Published:Updated:

ஜோலார்பேட்டை: `பந்தல் வாடகையை எப்போ தருவீங்க?’ - பணம் தராத போலீஸாரைப் பதறவைத்த பந்தல் அமைப்பாளர்

ஜோலார்பேட்டை காவல் நிலையம்
ஜோலார்பேட்டை காவல் நிலையம்

பந்தல் அமைத்த வாடகையைத் தராமல் இழுத்தடித்த போலீஸார்மீது அவர்களின் காவல் நிலையத்துக்கே சென்று தொழிலாளி ஒருவர் புகார் அளித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுக்காலமாக சிறையில் இருந்துவருகிறார். தற்போது விடுதலையை எதிர்பார்த்து பரோலில் வந்துள்ள அவர், ஜோலார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கிறார். இந்தநிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக, போலீஸாரின் உத்தரவின்படி பேரறிவாளன் வீட்டுக்குப் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் பந்தல் அமைத்து, மின் விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதற்கான வாடகைப் பணத்தை போலீஸாரே தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், ஐம்பது நாள்களைக் கடந்தும் வாடகைப் பணம் தராததால், மனமுடைந்த பந்தல் அமைப்பாளர் சம்பத், ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கே சென்று அங்கு பணிபுரியும் போலீஸார் மீதே புகாரளித்துள்ளார்.

பெற்றோருடன் பேரறிவாளன்
பெற்றோருடன் பேரறிவாளன்

அவரின் புகார் மனுவில், ``கடந்த மே மாதம் 28-ம் தேதி முதல் பேரறிவாளன் வீட்டின் முன்பு நான்கு பந்தல்கள், நாற்காலிகள், மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்திருக்கிறேன். நேற்று வரை அதற்கான வாடகை 45,000 ரூபாய் ஆகிறது. ஆனால், போலீஸார் 11,000 ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கின்றனர். மீதித் தொகையை எப்போது தருவீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் தொழிலாளி சம்பத். தங்கள் மீதான புகார் என்பதால் முதலில் சம்பத்திடமிருந்து மனுவை வாங்க மறுத்த போலீஸார், விவகாரம் மேலிடத்துக்குப் பறந்தவுடன் உடனடியாக வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஓரிரு நாளில், மீதித் தொகையை கொடுத்துவிடுவதாக சம்பத்திடம் போலீஸார் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம்.

இன்றோடு சிறையில் 30 ஆண்டுகள் நிறைவு செய்த பேரறிவாளன்... மு.க.ஸ்டாலினிடம் மன்றாடும் அற்புதம்மாள்!

இது குறித்து, ஜோலார்பேட்டை போலீஸாரிடம் கேட்டபோது, ``பந்தல் வாடகைக்கான பேலன்ஸ் கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். பந்தல் அமைப்பாளர் மதுபோதையில் வந்து புகாரைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். நாங்களும், புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, 'போ பார்த்துக்கலாம்' என்று சொல்லி அனுப்பிவிட்டோம். சீக்கிரம் பேலன்ஸைக் கொடுத்துவிடுவோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு