Published:Updated:

கோவை எஸ்.எம்.இ... பிழைக்க முடியாமல் காலியாகும் சிறுதொழில் நிறுவனங்கள்!

சிறுதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதொழில்

SME PROBLEM

கோவை எஸ்.எம்.இ... பிழைக்க முடியாமல் காலியாகும் சிறுதொழில் நிறுவனங்கள்!

SME PROBLEM

Published:Updated:
சிறுதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதொழில்
ழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்பதுபோல, கொரோனா பாதிப்பு குறைந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து குறு, சிறு நிறுவனங்கள் மீளமுடியாமல் தவித்து வருகின்றன. கோவை மாவட்டத்தில், 50,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பலவும் ஜாப் ஆர்டர் அடிப்படையில் செயல்பட்டன.

இந்த நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. கையில் உள்ள பணத்தை வைத்தோ, வட்டிக்கு வாங்கியோதான் தொழில் நடத்தப்படுகிறது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு கொரோனா காலத்தில் கடன் வழங்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்தது. முதல்கட்டமாகக் கோவையில் 410 நிறுவனங்களின் பட்டியலும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் சுமார் 10 நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கி யுள்ளன. எந்த உதவியும் கிடைக்காமல், பல ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸுடன் பேசினோம்.

75% வருமானம் போய்விட்டது..!

‘‘நம் நாட்டில் அதிகளவில் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பது குறு, சிறு நிறுவனங்கள்தான். கோவையில் கிட்டத்தட்ட 20,000 குறு, சிறு நிறுவனங்கள் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்கி வருகின்றன. அவர் களுக்கு வாடகைத் தொகையிலோ, மின் கட்டணத்திலோ எந்தச் சலுகை களையும் மாநில அரசாங்கங்கள் வழங்கவில்லை. அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால்தான் சிறு தொழில் நிறுவனங்கள் இயங்க வில்லை. எனவே, அந்த மூன்று மாத காலகட்டத்திலாவது மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

ஜேம்ஸ், ராஜேந்திரன், முருகேசன்
ஜேம்ஸ், ராஜேந்திரன், முருகேசன்

மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தொழில் மையம் ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு கடன் வழங்கச் சொல்லி கடிதம் எழுதிக்கொண்டேதான் இருக்கின்றனர். வங்கிகளிலிருந்து முறையான பதில் அளிப்பதில்லை. இந்த நெருக்கடியைத் தாங்க முடியாமல் கோவை மாவட்டத்தில் 5% குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதை நடத்தியவர்கள் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் கோவையில் குறு, சிறு நிறுவனங்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். சராசரியாக ஒரு லேத் மெஷின் வைத்திருப்பவர், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிப்பார். கொரோனா தாக்கத்தால், கிட்டத்தட்ட ரூ.2.25 லட்சம் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர். ஒவ்வொரு குறு, சிறு நிறுவனமும் 75% நஷ்டம் அடைந்துள்ளன. இயற்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய பொறுப்பை ஏற்க வேண்டிய அரசு, எங்களைக் கைக்கழுவி விட்டது. இதற்குப் பிறகாவது, அரசாங்கம் எங்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் அறிவித்து உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

‘‘ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிச்ச எஸ்.எம்.இ-கள் கிட்டத்தட்ட ரூ.2.25 லட்சம் வரை இழப்பைச் சந்தித்து உள்ளார்கள். ஒவ்வொரு நிறுவனமும் 75% வரை நஷ்டம் கண்டுள்ளது!’’

கடன் கேட்டு வங்கிக்குப் போனால்..!

ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் பேசினோம். “லேத் மெஷின் ஓட்டிக்கிட்டு இருக்கேன். 35 வருஷமா இந்தத் துறையில இருக்கேன். முன்னாடி ரெண்டு லேத் மெஷின் வச்சுருந்தேன். வேலைக்கும் ரெண்டு பேர் இருந்தாங்க. இப்ப ஒரு மெஷின் தான் இருக்கு. இந்த ஒரே மெஷின்ல நான்தான் ஓட்டிக் கிட்டு இருக்கறேன். ஜி.எஸ்.டி, பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு, கொரோனாவும் எங்களைக் கடுமையா பாதிச் சுருச்சு. கடை, வீடு ரெண்டுமே வாடகைதான். எல்லா மாசமும் கரெக்டா வாடகை கொடுத் தாகணும். இது தவிர, வீட்டுச் செலவு, உதிரி பாகங்கள் எல்லாமே நான்தான் பார்க்கணும். இப்ப நிலைமை கொஞ்சம் நார்மலா கிருக்குனு சொன்னாலும், வாரத்துல 2, 3 நாள் வேலை இருக்கிறதில்ல.

வங்கில கரன்ட் அக்கவுன்ட் வச்சுருக்கோம். அதுல இருக்கற பரிவர்த்தனை அடிப்படை யிலாவது உதவி பண்ணுங்கன்னு சொல்றோம். ஆனால், நாங்க போனாலே, வங்கிகள்ல தீண்டத் தகாதவங்களைப் பார்க்கற மாதிரி அவமானப்படுத்துறாங்க. புதுசாத் தொழில் தொடங்கறவங்களுக்கு உதவி செய்றோம்ன்னு மாவட்ட ஆட்சியர் சொல்றார். அப்ப ஏற்கெனவே தொழில் பண்றவங் களைக் கைவிட்ரலாமா?” என்றார் வேதனையுடன்.

முன்பு 13 பேர், இப்ப 3 பேர்..!

ராஜேந்திரனின் கதை இப்படி யென்றால், முருகேசனின் கதை இன்னும் மோசம். அவருடன் பேசினோம். “2007-ல கம்பெனி ஆரம்பிச்சேன். என்கிட்ட 13 பேர் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. ஐந்து லேத் மெஷின், சி.என்.சி, கட்டிங் மெஷின்னு மொத்தம் 10 மெஷின்கள் இருந்துச்சு. கொரோனா வந்தவுடனே என்கிட்ட வேலை செஞ்சுட்டு இருந்தவங்க ஊருக்கு போய்ட்டாங்க. எனக்கு வர வேண்டிய பேமென்ட் அப்படியே நின்னுடுச்சு.

பொதுவா, ஜனவரி, பிப்ரவரிக்கு அப்புறம் தான் எங்க பிசினஸ் சூடுபிடிக்கும், அந்த நேரத்துல எல்லாத் தையும் முடக்கிட்டதால ஆர்டர் எதுவும் வரல. எதுவுமே பண்ண முடியல. ஆறு மாசமா வாடகை தரலை. திடீர்னு ஒரு நாள் கேட்டைப் பூட்டிட்டு போய்ட்டாங்க. இருக்கிற மெஷின்களை காப்பாத்தணும். வேற இடம் வேணும்னு நிறைய நெருக்கடி. வேலைக்கு இருந்தவங் களும், ஏதாவது காசு கொடுத்தாதான் வருவேன்னு சொல்லிட்டாங்க. தற்கொலை பண்ணிக்கிடலாங்கிற அளவுக்கு நொந்துட்டேன். எங்க சொந்தக்காரங்களை வச்சுப் பேசிதான், காலி பண்றேன்னு சொல்லி டைம் வாங்கியிருக்கேன்” என்றவர் சற்று இடைவெளிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

சிறுதொழில்
சிறுதொழில்

“செலவுக்கு காசு வேணும்னு ரூ.3.50 லட்சம் கட்டிங் மெஷினை, ரூ.1.50 லட்சத்துக்கு வித்துருக்கேன். இப்ப வேற இடம் பார்த்து கம்பெனிய மாத்திட்டேன். இதுக்கு அப்புறமும், மாச வாடகை, இரண்டு மாசத்துக்கு ஒருமுறை மின் கட்டணம், சம்பளம், டூல்ஸ் வாங்க எல்லாம் காசு வேணும். மூணு பேரை மட்டும் ஷிப்ட் முறையில கொஞ்சம், கொஞ்சமா சரிசெஞ்சுட்டு வர்றோம். அரசாங்கம் ஏதாவது வகையில எங்களுக்கு உதவி செஞ்சா மட்டும்தான் நாங்க இதுல இருந்து மீள முடியும்” என்றார் உடைந்த குரலில்.

‘‘2007-ல் கம்பெனி ஆரம்பிச்சேன். என்கிட்ட 13 பேர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப மூணு பேரை மட்டும் வேலைக்கு வச்சுருக்கேன். அரசாங்கம் எங்களுக்கு உதவி செஞ்சாதான் நாங்க மீளமுடியும்!’’

இதுகுறித்து விளக்கம் கேட்க கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசனைத் தொடர்பு கொண்டோம். “தமிழகத்தில் குறு, சிறு நிறுவனங்களின் ஹப் கோவைதான். அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஆகியோருடன் வங்கிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. அதில், மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வராத குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்று நல்லிணக்கம் அடிப்படையில் கேட்டோம். சிலருக்கு சிபில் பிரச்னை இருப்பதாக வங்கிகளில் சொல்கின்றனர். மேலும், சிலர் வங்கிகளை சரியாக அணுக வில்லை என்றும் சொல்கிறார்கள். மாநில அரசால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அப்படிப் பட்ட நிறுவனங்கள் அழிந்துபோக நாம் அனுமதிக்கவே கூடாது!

2021 முடிவில் பழைய நிலை..!

‘‘கோவிட்-19-க்குப் பிறகு சரிந்த நமது பொருளாதார வளர்ச்சி 2020-2021-ம் ஆண்டு முடிவுக்குள் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சியை அடைவோம்’’ என திட்ட கமிஷன் அமைப்பான நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

‘‘கோவிட்டுக்குப் பிறகு மற்ற நாடுகள் அடையும் பொருளாதார வளர்ச்சியைவிட நம் நாடு வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த ஆண்டு ரூ.1.20 லட்சம் கோடியை அரசு நிறுவனங்களின் முதலீட்டைத் திரும்பப் பெறுவதன்மூலம் (disinvestment) திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் ரூ.90,000 கோடி நிதி சார்ந்த நிறுவனங்களில் உள்ள அரசு முதலீட்டைத் திரும்பப் பெறுவதன்மூலம் திரட்டப்படும். இந்த வகையில் முதலீடு திரட்டப்படுவது இனியும் தொடரும்’’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பிட்ஸ்

ந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFRC) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.4.600 கோடி திரட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த ஐ.பி.ஒ அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது!