந்தாங்க. பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம, எந்தப் பிரச்னையா இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே சுமுகமா, நியாயமா தீர்த்துவெச்சாங்க.

Published:Updated:
கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்
‘சோத்துக்கு உப்பு நல்லதுதான்; அளவுக்கு மிஞ்சிப் போச்சுன்னா தின்ன முடியாது சார்!’ அந்த மீனவர் சொன்ன உதாரணம் சரிதான். மீனவக் கிராம மக்களின் நலனுக்காக, அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்காக உருவான ‘கிராமக்குழு, ‘கிராமப் பஞ்சாயத்து’ போன்ற அமைப்புகளில் இன்று அதிகாரம் மிகுந்து, கட்டப் பஞ்சாயத்துகளாக மாறி அந்த மக்களுக்கே ஆபத்தாகக் குறுக்கே நிற்கின்றன. இந்த அமைப்புகளிலிருக்கும் ஒரு சாரார் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதால், அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தமிழகம் முழுக்கவுள்ள கடலோரப் பகுதிகளில் புகார்கள் எழுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்!

நாகை மாவட்டம், பூம்புகார் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தன் மருமகனுடன் சேர்ந்து விசைப்படகு வாங்கி, பல்வேறு இடங்களில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்தார். அவரின் வளர்ச்சி பிடிக்காத பஞ்சாயத்தார், கூட்டத்தைக் கூட்டி ‘வெளியூருக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது’ என்று கட்டுப்பாடு விதித்தனர். ‘வருமானத்துக்காகத்தானே வெளியூருக்குச் சென்று தொழில் செய்கிறேன். அதில் என்ன தவறு?’ என்று கேட்டிருக்கிறார் லட்சுமணன். அதனால் அவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஊரைவிட்டுத் தள்ளிவைத்தார்கள். ‘அவர்களுடன் யாரும் பேசக் கூடாது. மளிகைப் பொருள், குடிநீர் உட்பட எதையும் கொடுக்கக் கூடாது. மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்’ என்று ஊர்க்கட்டுப்பாடு போட்டுள்ளனர். லட்சுமணனின் இரு மகள்கள் கல்லூரியில் படித்துவந்தனர்; அவர்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தங்களின் நிலை குறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பலனும் இல்லை. கிராமப் பஞ்சாயத்துமீது புகார் கொடுத்ததற்காக அவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தொழில் செய்யவும் அனுமதிக்கவில்லை. ஊரில் யாருடைய ஒத்துழைப்பும் கிடையாது என்ற நிலையில், மனவேதனைக்கு உள்ளாகி, தற்கொலைக்கு முயன்ற லட்சுமணன் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்!

அரசு அதிகாரிகளும் உடந்தை!

இது குறித்து மீனவக் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேசினோம், “அந்தக் காலத்துல தலைமைப் பொறுப்புல இருந்தவங்க சேவை மனப்பான்மையோட இருந்தாங்க. பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம, எந்தப் பிரச்னையா இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே சுமுகமா, நியாயமா தீர்த்துவெச்சாங்க. ஆனா, இப்போ நாட்டார், பஞ்சாயத்தார்கள்ல ஒரு சிலர், தப்பான நோக்கத்துல செயல்படுறாங்க. இதனால, பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரி கொடுமைகளுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையா இருக்கிறதுதான் ரொம்ப வேதனையா இருக்கு. பிரச்னைனு போய் அதிகாரிகள்கிட்ட நின்னா, ‘உங்க பிரச்னையை உங்க கிராமப் பஞ்சாயத்துலேயே தீர்த்துக்கோங்க’னு நழுவுறாங்க. அதனால, பஞ்சாயத்தாரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாம மீனவ மக்கள்ல பல பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறாங்க” என்று ஆதங்கப்பட்டனர்.

காதலுக்கு அபராதம்!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தில், காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்தாரின் அந்தத் தீர்ப்பைத் தட்டிக்கேட்ட மூன்று குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கிவைத்துவிட்டனர். இதுபற்றி மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை.

கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்!

தொடரும் சட்ட விரோத நடவடிக்கைகள்!

மீனவ கிராமங்களில் நடக்கும் இவ்வகைக் கட்டப் பஞ்சாயத்துகள் குறித்து நம்மிடம் பேசிய ‘நாம் மக்கள் இயக்கம்’ தலைவரான வழக்கறிஞர் சங்கமித்திரன், ‘‘சமூகத்திலிருந்து யாரையும் தள்ளிவைக்கச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இப்படியான கட்டப் பஞ்சாயத்துக் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பூம்புகார் மீனவர் லட்சுமணன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து, இரண்டாண்டுக் காலமாக அவரின் பிள்ளைகளின் படிப்பையும் கெடுத்து, அந்தப் பெண்களுக்குத் திருமணம் நடக்கவிடாமல் கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்த தகவல் என் கவனத்துக்கு வந்ததும், போலீஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டதால் ஏழு பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அம்மன் கோயில்பத்து என்ற கிராமத்தில் 10 குடும்பத்தினரை ஒதுக்கிவைத்திருந்தார்கள். அவர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அவர்களைக் கிராமத்தோடு இணைத்துவைத்தேன். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் ரூ.3,20,000 வாங்கிக்கொண்டு ஒருவருக்கு விவகாரத்து கொடுத்திருக்கிறார்கள். இப்படி இவர்களே சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்’’ என்று வருத்தப்பட்டார்.

அதிகாரிகளின் லட்சணம்!

இத்தகைய புகார்கள் தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியைப் பலமுறை தொடர்புகொண்டும் பதிலில்லை. நேரில் சென்றபோது, நேர்முக உதவியாளரிடம் பேசச் சொன்னார். நேர்முக உதவியாளரிடம் கேட்டபோது, செக்‌ஷன் அலுவலர் ஒருவரைக் கைகாட்டினார். அவர், ‘‘இது தொடர்பான புகார்களை தரங்கம்பாடி தாசில்தாருக்கு அனுப்பி விசாரணை செய்யச் சொல்லியிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை’’ என்றார். தரங்கம்பாடி தாசில்தார் கோமதியிடம் கேட்டபோது, ‘‘நான் விசாரித்தவரை ஊரில் யாரையும் விலக்கிவைக்கவில்லை என்று சொல்கிறார்கள். மீண்டும் விசாரித்து, பிறகு சொல்கிறேன்’’ என்றார்.

சங்கமித்திரன் - லட்சுமணன்
சங்கமித்திரன் - லட்சுமணன்

சீர்காழி டி.எஸ்.பி-யான யுவப்பிரியாவிடம் கேட்டபோது, ‘‘நான் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் அமைதிக் கூட்டம் போட ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். நாகை கலெக்டர் பிரவீன் கே நாயரிடம் கேட்டபோது, ‘‘இது பற்றிய புகார்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. விரைவில் தீர்வுக்கான ஏற்பாடுகள் செய்கிறேன்’’ என்றார். ‘மீனவக் கிராமப் பஞ்சாயத்து’ விஷயங்களை அதிகாரிகள் இந்த லட்சணத்தில்தான் கையாள்கிறார்கள். பத்திரிகை நிருபரான நமக்கே இதுதான் பதிலென்றால், பாதிக்கப்பட்டவர்கள் முறையிடச் சென்றால் இவர்களிடம் உரிய நியாயம் கிடைக்குமா?

மக்கள் பஞ்சாயத்து, கட்டப் பஞ்சாயத்தாகாதவரை பிரச்னை இல்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இப்போது வரை ஒதுக்கிவைக்கப்பட்டே இருக்கிறோம்!’’

தூத்துக்குடி மாவட்டம், கொம்புத்துறையைச் சேர்ந்த ஜோயிடம் பேசினோம், ‘‘எங்க கிராமத்துக் குழந்தைகள் இங்குள்ள பள்ளியில்தான் 8-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் ஊரைவிட்டுத் தள்ளிவைக்கப்படுவார்கள். நான் உள்ளிட்ட 10 பேர் கடந்த 2017-ல் எங்கள் பிள்ளைகளை வெளியூர் பள்ளிகளில் சேர்த்தோம். உடனே பஞ்சாயத்தார் கூடி, ‘இப்படிச் சேர்ப்பவர்களுக்குக் கடலில் என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றக் கூடாது. அவர்களின் பிள்ளைகள் வெளியூரிலுள்ள பள்ளிக்குச் சென்று வரும்போது, என்ன நிகழ்ந்தாலும் ஊர் கமிட்டி பொறுப்பு கிடையாது’ என்று அறிவித்தார்கள். அன்றிலிருந்து எங்கள் படகுகளைக் கடலுக்குள் செலுத்த யாரும் உதவவில்லை. பிடித்துவரும் மீன்களை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால், வழக்கு தொடர்ந்து எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு பெற்றோம். ஆனாலும்கூட, இப்போது வரை 10 குடும்பத்தினரும் ஒதுக்கிவைக்கப்பட்டே இருக்கிறோம்’’ என்றார்.

‘‘உள்ளூர் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பிவிட்டால் உள்ளூர் பள்ளி மூடப்பட்டுவிடும். அதைத் தடுக்கவே சில கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்’’ என்கிறார்கள் ஊர் கமிட்டியினர்.

‘‘மாற்று சாதி திருமணம் கூடாது!’’

தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்துக்குக் கொஞ்சமும் சளைத்தவையல்ல தூத்துக்குடி மாவட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்துகள். தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, ‘மாற்று சாதி ஆண்களைக் காதலித்து திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்’ என அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காதல் திருமணம் செய்த 14 பெண்களை வெளியேற வலியுறுத்தினார்கள். இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால், அந்தத் தீர்மானத்தை ஊர் கமிட்டியினர் ரத்துசெய்தார்கள். திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர் கிராமத்தில், மின்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில், ‘100 ரூபாயில் 2 ரூபாய்’ ஊரின் வளர்ச்சிக்கு வரியாக ஊர் கமிட்டிக்குக் கொடுத்துவிட வேண்டும். இதை வசூல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் ஊர் கமிட்டியிடம் வரிப்பணம் குறித்து ஒரு தரப்பினர் கணக்கு கேட்டார்கள். இதில் மோதல் ஏற்பட்டுவிட்டது. கணக்கு கேட்ட 60 குடும்பத்தினர் ஊர்விலக்கம் செய்யப்பட்டனர். அந்த அதிருப்தியில் அனைவரும் பா.ஜ.க-வில் சேர்ந்ததால் சிக்கல் மேலும் அதிகரித்து, விஷயம் வெட்டு குத்து வரை சென்றுள்ளது.

பஞ்சாயத்தால் பாதுகாப்பாக இருக்கிறோம்!

சி.பெர்லின்
சி.பெர்லின்

‘நெய்தல் மக்கள் இயக்க’த்தின் குமரி மாவட்டச் செயலாளரான குறும்பனை சி.பெர்லினிடம் பேசினோம், “கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் நீரோடி முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை கடலோர கிராமங்களின் கமிட்டி என்பது கத்தோலிக்க தேவாலயங்களைச் சார்ந்தது. ஆனால், வட மாவட்டங்களில் அப்படி இல்லை என்பதால், அங்குள்ள நடைமுறை பற்றி எனக்குத் தெரியாது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஊர் கமிட்டி நிர்வாகம் பல்லாண்டு காலமாக இருந்துவருகிறது. ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கிராம கமிட்டி முழுமையாகப் பங்கேற்கும். கிராம கமிட்டி இருப்பதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட யாரும் அத்துமீறி கடற்கரை கிராமங்களுக்குள் நுழைந்துவிட முடியாது. அதேபோல, கடலோரங்களில் கிடைக்கும் அரியவகை தாதுக்களையும் யாரும் எளிதில் கொள்ளையடிக்க முடியாது. கடலோர ஒழுங்காற்று வாரிய விதியின்படி `500 மீட்டருக்குள் கட்டடம் கட்டக் கூடாது’ என்ற விதியை மீறி, சில வருடங்களுக்கு முன்னர் குமரிக் கடலோரப் பகுதிகளில் பீச் ரிசார்ட்ஸ் கட்டும் முயற்சியில் அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். கிராமப் பஞ்சாயத்து அமைப்பினரின் போராட்டங்கள் மூலமாகவே அந்த முயற்சி தடுக்கப்பட்டது. பொதுவாக, கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கடலோர கிராமங்களின் பாரம்பர்யம் பாதுகாக்கப்படுகிறது. மீனவர்களுக்குள் ஏற்படும் சிறிய உரசல்கள்கூட கிராம கமிட்டிகள் மூலமே தீர்க்கப்படுகின்றன. இது போன்ற வலுவான பஞ்சாயத்து அமைப்புகளுடன் மீனவக் கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதை உடைக்கும் நோக்கிலேயே சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதாகச் சந்தேகிக்கிறோம்” என்றார்.

பெரிய கிராமப் பஞ்சாயத்து... சிறிய கிராமப் பஞ்சாயத்து!

புதுச்சேரி மீனவக் கிராமப் பஞ்சாயத்தைப் பொறுத்தவரை, ஊர் விவகாரத்தில் மட்டும்தான் இந்தக் குழுவுக்குள் எதிரெதிர் கருத்துகள் நிலவுமே தவிர, மற்ற விஷயங்களில் பெரும்பாலும் ஒன்றாகவே செயல்படும். தொழிலுக்குச் செல்வது, போராட்டம், மறியல், கோயில் திருவிழாக்களுக்கு வரி வசூல் என இந்தக் குழு சொல்வதை யாரும் மீற முடியாது. பெரிய கிராமப் பஞ்சாயத்தார்களின் உத்தரவுக்கு, சிறிய கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பட வேண்டும். கொலை உள்ளிட்டவற்றில்கூட இந்தப் பஞ்சாயத்தார் பேசி நிவாரணம் பெற்றுக் கொடுத்து வழக்கை முடித்து வைப்பதுண்டு. இதில் சில லகரங்கள் கமிஷனாகக் கைமாறுவதும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism