அலசல்
அரசியல்
Published:Updated:

‘‘ஈரோட்டின் இளவரசர்போல் செயல்படுகிறார்!’’

சக்தி கணேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சக்தி கணேசன்

எஸ்.பி மீது பாயும் புகார் கணைகள்

பெண்களின் பிரச்னைகளைக் களைய ‘லேடீஸ் ஃபர்ஸ்ட்’ திட்டம், முதியோர்களின் குறை தீர்க்க ‘ஹலோ சீனியர்ஸ்’ திட்டம், பெண் போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என, ஈரோடு எஸ்.பி-யான சக்தி கணேசனின் செயல்பாடுகள் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் நிறையவே இருக்கின்றன. அதே நேரத்தில், ‘ஈரோட்டின் இளவரசர்போல் செயல்படுகிறார்’, ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை ஈரோட்டில் உருவாக்கிவைத்திருக்கிறார்’ என்றெல்லாம் அவர்மீது ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை எடுத்துவைக்கின்றனர்.

‘அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களுக்கு, எஸ்.பி சக்தி கணேசன் அனுமதி கொடுப்பதில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டவர்கள், வீடு புகுந்து கைதுசெய்யப்படுகிறார்கள். அதேசமயத்தில், இந்துத்துவா கட்சிகளுக்கு சார்பாகச் செயல்படுகிறார்’ என்று ஈரோட்டைச் சேர்ந்த அரசியல் அமைப்பினர் பலர் ஒன்றுசேர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் நேரில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் புகார் மனு கொடுத்தபோது...
மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் புகார் மனு கொடுத்தபோது...

மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யு.சி.எல்) மாநிலத் தலைவர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். ‘‘ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு எஸ்.பி தொடர்ச்சியாக அனுமதி மறுத்துவருகிறார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது தொடர்பான ஒரு கருத்தரங்கத்துக்கு, ஈரோடு பெரியார் மன்றத்தில் ஏற்பாடு செய்தோம். அதற்கு ‘சர்ச்சைக்குரிய கருத்தரங்கம்’ என்ற காரணத்தைச் சொல்லி அனுமதி மறுத்துவிட்டார். ஏழு தமிழர் விடுதலைக்காக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மக்கள் சந்திப்புப் பயணம் மேற்கொண்டார் அற்புதம்மாள். ஆனால், ஈரோட்டில் அற்புதம்மாள் நிகழ்ச்சிக்கு எஸ்.பி தடைபோட்டார். சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் மரணத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்ததுடன், என்னுடன் சேர்த்து இரண்டு பேரை விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கைதுசெய்தார். இப்படி, தொடர்ந்து ஜனநாயக விரோதமாகவே செயல்படுகிறார் எஸ்.பி’’ என்றார்.

‘நீரோடை’ அமைப்பின் தலைவர் நிலவன், ‘‘பெரியாரிய, அம்பேத்கரிய முற்போக்கு அமைப்புகளை எஸ்.பி வன்மமாகக் கையாள்கிறார். குள ஆக்கிரமிப்பு சம்பந்தமான சூழலியல் பிரச்னைகளுக்குக்கூட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார். ஆனால், இந்துத்துவா அமைப்புகளுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படுகிறார்.

சக்தி கணேசன்
சக்தி கணேசன்

தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் மோகன் பகவத் கலந்துகொண்டார். `பள்ளிகளில் பயிற்சி முகாம் நடத்த அனுமதிக்கக் கூடாது’ என நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘போலீஸ் எதுக்கு இருக்கு... சட்டம் ஒழுங்கை நாங்க பாத்துக்குறோம்’ என்று எஸ்.பி சொன்னார். அதே எஸ்.பி, எங்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று சொல்லி அனுமதி கொடுக்க மறுக்கிறார். ஈரோட்டின் இளவரசர் என்பதுபோல், இவர் தனக்கென ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு செயல்படுகிறார்’’ என்றார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பெரியசாமி, ‘‘சாமானிய, பாதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக்கான குரல்களை உயர்த்தக் கூடாது என

எஸ்.பி சக்தி கணேசன் நினைக்கிறார். அகிம்சை வழியில்கூட போராட அனுமதி கொடுப்பதில்லை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை ஈரோட்டில் எஸ்.பி உருவாக்கிவைத்திருக்கிறார்’’ எனக் கொதித்தார்.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாநகர ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் செயப்பிரகாசம், ‘‘பா.ஜ.க, இந்து மகாசபை போன்றவற்றுக்கு தங்குதடையின்றி அனுமதி கொடுக்கிறார். ராகுல் காந்தியைக் கண்டித்து பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில், ஒரு வாரம் கழித்து ஃபாத்திமா லத்தீப் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டால், `போக்குவரத்து இடையூறு, சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடும்’ என்கிறார். சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எஸ்.பி-யைச் சந்திக்கச் சென்றால், மதித்து உட்காரவைக்காமல் நிற்கவைத்தே பேசி அனுப்புகிறார்’’ என்று காட்டமானார்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி-யான சக்தி கணேசன் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறார்?

கண.குறிஞ்சி,  நிலவன், பெரியசாமி, செயப்பிரகாசம்
கண.குறிஞ்சி, நிலவன், பெரியசாமி, செயப்பிரகாசம்

‘‘பாபர் மசூதிப் பிரச்னை காரணமாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்ததால், பல ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதிக்க முடியவில்லை. சூழ்நிலையைப் பொறுத்துதான் அனுமதி கொடுக்கப்படுகிறது. முறையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், எப்படி அனுமதியளிக்க முடியும்? இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி நிகழ்ச்சிகளுக்கும் பலமுறை அனுமதி மறுத்திருக்கிறோம். இப்படி சம்பந்தமே இல்லாமல் ஒப்பிட்டு, மிகைப்படுத்திச் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இரண்டு வருடங்களாக ஈரோட்டில் என்னுடைய செயல்பாடுகளைப் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.