Published:Updated:

“ஏழைகளை விரட்டிவிட்டு பணக்காரர்களுக்கான திட்டமா?”

கோவை குமாரசாமி காலனி
பிரீமியம் ஸ்டோரி
கோவை குமாரசாமி காலனி

கண்ணீர் வடிக்கும் கோவை குமாரசாமி காலனி மக்கள்

“ஏழைகளை விரட்டிவிட்டு பணக்காரர்களுக்கான திட்டமா?”

கண்ணீர் வடிக்கும் கோவை குமாரசாமி காலனி மக்கள்

Published:Updated:
கோவை குமாரசாமி காலனி
பிரீமியம் ஸ்டோரி
கோவை குமாரசாமி காலனி
கோவையில் 1,100 கோடி ரூபாய் செலவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடந்துவருகின்றன. குளங்களை மேம்படுத்துவதுதான் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பிரதான பணியாக இருக்கிறது. ‘ஐ லவ் கோவை’ என்ற செல்ஃபி கார்னர், பூங்கா, சைக்கிள் பாதை, நடைபாதை என கோவையின் குளக்கரைகள் ஹைடெக்காக மாறிவருகின்றன.

இப்படியான மாற்றங்களுக்காக ஆர்.எஸ்.புரம் பகுதி, முத்தண்ணன் குளத்தை ஒட்டியுள்ள குமாரசாமி காலனிப் பகுதியில் குடியிருக்கும் ஏழை மக்களை கொரோனா பேரிடர் காலத்தையும் பொருட்படுத்தாமல் வெளியேற்றுவது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய குமாரசாமி காலனியைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், ‘‘இங்கு சுமார் 1,500 வீடுகள் இருக்கின்றன. பட்டியலின மக்கள் பெரும் பான்மையாக உள்ளனர். நாங்கள் ஐந்து தலைமுறைகளாக இங்கு வசித்துவருகிறோம். இப்போது எங்களை அவசர அவசரமாக வெளியேற்றுகின்றனர். எங்களுக்கு மாற்று வீடுகள் மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், கோவைப்புதூர் என்று நகரத்துக்கு வெளியே கொடுக்கின்றனர். கோவை மாநகரை உருவாக்கியதில் இங்கு குடியிருக்கும் மக்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நகரத்தை உருவாக்கிய எங்களை இப்போது மாநகருக்கு வெளியே அனுப்புகின்றனர். இங்கே செல்வந்தர்களுக்காகப் பொழுதுபோக்குத் திட்டங்கள் வருகின்றன.

கோவை குமாரசாமி காலனி
கோவை குமாரசாமி காலனி

இந்த முத்தண்ணன்குளத்தில் அதிக அளவில் கழிவுகள் கலக்கின்றன. ‘இந்தக் குளத்து நீர் தொடுவதற்குக்கூட தகுதியானது இல்லை’ என்கின்றன ஆய்வுகள். கோவையிலுள்ள அனைத்துக் குளங்களின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். குளத்தில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, குளத்து நீரை மாசில்லாமல் வைத்திருப்பதைத்தான் நியாயமாக இவர்கள் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மக்களை வெளியேற்றுவது எந்தவிதத்திலும் பலனளிக்காது. முக்கால்வாசி மக்கள் மாற்று வீடுகளை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். மீதமிருக்கும் எங்களைப் போன்றோர் அருகிலேயே நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குமாரசாமி காலனியில் இருந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று வீடுகளும் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

வேல்முருகன் - ஷ்ரவன் குமார் ஜடாவத்
வேல்முருகன் - ஷ்ரவன் குமார் ஜடாவத்

அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணாத்தாள், ‘‘என் புருஷன் குடிக்கு அடிமையானவர். நான் வீட்டு வேலைக்குப் போய், என் ரெண்டு குழந்தைகளையும் வளர்க்கிறேன். ரொம்பவும் சிரமமான நிலைமை. ஆனா, இருக்கிற வீட்டை காலி செய்யச் சொல்றவங்க மாற்று வீடும் தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. நாங்க எங்கே போவோம் சொல்லுங்க? ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கற நிறைய பேர், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மாற்று வீடு வாங்கிட்டாங்க. அப்படி வாங்கின பல பேர் அரசாங்கம் கொடுத்த மாற்று வீட்டுக்குக் குடிபோகாம வாடகைக்கு விட்டிருக்காங்க. கொரோனா பரவிக்கிட்டு இருக்கிற காலகட்டத்துல எங்களை விரட்டினா நாங்க எங்கே போவோம்? எங்களுக்கு வீடு கொடுக்கலைன்னா குழந்தைகளோட தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை’’ என்றார் கண்ணீருடன்.

இது தொடர்பாகப் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ‘‘ஆக்கிரமிப்புகளை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. ஆனால், முத்தண்ணன் குளக்கரையில் அந்த மக்களைக் குடியேற அனுமதித்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது இதே அரசாங்கம்தான். இதே கோவையில் அரசின் பொது ஒதுக்கீட்டு நிலங்கள் மற்றும் யானை வலசைப் பாதைகள் போன்றவை பெரு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்பு களையும் இதேபோல அகற்றுவார்களா? பொழுதுபோக்கு அம்சங்களைவிட, மக்களின் வாழ்வாதாரம் முக்கியம்’’ என்கின்றனர்.

இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வீட்டுக்கு ஒரு மாற்று வீடு என்ற அடிப்படையில்தான் கணக்கிட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிலர் ஒரே வீட்டில் சிறிய தடுப்பு அமைத்து இருந்துகொண்டு தங்கள் மகன், மகள் ஆகியோருக்கும் வீடு கேட்கின்றனர். அதேபோல, காலி செய்த வீடுகளுக்கு மீண்டும் சென்று தங்கிக்கொண்டு ‘வீடு வேண்டும்’ என்கின்றனர். சிலர் ஆதார் எண் எல்லாம் மாற்றி விண்ணப்பிக்கின்றனர். அப்படி வருபவர்களுக்கு நாம் வீடு கொடுக்க முடியாது. அந்த மக்கள் நகரப் பகுதிக்குள் வீடு கேட்கிறார்கள். ஆனால், நகரத்துக்குள் நமக்கு எந்தத் திட்டமும் இல்லை. தற்போது, 1,240 வீடுகளை இடித்துவிட்டோம். எங்களிடம் கைவசமிருந்த வீடுகள் அனைத்தையும் கொடுத்துவிட்டோம். இனி புதிதாக வீடு கட்டித்தான் கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஷ்ரவன் குமார் ஜடாவத்
ஷ்ரவன் குமார் ஜடாவத்

கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், ‘‘ `நீர்நிலைப் புறம்போக்கு களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதன் அடிப்படையில்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். அந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு, குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பணம் கொடுத்துள்ளது. இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தமிழகத்திலேயே கோவைதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குளங்களை அழகுபடுத்துவது மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் இல்லை. குளங்களை மீட்டெடுத்து, புத்துணர்வு கொடுப்பதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டம். குளங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism