Published:Updated:

யானையே எங்க சாமி! - சிலை வைத்து வழிபடும் கிராமம்

பகவதி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பகவதி அம்மன் கோயில்

எங்க ஊர்ல யார் வெள்ளாமை தொடங்கினாலும் இங்க ஒரு பூசைய போட்டுட்டுதான் வேலைய ஆரம்பிப்பாங்க. அறுவடையப்பவும் சாமிக்குத்தான் முதல்ல கடா வெட்டி படையல் போடுவாங்க.

யானையே எங்க சாமி! - சிலை வைத்து வழிபடும் கிராமம்

எங்க ஊர்ல யார் வெள்ளாமை தொடங்கினாலும் இங்க ஒரு பூசைய போட்டுட்டுதான் வேலைய ஆரம்பிப்பாங்க. அறுவடையப்பவும் சாமிக்குத்தான் முதல்ல கடா வெட்டி படையல் போடுவாங்க.

Published:Updated:
பகவதி அம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
பகவதி அம்மன் கோயில்

யானை... தவிர்க்கவே முடியாத காடுகளின் பேருயிர். ஆனால் சமீபகாலமாக யானைகளைச் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. காடுகளை ஒட்டிய பகுதிகளில் யானை – மனித எதிர்கொள்ளல் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்து வருகிறது. அந்தக் காலத்திலிருந்தே தொடரும் பழங்குடிகள் – யானைகள் இடையேயான பந்தம் மிகவும் அழகானது. கோவைச் சுற்றுவட்டாரங்களில் இருளர் பழங்குடி மக்கள், யானைகளுக்குக் கோயில் கட்டிக் கடவுளாக வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது காந்தவயல் கிராமம். பேரழகான அந்த கிராமத்தின் பகவதி அம்மன் கோயிலில் நுழைந்தவுடனே அங்கு உள்ள யானைச் சிலைதான் நம்மை வரவேற்கும். யானை மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்கும் விதமாக, நூற்றாண்டுக்கு முன்பே அங்கு யானைச் சிலை வைத்து அதற்குப் பூஜை செய்துவருகின்றனர் பழங்குடி மக்கள். காந்தவயலில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

பகவதி அம்மன்
பகவதி அம்மன்
யானையே எங்க சாமி! - சிலை வைத்து வழிபடும் கிராமம்

பழங்குடி மக்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைத் தாண்டி, கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். பவானி நீர்ப்பிடிப்புப் பகுதி என்பதால், ஆண்டில் 8 மாதங்கள் காந்தவயலைச் சுற்றித் தண்ணீர் சூழ்ந்திருக்கும். நாம் அங்கு சென்றிருந்தபோதும் அதேநிலைதான். லிங்காபுரத்தில் இருந்து பரிசல் மூலம் காந்தவயலை அடைந்தோம்.

ரஞ்சித் என்ற இளைஞர், “எங்க ஊர்ல யார் வெள்ளாமை தொடங்கினாலும் இங்க ஒரு பூசைய போட்டுட்டுதான் வேலைய ஆரம்பிப்பாங்க. அறுவடையப்பவும் சாமிக்குத்தான் முதல்ல கடா வெட்டி படையல் போடுவாங்க. வீரப்பன் இருந்தப்ப அவர் இந்தக் காடுகள்ல அதிகம் நடமாடியிருக்காரு. அப்ப இருந்து, இப்ப வரை எங்க ஊருக்குள்ள யானை எந்தத் தொந்தரவும் பண்ணதில்ல. யாராவது யானைய எதிர்ல பார்த்துட்டா கீழ விழுந்து, ‘விட்டுரு சாமி’ன்னு கும்பிடுவாங்க. யானை அப்படியே போய்டும். வெளிய எப்படியோ, இங்க இந்த சாமிய கும்பிட்டுப் போய் பிரச்னை ஆனதா ஒரு சம்பவம்கூட நடக்கல. பழங்குடி சமூகத்தைச் சேராதவங்ககூட விவசாயம் பண்றதுக்கு முன்னாடி இங்க வந்து பூசை பண்ணுவாங்க. ஒருதடவை எங்க அப்பா தோட்டத்துக்குப் போய் திரும்பறப்ப, எதிர்ல யானை வந்துருச்சு. பயத்துல கீழ விழுந்துட்டார். அந்த நிமிஷம் அவருக்குக் கை கால் வரல. சத்தம் போடாம அப்படியே படுத்துட்டார். யானை ஒரு சத்தம் மட்டும் போட்டுட்டு, ஒதுங்கிப் போய்டுச்சு. இப்படி இங்க நெறைய பேருக்கு நடந்திருக்கு. பழங்குடி மக்கள் எல்லாரும் இந்தச் சாமிய கும்பிட்டு, யானைக்குத் தொந்தரவு பண்ணாம அமைதியா இருக்கோம். வெளிய இருந்து யாராவது அதைப் பத்தித் தெரியாம தொந்தரவு பண்ணுனாதான் பிரச்னை வரும்” என்றார்.

யானைச்சிலை
யானைச்சிலை
யானைச்சிலை
யானைச்சிலை

யானைச் சிலைக்குக் கையில் எடுத்து வந்த பாலை ஊற்றிவிட்டுப் பேசிய நஞ்சம்மா என்ற பெண், ‘‘நாங்க எல்லாம் பொறக்கறதுக்கு முன்னாடி இருந்தே இந்தக் கோயில் இருக்கு. இங்க யானை இல்லாத இடமே இல்ல. நம்ம காட்டுக்குள்ள யானை ஏதாவது வந்தா, இங்கே உடனே வந்து பூசை பண்ணிடுவோம். அதுக்கப்பறம் எந்தப் பிரச்னையும் இருக்காது. அது கைலதான் சாவுன்னு இருந்துச்சுன்னா, நாம வீட்லயே இருந்தாலும் யானை இழுத்துப் போட்டு ஒரு நிமிஷத்துல கதைய முடிச்சுரும். அதுகிட்ட இருந்தெல்லாம் நம்மளால தப்பிக்க முடியாது. எங்க ஊருக்கு வெளிப்பக்கமும் அது நிறைய நடக்கும். ஆனா, எங்க ஊருக்குள்ள ஆள அடிக்கறது ரொம்ப கம்மி. யானைதான் எங்க சாமி. அந்த சாமிதான் எங்களைப் பாதுகாக்குது. அதுதான் எங்க நம்பிக்கை” என்றார் உறுதியான குரலில்.

அந்தப் பகுதி முழுவதும் வலம் வந்தபோது, ஒரு வீட்டின் முன்பு ஒரு மனிதரின் சிலையும், அருகிலேயே யானைச் சிலையும் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. முன்பு பழங்குடி அல்லாத ஒரு விவசாயி யானை தாக்கி உயிரிழந்துவிட்டாராம். “அவர் நினைவாக வைக்கப்பட்ட சிலை அருகே, யானையையும் கடவுள் என்பதை உணர்த்தும் விதமாகச் சிலை வைத்துள்ளனர். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர்களின் குடும்பமும் யானையைக் கடவுளாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதற்காகத்தான் சிலை வைத்துள்ளனர்” என்கின்றனர் ஊர்க்காரர்கள்.

விவசாயி நினைவாக சிலை
விவசாயி நினைவாக சிலை
யானையே எங்க சாமி! - சிலை வைத்து வழிபடும் கிராமம்

சந்திரன் என்பவர், “முன்னாடி விவசாயத்துல யானைங்க பிரச்னை அதிகம் ஆனப்பதான் இங்க யானைச் சிலை வெச்ச மாதிரி சொன்னாங்க. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாள்கள்ல பூசை நடக்கும். பக்கத்துல இருக்கற கிராமங்கள் எல்லாமே காட்டு வழிதான். அதனால எங்க போறதா இருந்தாலும், இங்க வந்து சாமி கும்பிட்டுதான் போவோம். யானையே இருந்தாலும், ஒதுங்கிப் போய்டும். ஒருமுறை யானையே இந்தக் கோயிலுக்கு வந்து தண்ணி குடிச்சிட்டு, மணி எல்லாம் அடிச்சுருக்கு. அதைப் பார்த்து எங்களுக்கே ஆச்சர்யமா போச்சு. ஒருநாள் காலைல நான் கொழந்தைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வர்ற வழில யானை எதிர்ல வந்துடுச்சு. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. அது எதுவுமே செய்யாம அமைதியா என்னைய தாண்டிப் போய்டுச்சு. கொழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை யானையை சாமியாதான் கும்பிடறோம்’’ என்றார்.

நஞ்சம்மா
நஞ்சம்மா
வேலன்
வேலன்
சந்திரன்
சந்திரன்
ரஞ்சித்
ரஞ்சித்

வேலன் என்ற விவசாயி, “எங்களுக்கு எல்லாமே இந்தச் சாமிதான். வேற ஊர்ல இருந்து பொண்ணு எடுக்கறதா இருந்தாலும் சரி, எங்க ஊர்ல இருந்து ஏதாவது ஊருக்குப் பொண்ணு குடுத்தாலும் சரி, இந்தச் சாமிகிட்ட பூப் போட்டுக் கேட்டுதான் செய்வோம். சாமி சொன்னதை மீறி எதுவும் செஞ்சது இல்ல. அவர் சொன்னதைச் செஞ்சு எதுலயும் பிரச்னை வந்தது இல்ல. கல்யாணம் ஆகல, கொழந்தை இல்லன்னு எந்த வேண்டுதலா இருந்தாலும், இங்க வந்து வேண்டினா அது நடந்துடும். மார்ச் மாசம் ஒரு வாரத்துக்கு கோயில்ல விசேஷம் நடக்கும். கம்பம் நட்டி, குண்டம் போட்டு ஆட்டம் பாட்டமா இருக்கும். வாழை, சோளம், கரும்பு எல்லாம் யானைக்கு ரொம்பப் பிடிக்கும், அது எல்லாமே நாங்கள் காட்ல போட்ருக்கோம். இருந்தாலும் யானை எங்க வாழ்வாதாரம் பாதிக்கற மாதிரி எதுவும் செஞ்சதில்ல. யானை ஊருக்குள்ள வரும்தான். அதை அடிக்கறது, திட்டறதுன்னு எல்லாம் பண்ணக் கூடாது. யானை நம்மளவிட அறிவான மிருகம். நாம அதைக் கல் வீசி அடிக்கறது, திட்டறதுன்னு பண்ணுனா அதுக்கும் வலிக்கதான செய்யும். அப்பறம் அது தன்னோட பலத்தைக் காமிச்சா நம்மால தாங்க முடியாது. அந்த மாதிரியான விஷயங்களை விட்டாலே, யானை எதுவும் செய்யாது” என்றார் அழுத்தமாக.

பக்தியை அன்பு என்றும் சொல்லலாம்.