Published:Updated:

மழையால் அடைத்த சாக்கடை... சுத்தம் செய்த கோவை போலீஸ்

கோவையில் மழை நீரால் ஏற்பட்ட சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் போலீஸ்
சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் போலீஸ்

கோவை, ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பாலம், நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது. இந்த ரயில்வே பாலத்தைக் கடந்துதான் அனைத்துப் பகுதிக்கும் செல்ல முடியும். தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப் பாலத்தின் அடியில் செல்கிறது.

சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போலீஸ்
சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போலீஸ்

ஆனால், லேசான மழை பெய்தாலே இந்தப் பாலத்தின் கீழ் நீர் தேங்குவது வழக்கம். இதனால், மழை பெய்யும்போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸுகளுக்கும் இது பெரிய இடைஞ்சலாக இருக்கிறது. இந்த நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் வழக்கம் போல லங்கா கார்னர் பாலத்தின் கீழ் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போலீஸ்
சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போலீஸ்

இதையடுத்து, போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி மற்றும் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி ஆகியோர் சாக்கடை அடைப்பை எடுத்து தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் இறங்கினார்கள். சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி சாக்கடையின் மேல் நின்று குச்சியால் குத்தி அடைப்பை நீக்கினார். இதைத்தொடர்ந்து, தேங்கிய நீரானது மெள்ள மெள்ள வடிந்து சரியானது. போக்குவரத்துக் காவலரின் இந்த சீரிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.