Published:Updated:

விழிச்சவால் குழந்தை... வெளிச்சம் பாய்ச்சிய கலெக்டர்! - ஜூ.வி ஆக்‌ஷன்

ரமேஷ்,  சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ், சரண்யா

என் கணவருடைய சம்பளத்தில் பாதி என்னுடைய மருத்துவத்துக்கே செலவாகிவிடுவதால், அரைவயிற்றுக் கஞ்சிதான் குடித்து வாழ்கிறோம்.

விழிச்சவால் குழந்தை... வெளிச்சம் பாய்ச்சிய கலெக்டர்! - ஜூ.வி ஆக்‌ஷன்

என் கணவருடைய சம்பளத்தில் பாதி என்னுடைய மருத்துவத்துக்கே செலவாகிவிடுவதால், அரைவயிற்றுக் கஞ்சிதான் குடித்து வாழ்கிறோம்.

Published:Updated:
ரமேஷ்,  சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ், சரண்யா

தஞ்சாவூர் அருகேயுள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரமேஷ். இவரின் மனைவி சரண்யா ஊட்டச்சத்துக் குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளி. வறுமைக்குப் பழகிப்போன இந்தத் தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு குறைப் பிரசவத்தில், பார்வைக் குறைபாட்டுடன் பெண் குழந்தை பிறக்க... மனமுடைந்துபோனார்கள்!

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘‘உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பார்வைக் குறைபாடு சரியாகும். இல்லையென்றால், இந்தக் குழந்தை பார்வைத்திறனை முழுமையாக இழக்க நேரிடும்’’ என்று எச்சரித்தது அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தகவலை நம் கவனத்துக்குக் கொண்டுவந்த அதே ஊரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன், “என் நிலைமை, அந்தக் குழந்தைக்கும் வந்துவிடக் கூடாது. ஏதாவது செய்யுங்க சார்” என்றார் கெஞ்சும் குரலில்.

ரமேஷ்.  சரண்யா
ரமேஷ். சரண்யா

அவர் குரலில் இருந்த வலி உடனே நம்மை அந்த ஊருக்குப் போகவைத்தது. ‘‘சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட என்னால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. என் கணவருடைய சம்பளத்தில் பாதி என்னுடைய மருத்துவத்துக்கே செலவாகிவிடுவதால், அரைவயிற்றுக் கஞ்சிதான் குடித்து வாழ்கிறோம். நம் வாழ்க்கைதான் இப்படியாகிவிட்டது, பிள்ளையின் வாழ்க்கையாவது பிரகாசமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம். ஆனால், பிறந்த குழந்தை இப்படியாகிவிட்டது” என்று அழுதார் குழந்தையின் தாய் சரண்யா.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றோம். குழந்தையின் பிரச்னை குறித்து பொறுமையாக விசாரித்தவர், ‘‘பெண் பிள்ளைக்கு பார்வையில்லாமல் போனால், அதன் எதிர்காலத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை’’ என்று கலங்கினார். உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பேசி, தன் சொந்தச் செலவிலேயே அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அந்த மருத்துவமனையும் மருத்துவக் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டு சிகிச்சையளிக்க... இப்போது குழந்தையின் ஒரு கண்ணில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து தெளிவான பார்வை கிடைத்திருக்கிறது.

‘‘ஒரு கண்ணுல ஆபரேஷன் முடிஞ்சு இப்போ பார்வை நல்லாத் தெரியுது. அடுத்த கண்ணுக்கான ஆபரேஷனும் சீக்கிரமே நடக்கப்போகுது. முதன்முறையா எங்களையும், வெளிச்சத்தையும் பார்த்து குழந்தை முகத்துல ஒரு சிரிப்பு வந்துச்சு பாருங்க... அதுதான் சார் கடவுள். எங்களோட எல்லாக் கஷ்டமும் அந்தச் சிரிப்பிலேயே காணாமப்போயிடுச்சு. ஜூ.வி-யோட முயற்சியாலும், கலெக்டர் ஐயாவோட உதவியாலும் என் மக உலகத்தைப் பார்க்கிறா’’ என்று ஆனந்தக் கண்ணீருடன் சொன்னார்கள் ரமேஷ் - சரண்யா தம்பதியர்.

குழந்தையின் கண்களுக்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கே வெளிச்சம் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துவமனைக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்!