Published:Updated:

‘பவுன்ஸ்’ ஆன செக்குகளும்... பரிதவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களும்!

பட்டாசு ஆலை விபத்து
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசு ஆலை விபத்து

எங்க குடும்பத்தைத் தாங்கிப்பிடிச்ச தூணா இருந்தவங்க, ஆணிவேரா இருந்தவங்கள்லாம் அந்தப் பட்டாசு விபத்துல உடம்பு செதறி கருகிப்போயிட்டாங்க

‘பவுன்ஸ்’ ஆன செக்குகளும்... பரிதவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களும்!

எங்க குடும்பத்தைத் தாங்கிப்பிடிச்ச தூணா இருந்தவங்க, ஆணிவேரா இருந்தவங்கள்லாம் அந்தப் பட்டாசு விபத்துல உடம்பு செதறி கருகிப்போயிட்டாங்க

Published:Updated:
பட்டாசு ஆலை விபத்து
பிரீமியம் ஸ்டோரி
பட்டாசு ஆலை விபத்து

நாட்டையே உலுக்கிய விருதுநகர் மாவட்டம், அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில், நிவாரணமாக தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதில், இரண்டு பேருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 25 பேருக்கு ஆலை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் உறவுகளை இழந்தோர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான, ‘ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலை’ இயங்கி வந்தது. இந்த ஆலை, சட்டவிரோதமாக நான்கு பேருக்குக் குத்தகைக்கும் விடப்பட்டுள்ளது. ஆலையிலுள்ள 30 அறைகளில், 89 பேர் வேலை பார்த்துவந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 20 அறைகள் வெடித்து, தரைமட்டமாகின. 27 பேர் உடல் கருகியும் சிதறியும் உயிரிழந்தார்கள். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

‘பவுன்ஸ்’ ஆன செக்குகளும்... பரிதவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களும்!

இந்த ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்களான சக்திவேல், ராஜா, சிவகுமார், பொன்னுபாண்டி, வேல்ராஜ் ஆகிய ஆறு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தபோதே, அதிகாரிகளின் முன்னிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்தநிலையில்தான், வங்கிக் கணக்கில் பணமில்லாததால் ஆலை நிர்வாகம் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக, 25 பேரின் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினோம். ‘‘எங்க குடும்பத்தைத் தாங்கிப்பிடிச்ச தூணா இருந்தவங்க, ஆணிவேரா இருந்தவங்கள்லாம் அந்தப் பட்டாசு விபத்துல உடம்பு செதறி கருகிப்போயிட்டாங்க. இறந்தவங்க குடும்பத்துக்கு மத்திய அரசு ரெண்டு லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியா மூணு லட்சமும் இழப்பீடா அறிவிச்சாங்க. முதலாளிமாருங்க அஞ்சு லட்ச ரூபாய்க்கு செக்கும் கொடுத்தாங்க. ரெண்டு மாசமாகியும் மத்திய அரசோட நிதி எங்களுக்குக் கிடைக்கலை. முதலமைச்சரோட நிதி 17 பேர் குடும்பங்களுக்கு மட்டும்தான் கிடைச்சுருக்கு.

‘பவுன்ஸ்’ ஆன செக்குகளும்... பரிதவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களும்!
‘பவுன்ஸ்’ ஆன செக்குகளும்... பரிதவிக்கும் பட்டாசுத் தொழிலாளர்களும்!

முதலாளிங்க கொடுத்த செக்கை பேங்குல போட்டப்ப, ‘செக்கு பவுன்ஸ் ஆயிடுச்சு’னு சொல்லிட்டாங்க. படிக்கிற பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்டலாம், ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செஞ்சுவெச்சிருந்த கல்யாணத்தை நடத்தலாம்னு நினைச்சிருந்தோம். ரெண்டு மூணு பேருக்கு கண் ஆபரேஷன், குடல் ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்குது. வாங்குன கடன்களை வேற அடைக்கணும். எல்லாத்துக்கும் இந்தப் பணத்தைத்தான் மலையா நம்பியிருந்தோம். ஆனா, இப்போ எங்க குடும்பங்களை உழைச்சுக் காப்பாத்துன உசுருகளும் போயி, காசும் இல்லாம, அடுத்து என்ன செய்யுறதுன்னு தெரியாம தெருத் தெருவா அலையுறோம்’’ என்றார்கள் கண்ணீருடன்.

விபத்து நடந்தால் பட்டாசு ஆலை சார்பில் கொடுக்கப்படும் நிவாரணத்துக்கான காசோலை, பணமில்லாமல் பவுன்ஸ் ஆவது இது முதன்முறையல்ல! தூத்துக்குடி மாவட்டம், முக்கூட்டுமலையைச் சேர்ந்த மோகனசெல்வி, ‘‘போன வருஷம், மார்ச் 20-ம் தேதி விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறையில இருக்குற ‘ராஜம்மாள் பட்டாசு ஆலை’யில நடந்த விபத்துல 14 பேர் செத்துப்போயிட்டங்க. அந்த கம்பெனி முதலாளி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்த 4 லட்ச ரூபாய் செக்கும் பவுன்ஸ் ஆயிடுச்சு. போராட்டமும் நடத்தி, முதலாளி வீடு, போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம். முதலமைச்சர் நிவாரண நிதியா ஒரு குடும்பத்துக்கு அறிவிச்ச ஒரு லட்சமும் இப்போ வரைக்கும் கிடைக்கலை. உயிருங்க போனது மட்டும்தான் மிச்சம்’’ என்கிறார் கண்ணீருடன்.

விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகாலட்சுமியிடம் பேசினோம். ‘‘விபத்து ஏற்பட்டதுமே பெரும்பாலான முதலாளிகள் தலைமறைவாகிவிடுகிறார்கள். பின்னர் போலீஸை அணுகி, அந்தநேரப் பதற்றத்தைக் குறைப்பதற்காகவும், குற்ற வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் காசோலையை தாராளமாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று வங்கியில் டெபாசிட் செய்தால், பணம் இல்லை என்றே பதிலே கிடைக்கும். ஆலை முதலாளியிடம் எந்த பதிலும் இருக்காது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால், புகார் மனுவை மட்டும் வாங்கிக்கொள்வார்கள்; எந்த நடவடிக்கையும் இருக்காது. இது இந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்துவருகிறது. இது தொடர்பாக மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. பட்டாசு ஆலை விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

மோகனசெல்வி, மகாலட்சுமி, கண்ணன்
மோகனசெல்வி, மகாலட்சுமி, கண்ணன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பேசினோம். ‘‘அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 27 பேரில், 17 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையான தலா ரூ.3 லட்சத்தை வழங்கிவிட்டோம். தேர்தல் நடத்தை விதி அமலானதால், மீதமுள்ளவர்களுக்குக் காசோலை வழங்க முடியாமல் போனது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு வழங்கப்பட்டுவிடும். மத்திய அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய்க்கான நிவாரணத் தொகை குறித்து இதுவரை எந்த அரசாணையும் வரவில்லை. ஆலையின் உரிமையாளர் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு அரசு பொறுப்பேற்காது. இருப்பினும், காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தொடர் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும், கைக்குக் கிடைக்காத இழப்பீடுகளும் பட்டாசு ஆலைத் தொழிலாளர் குடும்பங்களைத் தொடர்ந்து கண்ணீர் சிந்தவைக்கின்றன. தேவை.. உடனடி நடவடிக்கை!