Published:Updated:

கொலை, பாலியல் தொல்லை வழக்குகள்! -நடவடிக்கை எடுக்காத போலீஸாருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்

So office போலீஸ்
So office போலீஸ்

ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவரை காரைக்கால் நகர காவல் அதிகாரிகள் கைதுசெய்யாமல் முன் ஜாமீன் எடுக்க உதவும் விதமாக அவரை தப்பிக்கவிட்டுள்ளனர்.

காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க, துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண் பேடி உத்தரவிட வேண்டும் என்று 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.

So office
So office

இதுபற்றி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைவர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். "காரைக்காலில் 03.06.2020 அன்று கைலாசநாதர் கோயில் சந்தில், மோகன் என்பவரை மூவர் கொலை செய்ததாக வழக்கு எண் 212/2020 பதிவு செய்யப்பட்டது. கொலை குற்றம் சாட்டப்பட்ட மூவரை காரைக்கால் நகர காவல் அதிகாரிகள் கைது செய்யவில்லை. அது வெறும் வாய்த் தகராறு, தள்ளுமுள்ளு காரணமாக நடந்த விபத்து என்று கொலை வழக்கை மாற்றும் செயலில் இறங்கியிருப்பதாகத் தகவல்.

அதேபோல், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.இ) தேர்வில் வெற்றிபெற்று, மேகாலயா மாநிலத்திலிருந்து காரைக்காலில் பணி அமர்த்தப்பட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோ, படம், மற்றும் குரல் பதிவுகளைத் தொடர்ந்து பல முறை அனுப்பி, மருத்துவர் வீடு வரை சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் தர்மராஜ். இவர், அந்த மருத்துவர் பணிபுரியும் அதே மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிகிறார். தர்மராஜ் மீது கடந்த 27.05.2020 அன்று வழக்கு எண் 203 / 2020 பதிவுசெய்த காரைக்கால் நகர காவல் அதிகாரிகள் இன்றுவரை கைது செய்யவில்லை.

கொரோனா போராட்டத்தில் துணிவுடன் நின்று சேவை ஆற்றும் மருத்துவர்களை உலகமே போற்றும் நிலையில், இந்தியாவில் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்ட வேளையில், காரைக்காலில் மேகாலயப் பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியான குற்றங்களைச் செய்த தரமராஜ் என்பவரை ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டவரை காரைக்கால் நகர காவல் அதிகாரிகள் கைது செய்யாமல் முன் ஜாமீன் எடுக்க உதவும் விதமாக அவரை தப்பிக்கவிட்டுள்ளனர்.

Hospital
Hospital

காரைக்கால் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்த பிறகும், உடனடியாகக் கைதுசெய்யத் தவறிவிட்டனர். தவறான சுய லாபமே காரணம். காரைக்காலுக்கு சிறந்த மருத்துவர்கள் பணி புரிய வருவதே அரிது. வந்த பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் காரைக்காலுக்கு இனி யாரும் வர பயப்படுவார்கள். மேலும், அத்தகைய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் பாதுகாப்பு கொடுத்தால், மருத்துவர்கள் காரைக்காலுக்கு பணிபுரிய வரவே மாட்டார்கள். கொரோனா பரிசோதனை செய்து, தர்மராஜ் அவர்களுக்கு தொற்று இல்லை என்று அறிக்கை வந்தவுடன் கைது செய்யாமல் அவர் தலைமறைவாக உடந்தையாக இருந்த காரைக்கால் நகர காவல் நிலைய அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை வழக்குப்பதிவு செய்து, அந்த அதிகாரிகளைக் கைதுசெய்ய துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது" என்றார்.

இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். "இதற்கெல்லாம் நீங்கள் எங்க இன்ஸ்பெக்டரிடம் பேசணும்" என்று கூறி இன்ஸ்பெக்டர் சண்முகம் செல் நம்பர் தந்தனர். பலமுறை இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டும் தொடர்பு எல்லைக்கு அப்பாலயே இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் விளக்கம் தரும் நிலையில் அதை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவிட தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு