Published:Updated:

“நான் வாரிசு இல்லைன்னா வேற யாருப்பா வாரிசு?”

கருணையற்ற அரசு... கதறியழும் மூதாட்டி!

பிரீமியம் ஸ்டோரி
டிசம்பர் 2, 2019... கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மக்களுக்கு அது ஒரு கறுப்பு தினம். நடூர் பகுதியில், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் ஏ.டி.டி காலனியையும், தனது பங்களாவையும் பிரிக்கும்விதமாக தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் என்பவர் கட்டியிருந்த 15 அடி உயர மதில் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த கோரச் சம்பவம் நடந்து ஓராண்டாகப் போகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தில் ஏழு பேர் பலியாகி யிருந்தாலும், ஒருவருக்கு மட்டுமே நிவாரணம் கொடுத்துவிட்டு, சட்ட சம்பிரதாயங்களைச் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது மனிதாபிமானமற்ற அரசு!

ஏ.டி.டி காலனியைச் சேர்ந்த மக்கள், சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் அருகேயுள்ள பகுதியை வழித்தடமாகப் பயன்படுத்தியதைத் தடுக்கவே சுற்றுச்சுவர் கட்டப்பட்டது என்று அப்போது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மேலும், சுவருக்கு அருகிலிருந்த ஒரு மரத்தின் வேர், சுவரைப் பிளக்கவே... ஆபத்தை உணர்ந்த மக்கள், அது குறித்து சிவசுப்பிரமணியத்திடம் பேசியிருக்கிறார்கள். அதிகாரிகளிடமும் முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், சாமானியர்களைக் கண்டுகொள்ளத் தான் இந்த நாட்டில் நாதியில்லையே... அந்த மக்கள் அஞ்சியதைப்போலவே, தொடர் மழை பெய்துகொண்டிருந்த டிசம்பர் 2-ம் தேதி அந்தக் கொடூர விபரீதம் நடந்து, 17 பேர் மண்ணோடு மண்ணாகச் சமாதியானார்கள்.

“நான் வாரிசு இல்லைன்னா வேற யாருப்பா வாரிசு?”

அப்போது நடூர் வந்த முதல்வர் பழனிசாமி, ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், அரசுப் பணியும் வழங்கப்படும். மாற்று வீடுகள் கட்டித்தரப்படும்’’ என்று அறிவித்தார். மத்திய அரசும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. சிவசுப்பிரமணியம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அதே இடத்தில் மீண்டும் சுவர் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், அரசின் நிவாரண அறிவிப்புகள் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

நடூர் சென்றோம். ஏற்கெனவே விழுந்த சுவரின் கருங்கற்கள்கூட முழுமையாக அகற்றப்படவில்லை. அருகிலேயே புதிய சுவர் எழும்பிவிட்டது. இந்த விபத்தில் தனது குடும்பத்தில் ஏழு பேரை இழந்து நிர்கதியாகத் தவிக்கிறார் கமலம்மாள் பாட்டி. தனது தள்ளாத வயதில், தன் மகளின் வாடகை வீட்டில் அண்டச் செய்திருக்கிறது திமிர்பிடித்த ‘அதிகார’ச் சுவர்.

விஷயத்தைச் சொன்னதும்... கோர நினைவுகள் நெஞ்சில்முட்ட, தழுதழுத்த படியே பேசினார் கமலம்மாள். ‘‘நான் என்ன எனக்கா நிவாரணத் தொகை கேட்குறேன்... காலம்போன கடைசியில இந்தக் கிழவிக்கு எதுக்கு அவ்வளவு பணம்? விபத்துல இறந்துபோன ரெண்டு மருமகளுங்களோட குடும்பத்துக்கு தொகை கிடைச்சாலாச்சும் அவங்க குடும்பம் ஏதோ தலையெடுக்கும் இல்ல... அன்னிக்கு நடந்த விபத்துல என்னோட மகன், ரெண்டு மருமகளுங்க, நாலு பேரக் குழந்தைகள்னு ஏழு பேரையும் இழந்து அநாதையாகிட்டேன் கண்ணு. என்னோட இன்னொரு மகன் ஏற்கெனவே போய்ச் சேர்ந்துட்டான். இப்ப மகளோட வாடகை வீட்லதான் அண்டிப் பிழைக்கிறேன். ஒத்த உசுரை இழந்தாலே தாங்க முடியாது. ஏழு பேரை இழந்த இந்தக் கிழவியோட நிலைமையை நினைச்சுப் பாருங்கய்யா... அவங்க ஒவ்வொருத்தரோட நெனைப்பும் அன்னாடம் மனசை அறுக்குது. அதுலயும் மாருலயும் தோள்லயும் விளையாண்ட நாலு பேரக் குழந்தைங்களோட உருவமெல்லாம் இந்தக் கிழவி கண்ணுல வந்து வந்து போகுது. அன்னிக்கு அந்த எமன் என்னைய எடுத்துக்கிட்டு, என் குழந்தைகளை விட்டிருக்கலா மில்லை... பாழாப்போன கிழவி நான் அன்னிக்குப் பார்த்து வெளியூர் போயிட்டேன். இல்லைன்னா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்திருப்பேன்.

கமலம்மாள்
கமலம்மாள்

இவ்வளவு கொடுமைக்கு நடுவுல இந்த அரசாங்கமும் என்னைப் பாடாப்படுத்துது. செத்துப்போன ஒவ்வொருத்தருக்கும் இழப்பீடு தர்றேன்னு சொன்னாங்க. ஆனா, ஏழு பேர்ல என் மகன் இறந்ததுக்கு மட்டும்தான் இழப்பீடு கொடுத்திருக்காங்க. மத்த ஆறு பேருக்கு கொடுக்கலை. தாசில்தார் ஆபீஸ் போனா, `கலெக்டர் ஆபீஸ் போ’னு விரட்டுறாங்க. அங்க போனா, `வாரிசு ஆதாரம் இல்லை’னு சொல்றாங்க. நாங்க எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருந்தவங்க. என் மருமவ, பேரக் குழந்தைங்களுக்கு நான் வாரிசு இல்லைன்னா வேற யாருப்பா வாரிசு?

‘என் பேரனுக்கு (மகளின் மகன்) வேலை கொடுங்க’னு சொன்னா, அதையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. இதுவரைக்கும் யாருக்குமே வீடும் கட்டிக் கொடுக்கலை’’ என்றவர், வீடுகள் இடிந்துபோன இடத்தில் அமர்ந்து கதறி அழுதார்.

இராசாமணி
இராசாமணி

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் கேட்டபோது, ‘‘கமலம்மாளின் மகனுக்கான இழப்பீடு கொடுத்துவிட்டோம். அவரின் குடும்பத்தில் இறந்த மற்றவர்களுக்கும் பணம் தயாராக இருக்கிறது. ஆனால், வாரிசு ஆதாரம் இல்லாமல் பணம் கொடுக்க முடியாது. அங்கு சேதமடைந்திருக்கும் அனைத்து வீடுகளுக்கும், குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களில் வீடுகள் கொடுக்கப்படும்’’ என்றார்.

மனிதர்களுக்காகத்தான் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. விதிமுறைகளுக்காக மனிதர்கள் உருவாகவில்லை. அசுரபலம் வாய்ந்த அரசு நினைத்தால், அரை மணி நேரத்தில் கமலம்மாளுக்கான முழு நிவாரணத்தையும் வழங்கிவிட முடியும். ஏழு உயிர்களை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு, அது மட்டுமே ‘சிறு’ ஆறுதலாக இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு