Published:Updated:

பெரியார் பல்கலைக்கழகமா அல்லது ஒரு சமூகத்துக்கான பல்கலைக்கழகமா? - கொதிக்கும் பேராசிரியர்கள்

பெரியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியார் பல்கலைக்கழகம்

துணைவேந்தரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

பெரியார் பல்கலைக்கழகமா அல்லது ஒரு சமூகத்துக்கான பல்கலைக்கழகமா? - கொதிக்கும் பேராசிரியர்கள்

துணைவேந்தரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

Published:Updated:
பெரியார் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
பெரியார் பல்கலைக்கழகம்

சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் சேலம் பல்கலைக்கழகத்தில், ஒரு சமுதாயத்தின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சுமத்துகின்றனர், அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்.

சேலத்தில் இயங்கிவரும் பெரியார் பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயங்கும் கலை-அறிவியல் கல்லூரிகளைத் தனது இணைப்புக் கல்லூரிகளாகக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் பெயரில் இயங்கிவரும் பெருமைக்குரிய இந்தப் பல்கலைக்கழகம், இப்போது சாதிப்பற்று சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பாக மே 5-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் அம்பேத்கர் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கொடுத்த மனுவில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் உள்ளிட முக்கியப் பதவிகளில் பட்டியலினச் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக அந்தப் பதவிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுவருகிறது. தற்போது புதிய பதிவாளர்களைத் தேர்வுசெய்யும் பணி நடைபெறுவதால், அதில் பட்டிலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரையிடம் பேசினோம். “கடந்த 12 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மட்டும்தான் இங்கு பதிவாளர்களாக இருந்துவருகின்றனர். துணைவேந்தரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அதைச் சுட்டிக்காட்டித்தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்” என்றார்.

பொன்முடி
பொன்முடி

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசுவோ, “பெரியார் பல்கலைக்கழகம் சாதி அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 30-ம் தேதி பதிவாளர் பதவிக்குத் தேர்வு நடந்தது. அந்தப் பதவியில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பவரை அமரவைக்க துணைவேந்தர் ஜெகநாதனும், பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவும் முயன்றுவருகின்றனர். பதிவாளர் பதவிகளுக்கு சாதி அடிப்படையில் நபர்கள் நியமிக்கப்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று எச்சரித்தார்.

பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிட மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், ‘‘பெரியார் பல்கலைக்கழகத்தில், தூய்மைப் பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை சாதி அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது பெரியார் பல்கலைக்கழகமா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமான பல்கலைக்கழகமா என்று தெரியவில்லை. கல்விக் கூடத்துக்குள் சாதிச் சங்கம் நடத்துகிறார்கள். தமிழக அரசின் சமூகநீதிக்குழு, பல்கலைக்கழகத்தில் உடனே ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.

பெரியார் பல்கலைக்கழகமா அல்லது ஒரு சமூகத்துக்கான பல்கலைக்கழகமா? - கொதிக்கும் பேராசிரியர்கள்

பேராசிரியர்கள் சிலரோ, “ஒரு சமூகத்தின் ஆதிக்கம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொறுப்பு பதிவாளராக இருக்கும் தங்கவேலு, பத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளை வகித்துவருகிறார். இதனால் பதவி உயர்வு பெறவேண்டிய பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஏப்ரல் 30-ம் தேதி பதிவாளர் தேர்வு நடைபெற்றது. தேர்ந்தெடுப்பு நடைபெற்றவுடன் பதிவாளர் யார் என்பதை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அதில் அமரவைக்க வேண்டுமென்பதற்காக இதுவரை முடிவுகளை அறிவிக்காமல் இருக்கின்றனர் துணைவேந்தரும் பதிவாளரும்” என்கின்றனர் ஆதங்கத்துடன்.

இது குறித்து விளக்கம் கேட்க துணைவேந்தர் ஜெகநாதனைத் தொடர்புகொண்டபோது, “நான் வெளியில் இருக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவர், அதன் பிறகு நமது அழைப்பை ஏற்கவில்லை.

பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவைத் தொடர்புகொண்டோம். “யாரையும் சமூகரீதியாகத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வதந்தியைக் கிளப்புவதற்காக, சிலர் தேவையில்லாமல் பேசிவருகின்றனர்’’ என்றவரிடம், ‘‘பதிவாளராக இருந்துகொண்டு பத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளை நீங்களே வகித்துவருவதாகச் சொல்கிறார்களே?’’ என்று கேட்டோம். ‘‘அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. துணைவேந்தர் பொறுப்பு தருகிறார், நான் பணியாற்றுகிறேன்’’ என்று முடித்துக்கொண்டார்.

அண்ணாதுரை, திருநாவுக்கரசு, செந்தூரப்பாண்டியன், ஜெகநாதன், தங்கவேலு
அண்ணாதுரை, திருநாவுக்கரசு, செந்தூரப்பாண்டியன், ஜெகநாதன், தங்கவேலு

இது குறித்து அரசின் கருத்தைப் பெறுவதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவரின் உதவியாளர்கள் என்று நம்மிடம் பேசிய (பாபு, ஹரிகிருஷ்ணன், முத்துமாறன்) அனைவரும், “ஐயா சி.எம் மீட்டிங்கில் இருக்கிறார். வேலையாக இருக்கிறார்” என்று கூறி நமது தொடர்பைத் தொடர்ச்சியாகத் துண்டித்தனர். அமைச்சர் பொன்முடியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நாம் குறுந்தகவல் அனுப்பியும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து நாம் விசாரிக்கத் தொடங்கியதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற பதிவாளர் தேர்வின் முடிவுகள் வெளிவராத நிலையிலேயே, பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபி என்பவரை, பொறுப்பு பதிவாளராக நியமித்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

தனது அரசை ‘சமூகநீதி அரசு’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பெரியார் பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் சாதி ஆதிக்கத்தைக் களையும் பொறுப்பு இருக்கிறது. செய்வாரா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism