Published:Updated:

“எங்க அம்மாவை இழந்துட்டோம்!”

சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

கண்ணீரில் திருநங்கைகள்

“எங்க அம்மாவை இழந்துட்டோம்!”

கண்ணீரில் திருநங்கைகள்

Published:Updated:
சங்கீதா
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா

“யாரு என்னன்னு கேக்கக்கூட நாதியத்த மக்க நாங்க. சங்கீதாம்மாதான் எங்களுக்கு எல்லாமுமா இருந்தாங்க. கொஞ்சம் மனசுடைஞ்சு நின்னா, தோள்ல சாச்சுக்கிட்டு தலையைக்கோதி நீ நல்லா வருவேம்மான்னு ஆறுதல் சொல்லுவாங்க. நாங்கெல்லாம் பெத்த அம்மாக்களாலயே துரத்தப்பட்டவங்க. சங்கீதாம்மாதான் எங்களுக்கு அம்மா. அவங்களைப் பறிகொடுத்துட்டுத் தவிச்சுப்போய் நிக்குறோம்...” – கண்கலங்கப் பேசுகிறார் பிரேமா.

கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கிறார்கள். பாலியல் தொழில், கடைகளேறி யாசகம் கேட்பது என திக்கற்றுத் தவித்த திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சங்கீதா. வயது வேறுபாடின்றி எல்லாத் திருநங்கைகளும் ‘சங்கீதாம்மா’ என்று மிகுந்த மரியாதையோடு அழைக்கிறார்கள். திருநங்கைகளுக்கு முன்மாதிரியாகவும் நம்பிக்கையாகவும் இருந்த சங்கீதா, கடந்தவாரம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சங்கீதா
சங்கீதா

துடியலூர் அருகில் உள்ள செங்காளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. 7 சகோதரர்களோடு பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பம். பாலியல் அடையாளச் சிக்கலும் சேர்ந்துகொள்ள, சங்கீதாவின் பால்யம் மிகவும் துயரமாகவே கழிந்திருக்கிறது.

“சின்ன வயசுலயே குடும்பக் கஷ்டத்தைப் போக்க உழைக்கத் தொடங்கிட்டாங்க சங்கீதாம்மா. அவங்க திருநங்கைன்னு தெரிஞ்சதும் வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. பட்டம்மான்னு ஒரு மூத்த திருநங்கை அவங்களை மகளா தத்தெடுத்துக்கிட்டாங்க. ஐஸ்கிரீம் கடை, காய்கறிக்கடைன்னு அந்த வயசுலயே நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. கோவை சாய்பாபா கோயில் போலீஸ் ஸ்டேஷனை தினமும் துப்புரவு செஞ்சு கொடுப்பாங்க. அதுக்காக ஸ்டேஷன்லயே ஒரு அறை கொடுத்துத் தங்க வச்சிருந்தாங்க...” என்கிறார் பிரேமா.

கோவையைப் பொறுத்தவரை, ராஜம்மா, மதனம்மா, மணியம்மா என இன்று பிரியாணி சமையலுக்குப் பெயர்போன பல திருநங்கைகள் கோவையில் உண்டு. சங்கீதாவும் சிறுவயதிலேயே கேட்டரிங் கற்றுக்கொண்டுவிட்டார். பிற திருநங்கைகளுக்கும் பயிற்சியளித்து வங்கிக்கடன் பெற்றுத்தந்து தள்ளுவண்டிக்கடைகள் அமைக்க உதவியிருக்கிறார்.

“இருபது பேருக்கு மேல தள்ளுவண்டிக் கடை வாங்கித் தந்திருக்கார். நிறைய திருநங்கைகளுக்கு வீடுகளே வாங்கிக்கொடுத்திருக்காங்க. எப்பவும் அவங்க வீட்டுல பத்துப் பேருக்குச் சாப்பாடு இருக்கும். எந்தப் பிரச்னைன்னாலும் முன்னாடி நிப்பாங்க” என்கிறார், முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரும் சங்கீதாவின் மகள் உறவுமான பத்மினி பிரகாஷ்.

கொரோனாத் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவிகள் கிடைத்தன. ஆனால், திருநங்கைகள் எல்லாத் தரப்பாலும் புறக்கணிக்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கே தவித்து வந்த நிலையில், சங்கீதா, தமிழகம் முழுவதுமிருந்து உதவிகள் திரட்டி திருநங்கைகளுக்கு வழங்கினார்.

“சங்கீதாம்மா கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவரா செயல்பட்டாங்க. கொரோனாவால எல்லாரும் தவிச்சு நின்னப்போ, நானிருக்கேன்னு ‘டிரான்ஸ் கிச்சன்’ உணவகத்தை ஆரம்பிச்சாங்க. நிறைய திருநங்கைகளுக்கு அதன்மூலம் வேலையும் உணவும் கிடைச்சுச்சு. வெகு சீக்கிரமே அந்த உணவகம் பிரபலமாகி வணிகம் பெருசாயிடுச்சு. குடும்பம் குடும்பமா மக்கள் வந்து சாப்பிட்டுட்டு பாராட்டிட்டுப் போனாங்க. கோவையில வேறு சில இடங்களிலும் உணவகங்கள் அமைக்கிற வேலைகள் நடந்துகிட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஒரு சம்பவம்... அவங்க இறப்பு எங்க தன்னம்பிக்கையைக் குலைச்சிருக்கு...” என்கிறார், செயற்பாட்டாளர் கல்கி.

“எங்க அம்மாவை இழந்துட்டோம்!”

டிரான்ஸ் கிச்சன் பிரியாணி வகைகளுக்குக் கோவையில் பெரும் வரவேற்பு கிடைக்க, மேலும் சிலரை வேலைக்கு அமர்த்த நினைத்திருக்கிறார் சங்கீதா. அதற்காக நாளிதழ்களில் விளம்பரம் செய்திருக்கிறார். அதில் அவரது அலைபேசி எண்ணும் இடம்பெற்றிருக்கிறது. 25 நாள்களுக்கு முன், நாகப்பட்டினத்திலிருந்து ராஜேஷ் என்பவர் அழைத்து, தன் குடும்பம் கடும் வறுமையில் தவிப்பதால் வேலை தந்து உதவுமாறு கேட்டிருக்கிறார். உடனடியாக அழைத்த சங்கீதா, வேலை கொடுத்ததோடு, தங்க வேறு இடம் தேடிக்கொள்ளும் வரை தன் வீட்டிலேயே தங்கவும் வைத்திருக்கிறார். “பாக்க பரிதாபமா இருக்கான். இவனை நம்பி ஒரு குடும்பமும் இருக்கு. எனக்கு இருந்தாலும் இவன் வயதுக்கு ஒரு புள்ளை இருந்திருப்பான்தானே... இருக்கட்டும்... இடம் தேடுற வரைக்கும் பாத்துக்குவோம்” என்று உடன் பணியாற்றுவோரிடம் சொல்லியிருக்கிறார் சங்கீதா.

சில நாள்களாக உணவகத்துக்கு சங்கீதா வராததால் பணிபுரிவோர், அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த நிலையில், தண்ணீர் நிரப்பும் டிரம்மில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில், உடனிருந்த ராஜேஷ் முறைகேடாக நடக்கமுயன்றதைக் கண்டித்ததால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவானது தெரியவந்தது. ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் சிக்கலோடு பிறந்து சமூகத்தின் எல்லா இடர்களையும் கடந்து தன்னையொரு ஆளுமையாக வளர்த்துக்கொண்ட சங்கீதா, தன்னைப்போன்று தவித்த பலநூறு பேருக்கு நல்வாழ்வுக்கான பாதையை அமைத்துத்தந்திருக்கிறார். என்றென்றும் திருநங்கைகள் அவரை நினைவில் சுமப்பார்கள்!