Election bannerElection banner
Published:Updated:

கோவை:``பாஜக-வுக்கு பிரசாரம் செய்ய வற்புறுத்துகின்றனர்” - தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆதங்கம்

பாஜக
பாஜக

கோவை அருகே கல்லூரி ஒன்றின் பேராசிரியர்களை பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்துவருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள கோவை தெற்குத் தொகுதி, ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், கோவையிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரிப் பேராசியர்களை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அருகிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் நிர்வாகம், பா.ஜ.க பிரசாரத்துக்குப் பேராசியர்கள் செல்ல வேண்டும் என வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர். `` இந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏழை, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களைப் பட்டதாரிகளாக்கும் நோக்கோடு, இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்தக் கல்லூரியைத் தொடங்கிவைத்தனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஆனால், கட்சி சார்ந்த எந்த நிகழ்வையும் மூத்த நிர்வாகிகள் அனுமதித்ததில்லை. இந்தநிலை கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டது. கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள், கோவை தெற்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மார்ச் 23-ம் தேதி கல்லுரியில் தலைமை பொறுப்பிலுள்ளவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசியர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது . அதில்,`மார்ச் 25-ம் தேதி மதியம் 12 மணி முதல் கோவை தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேராசிரியர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். பேராசியர்களுக்கு டீ, உணவு வழங்கப்படும்’ என்று கூறினர். முதலில் விருப்பமுள்ளவர்கள் மட்டும் பிரசாரத்துக்குச் செல்லலாம் என்று சொன்னபோது யாரும் முன்வராத காரணத்தால், கட்டாயம் அனைவரும் பிரசாரத்துக்கு வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் இப்போது அழுத்தம் கொடுத்துவருகிறது” என்றனர்

மேலும்,``25-ம் தேதி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு காலை 8 மணி முதல் நடக்கிறது. 12 மணிக்குள் அந்தப் பணிகளை முடித்துவிட்டு பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஏப்ரல் 6 -ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பள்ளி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள். எங்கள் கல்லுரியிலிருந்து பலரும் அதற்கான பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எங்களை ஒரு கட்சியின் பிரசாரத்துக்குச் செல்லக் கட்டாயப்படுத்துவது சரிதானா?" என்கிறார்கள் வேதனையுடன்.

- ஜெ.பி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு