Published:Updated:

"காலேஜ் சம்பளத்தை குறைச்சிடுச்சு... அதனால நுங்கு வெட்டப்போய்!" - பேராசிரியர் கணவனை இழந்த சாந்தி

கணவர் லோகநாதன் மற்றும் குழந்தையுடன் சாந்தி
News
கணவர் லோகநாதன் மற்றும் குழந்தையுடன் சாந்தி

''நான் சென்னையில் இருந்தவரைக்கும் அவரு நுங்கு வெட்டப்போறேன்னு கிளம்புனதே இல்ல. என்னைய இங்க விட்டுட்டுப்போன பிறகும் கூட எனக்கு தெரியாது அவரு நுங்கு வெட்ட போறார்னு. போன் பண்ணாலும் கிளாஸ் போகுதும்மான்னு சொல்லுவாரு.''

“ரெண்டு வயசுப்பையன் இன்னும் ஒழுங்கா பேச கூட ஆரம்பிக்கல… ஆனா, நேத்து நைட்டுல இருந்து அப்பா அப்பானு சொல்லிட்டு இருக்கான். காலையில கண்ணு முழிச்சதும் அப்பான்னு அழ ஆரம்பிச்சுட்டான். கையில இருக்க புள்ளைக்கே எனக்கு ஆறுதல் சொல்ல முடியல... வயித்துல இருக்க இன்னொரு புள்ளைக்கு என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரியல’’ கணவரின் நினைவுகளால் வெடித்து அழுகிறார் 27 வயதான சாந்தி.

இவர் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய லோகநாதனின் மனைவி. கொரனா லாக்டெளனால் கல்லூரியில் சம்பளம் குறைக்கப்பட, போதிய வருமானம் இல்லாததால் வருமானத்திற்காக நுங்கு விற்பனை செய்யத்தொடங்கிஇருக்கிறார் லோகநாதன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த வாரம் சனிக்கிழமை நுங்கு வெட்டுவதற்காக பனைமரம் ஏறியவர் தடுமாறி கீழே விழுந்ததில் மரணமடைந்துவிட்டார். இரண்டு வயது குழந்தையுடன் நிறைமாத கர்ப்பிணியாக ஆதரவன்றி தவிக்கும் சாந்தியிடம் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி பேச ஆரம்பித்தேன்.

"காலேஜ் சம்பளத்தை குறைச்சிடுச்சு... அதனால நுங்கு வெட்டப்போய்!" - பேராசிரியர் கணவனை இழந்த சாந்தி

‘’ 'சென்னையில கொரோனா கேஸ் அதிகமாயிட்டே இருக்கு. நீ மாசமா வேற இருக்க. உங்க வீட்டுல இருக்குறதுதான் உனக்கு பாதுகாப்பு'ன்னு போன மாசம் லாக்டெளன் அறிவிக்கிறதுக்கு முன்னால திருச்சியில எங்க வீட்டுல வந்து விட்டுட்டு போனாங்க. அப்பகூட அவங்ககிட்ட 'இங்கயே இருங்க'ன்னு சொன்னேன். 'இல்ல பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்கணும். இங்க இருந்தா சரிவராது. நான் கிளம்புறேன்'னு சொல்லி கிளம்புனாங்க.

நான் சென்னையில் இருந்தவரைக்கும் அவரு நுங்கு வெட்டப்போறேன்னு கிளம்புனதே இல்ல. என்னைய இங்க விட்டுட்டுப்போன பிறகும் கூட எனக்கு தெரியாது அவரு நுங்கு வெட்ட போறார்னு. போன் பண்ணாலும் கிளாஸ் போகுதும்மான்னு சொல்லுவாரு. சில நேரம் போன் எடுக்க மாட்டாரு. சரி வேலையா இருப்பாங்கனு விட்ருவேன்.

ஆனா, கையில காசு சரியா இல்லைன்னு அவரு நுங்கு வெட்டப்போயிருக்காரு. அவரு கீழ விழுந்த அன்னைக்கு, ‘மரம் ஏறுறப்போ கீழ விழுந்துட்டாரு. லேசா அடி’ன்னு போன் வந்துச்சு. இங்க இருந்து கிளம்பி போயி பார்த்தப்போ பொழைக்கிறது கஷ்டம்... தலையில் அடி பலமா இருக்குன்னு சொன்னாங்க. ஈரக்குலையே ஆடிப்போச்சு’’ என அதற்கு மேல பேச தெம்பில்லாமல் சாந்தி நிறுத்த அவரது சகோதரர் வினோத்திடம் பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘’மாமா கூட பொறந்தவங்க மூணு பொண்ணுங்க. அவரோட அப்பாவும் இறந்துட்டதால அவங்க குடும்பத்துக்கும் மாமாதான் வருமானத்துக்கான ஒரே ஆதாரம். போன மாசம்தான் பையன் பிரித்வி பிரியனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சுச்சு.

இந்த கொரோனா இப்படி எங்களை நிலைகுலைய வைக்கும்னு எதிர்பார்க்கல. போன தடவ லாக்டெளன் அப்பவும் நிதி நிலமையை சமாளிக்க முடியல. அப்போ எங்க அப்பாதான் சப்போர்ட்டா இருந்தாங்க. மாமா எங்க கிட்டயே இதுபத்தி சொல்லியிருக்கலாம். இப்படி பண்ண போய் என்னென்னமோ ஆகிப்போச்சு.

"காலேஜ் சம்பளத்தை குறைச்சிடுச்சு... அதனால நுங்கு வெட்டப்போய்!" - பேராசிரியர் கணவனை இழந்த சாந்தி

தங்கச்சி அழுதுக்கிட்டே தான் இருக்கா. அண்ணனா நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அவ கூட வாழ்ந்த உறவை பறிகொடுத்த விரக்தியில் சாப்பிட மாட்றா, பேச மாட்றா... டாக்டர், இந்த மாசக் கடைசியில பிரசவத்துக்கு தேதி கொடுத்திருக்காங்க. உனக்கா இல்லைன்னாலும் வயித்துல இருக்க ஒரு உயிருக்காகவாச்சும் உன்ன கஷ்டப்படுத்திக்காதன்னு சொல்லிட்டு இருக்கோம்’’ என்று கலங்கினார் வினோத்.

லோகநாதனிடம் படித்த அவரது மாணவர் லோகேஷ் குமாரிடம் பேசினேன். ‘’லோகநாதான்சார் கிட்ட 2012 - 2016 பேட்ச்ல படிச்ச பையன் நான். நாங்க படிச்சது இன்ஜினீயரிங் காலேஜ். சார் கணிதத்துறை அப்டிங்கிறதால எல்லா மாணவர்களுக்குமே அவரைத் தெரியும். அவ்ளோ நட்பா பழகக்கூடியவர். காலேஜ் டைம்ல யாராச்சும் எக்ஸாம் ஃபீஸ் கட்டலைன்னு வந்து நின்னா இவரு ஃபீஸ் கட்டிடுவாரு. திரும்ப கூட அந்த காசைப் பத்தி கேட்டது இல்ல.

சனி, ஞாயிறுகள்ல ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எங்களை கூட்டிப்போயி அங்க இருக்கவங்களுக்கு சாப்பாடு , அத்தியாவசிய பொருட்கள்னு உதவி பண்ணுவாரு. ஆனா, இப்போ அவரோட குடும்பமே இப்படி இருக்குதுன்னு கேள்விப்பட்டு மனசு கஷ்டமாகிடுச்சு. அதான் எங்க பேட்ச் ஸ்டூடன்ஸ்கிட்ட பேசி ஒரு குறிப்பிட்ட தொகை கலெக்ட் பண்ணிட்டு இருக்கோம்’’ என்றார்.

மரண வீடுகளில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் அகால மரணமடைந்தவர்களின் உறவுகளை சந்திப்பதற்கும் ஆறுதல் சொல்லுவதற்கும் பெரும் மனப் போராட்டமே நிகழ்த்த வேண்டியிருக்கும். பொருளாதார சூழல், பாதியிலேயே சிதைந்த வாழ்க்கை, எதிர்காலம் குறித்த அச்சம் என கையிலும், வயிற்றிலும் குழந்தைகளோடு ஆதரவற்று தவிக்கும் சாந்திக்கு தமிழக அரசும், இந்த சமூகமும்தான் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.