சினிமா
Published:Updated:

50 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த சிறைக் குறிப்புகள்!

பாலதண்டாயுதம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலதண்டாயுதம்

- சி.மகேந்திரன்

ஐம்பது ஆண்டுகளுக்குமேல் ஒரு பெட்டியில் சிறைப்பட்டிருந்த ஒரு போராளியின் சிறைவாழ்க்கை, அண்மையில் நூல் வடிவில் வெளிவந்துள்ளது. புகழ்பெற்ற நாவலாசிரியர்களால் எழுதப்படும் நாவலைவிட அதிக விறுவிறுப்பையும் திருப்பங்களையும் கொண்டிருக்கிறது இந்தச் சிறைக்குறிப்பு. இதை எழுதியவர் ராஜாஜி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் இளம் வயதிலேயே சக கைதியாகச் சிறையில் இருந்தவர். அவர்தான் கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியான பாலதண்டாயுதம்.

ஆங்கிலேயர் காலத்தில் இந்திய விடுதலைப்போராட்டத்துக்காகச் சிறை சென்றவர், இந்தியா விடுதலை பெற்றபிறகு ‘சுதந்திர இந்திய அரசால்’ சிறைப்படுத்தப்பட்டார். 55 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த பாலதண்டாயுதம் 13 ஆண்டுகள் கொடிய அடக்குமுறையுடன் கூடிய சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பல்வேறு காலங்களில் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். சுதந்திரம் பெற்ற ஒரு சில மாதங்களில் கொலை செய்தார் என்றும், நேருவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்தார் என்றும் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்துள்ளார்.

50 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த சிறைக் குறிப்புகள்!

இதைத் தவிர ஆறு ஆண்டுகளுக்குமேல் தலைமறைவு வாழ்க்கை. தலைமறைவு வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு இரவுகூட நிம்மதியாக உறக்கம் கொள்ள முடியாது. எப்பொழுது எங்கு உணவு கிடைக்கும் என்றும் தெரியாது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓட்டத்திற்கு இடையில் தலைமறைவு இயக்கம் வழிகாட்டும் அரசியல் கடமைகளையும் செய்து முடிக்க வேண்டும். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் காவல்துறையால் அவரைக் கைது செய்ய முடிந்தது.

இதைப்போலவே இவரது மரணமும் பேரதிர்ச்சி நிறைந்ததாக அமைந்தது. சிறையிலிருந்து வெளிவந்த பாலதண்டாயுதம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராகக் கோவை நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்ற வேளையில், பாலதண்டாயுதம் பறந்து சென்ற விமானம் மலைச் சிகரம் ஒன்றில் மோதி மரணமுற்றார். அவரது உடலைக்கூட அடையாளம் காண முடியவில்லை. மாவீரம் நிறைந்த அந்தத் தமிழகப் புரட்சியாளர் `பாலன்’ என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

50 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த சிறைக் குறிப்புகள்!

நேருவின் ஆட்சிக்காலத்தில் பாலன் சிறையில் இருந்தபோது தன் சிறைவாழ்க்கை பற்றிப் பல்வேறு குறிப்புகளை எழுதியுள்ளார். அவர் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்தக் குறிப்புகளைப் பார்த்து, பாலனின் மகள் சுஜாதா அதை நூலாகக் கொண்டுவர வேண்டும் என்று முயன்றார்.

``இதை இவ்வளவு தாமதமாக வெளியிடுவதற்கான காரணம் என்ன?” என்று சுஜாதாவிடம் கேட்டபோது அவர் கூறியவை துயரம் நிறைந்த மற்றொரு பகுதியை எனக்குப் படம் பிடித்துக்காட்டியது. “அம்மாவைத் திருமணம் செய்துகொண்ட அப்பா, மணமான ஏழாவது மாதத்தில் சிறைக்குச் சென்றுவிட்டார். பல ஆண்டுகள் சிறையிலிருந்த அப்பா வெளிவந்தபோது, தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். எங்களால் அவரை மிக அபூர்வமாகத்தான் சந்திக்க முடிந்தது.

50 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த சிறைக் குறிப்புகள்!

அவர் சிறையிலிருந்து கொண்டு வந்தவை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது. அப்பாவும் விமான விபத்தில் இறந்துவிட்ட துயரம் நிகழ்ந்தபிறகு யாரும் அந்தப் பெட்டியின் மீது கவனம் கொள்ளவில்லை. அப்பா சிறையிலிருந்து விடுதலையாகி ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் எதிர்பாராமல் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். அதில்தான் இந்த அரிய விவரங்கள் இருந்தன” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தோழர்கள் ப.பா ரமணி, ஜான் இருவரிடமும் மக்கிப் போய் ஒடியும் நிலையில் செல்லரிக்கப்பட்ட காகிதங்கள் மட்டுமே வந்து சேர்ந்தன. இதன் பின்னர் சில தோழர்களிடம் பண உதவி பெற்று, பல மாதங்கள் முயன்று இந்த அரிய நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தக் குறிப்புகள் சாதாரண நிலையில் எழுதியவை அல்ல. அன்றைய சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது. கழிப்பறை வசதியில்லை. தங்கள் கழிவுகளை உறங்குமிடத்தின் ஒரு ஓரத்தில் ஒரு மண் சட்டியில் வைத்து விட்டு அங்கேயே உறங்க வேண்டும். ஒருபுறம் சிறைச்சாலைத் தனிமை. மறுபுறம் படையெடுத்துவரும் கொசுக்கூட்டத்தையும், மூட்டைப்பூச்சிகளையும் சமாளிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் எதிர்த்து முறியடிக்கும் மனவலிமை கொண்டவர்களால்தான் சிறைச்சாலையில் எழுதமுடியும். இவ்வாறு எழுதப்பட்டவைதான் இந்தச் சிறைக்குறிப்புகள்.

தோழர் பாலதண்டாயுதம் சிறையில் இருக்கும் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பலம் பொருந்திய கட்சி. 1952ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் கம்யூனிஸ்டுகளின் கூட்டணி வெற்றி பெறுகிறது. சில கட்சிகள் கூட்டணி மாறியதால், ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. இந்தக் காலம் பற்றிய பல தகவல்கள் இன்று வரை ஆவணப்படுத்தப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பின்னணியில் சிறையிலுள்ள தோழர்கள், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆட்சி என்ற ஒரு காலம் பற்றிய ஆய்வின் தேவையை இந்த நூல் வலியுறுத்துகிறது.

50 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த சிறைக் குறிப்புகள்!

பாலன் சிறைவாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்கள், உயர் அதிகாரிகள் முதல் திருட்டுக் குற்றத்தில் சிக்கியவர்கள் வரை அனைவரையும் பதிவு செய்திருக்கிறார். உயர் அதிகாரிகள் அன்பாகவும் இனிமையாகவும் நட்பாகவும் பேசி இழைக்கும் துரோகங்களை விவரிக்கிறார். அதே நேரத்தில் சிறைக்கைதிகளிடம் காணப்படும் மனிதாபிமானத்தையும் பதிவு செய்கிறார்.

1948 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஹிட்லரின் நாஜிக்கொடுமைகளை உலகத்துக்கு அம்பலப்படுத்தி அதிர வைத்தது நாஜிகளால் சிறைப்படுத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட ஜூலியஸ் பூஜிக் எழுதிய ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ நூல். இதேபோன்ற உள்ளடக்க வலிமையோடு வெளிவந்துள்ளது. தோழர் பாலதண்டாயுதம் எழுதிய ‘சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்’ புத்தகம்.

*****

சிறைக்குறிப்புகளில் சிறைவாழ்க்கை அனுபவங்கள், தன் மனைவியைப் பிரிந்துவந்த துயரம், கம்யூனிஸ்ட்களின் கடமைகள், திடீர் மரணங்கள், தோழர்கள் பற்றிய நினைவுகள் எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறார். பாரதி, உ.வே.சா முதல் மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் எனப் பலரது எழுத்துகள் குறித்த குறிப்புகள் இடம்பெறுகின்றன. அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துத் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பாலதண்டாயுதம் `திராவிட நாகரிகம், தேச விடுதலை இயக்கம், தமிழ்நாட்டுப் பொருளாதாரம் குறித்த மூன்று நூல்களை எழுத வேண்டும்' என்ற தன் ஆசையையும் பதிவு செய்துள்ளார். தனக்கு முதன்முதலில் ரேடியோ கிடைத்த நாளை அவ்வளவு கொண்டாட்டத்துடன் எழுதும் பாலன், `திட்டமிட்டபடி வேலை செய்தது சங்கீதம் போல் இன்பம் தருகிறது' என்கிறார்.