அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரம்... கோவை மாநகராட்சிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்!

குப்பைக் கிடங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
குப்பைக் கிடங்கு

2018-ல் வெளியான தீர்ப்பின்படி, 2019-ம் ஆண்டுக்குள் குப்பைகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அதை கோவை மாநகராட்சி செய்யவில்லை.

குப்பைக் கிடங்கு அகற்றம் தொடர்பான பசுமை தீர்ப்பாயக்குழுவின் கேள்விக்கு, ‘கொரோனா’வைக் காரணம் காட்டியிருக்கும் கோவை மாநகராட்சியின் செயல்பாடு, மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது!

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், வெள்ளலூர் பகுதியிலுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கிடங்கில்தான் கொட்டப்படுகின்றன. அதனால், வெள்ளலூர் பகுதியில் தண்ணீர், காற்று எனச் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018-ல், ‘இன்னும் ஓர் ஆண்டுக்குள் வெள்ளலூரிலுள்ள அனைத்துக் குப்பைகளும் அகற்றப்பட வேண்டும்’ எனத் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி 4-10-2019-ம் தேதிக்குள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலுள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதுவரை குப்பைகள் அகற்றப்படவில்லை. இப்போதும் அங்குதான் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், ‘கொரோனா ஊரடங்கால், வெள்ளலூர் குப்பைக் கிடங்குப் பிரச்னையைத் தீர்க்க இயலவில்லை’ என அண்மையில் பசுமை தீர்ப்பாயக் கண்காணிப்புக்குழுவிடம் கோவை மாநகராட்சி நிர்வாகம் பதிலளித்திருக்கிறது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரம்... கோவை மாநகராட்சிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்!

பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தவரும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான ஈஸ்வரன் இது குறித்துப் பேசும்போது, ‘‘2018-ல் வெளியான தீர்ப்பின்படி, 2019-ம் ஆண்டுக்குள் குப்பைகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அதை கோவை மாநகராட்சி செய்யவில்லை. ஆனால், ‘2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வந்த கொரோனா பிரச்னையால்தான் தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் போனது’ என்று மாநகராட்சி நிர்வாகம் இப்போது பொய்க் காரணம் சொல்லியிருப்பது மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்’’ என்றார் கொதிப்பாக.

“வெள்ளலூரில் மலையெனக் கிடங்கில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக், பாட்டில், அட்டை, தேங்காய் சிரட்டை உள்ளிட்ட குப்பைகளைச் சட்டவிரோதமாக அள்ளிச்செல்ல ஒரு நெட்வொர்க் இயங்குகிறது. உள்ளூர் அரசியல் புள்ளி ஒருவர் துணையுடன் இயங்கும் இந்த நெட்வொர்க், குப்பையைப் பிரித்தெடுப்பதற்கான ஆட்களுக்கு டோக்கன் கொடுத்து கிடங்குக்கு உள்ளே அனுப்புகின்றனர். அண்மையில் அப்படிக் குப்பையை அள்ளும்போது ஒரு பெண் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

இந்த விவகாரம் குறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் விளக்கம் கேட்டோம். “பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்து சில மாதங்களிலேயே கொரோனா தாக்கம் வந்துவிட்டது. தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியதால், தீர்ப்பை அமல்படுத்துவதில் கவனம் செலுத்த முடியவில்லை. முதற்கட்டமாக, குப்பைக் கிடங்குக்குச் செல்லும் குப்பையின் அளவைக் குறைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். படிப்படியாக 15 மாதங்களில் தீர்ப்பாயம் கூறியிருக்கும் உத்தரவுகளை அமல்படுத்திவிடுவோம். மேலும், குப்பைக் கிடங்கில் குப்பை பொறுக்குபவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவிருக்கிறோம். குப்பைக் கிடங்கைச் சுற்றித் தடுப்பு கட்டிவருகிறோம். சிசிடிவி கேமராக்களை வைத்து, ஷிஃப்ட்டுக்கு 15 வாட்ச்மேன்களைப் பணியமர்த்தவிருக்கிறோம்” என்றார்.

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று குப்பை மேலாண்மை. அது, மக்களின் சுகாதாரத்தோடும் சூழலியலோடும் தொடர்புடையது. அலட்சியம் காட்டாமல் செயல்படுமா அரசு?