Published:Updated:

“ஓட்டுக்கு பணம் கொடுக்கவா திட்டப்பணிகள்?”

வால்பாறை
பிரீமியம் ஸ்டோரி
News
வால்பாறை

- வால்பாறை நகராட்சி ஆணையரைச் சுழற்றியடிக்கும் புகார்...

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில், அவசர அவசரமாக ஏராளமான திட்டப்பணிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் வால்பாறை நகராட்சி ஆணையர். இதையடுத்து, “ஆளுங்கட்சி வேட்பாளருக்குச் செலவு செய்யவும், வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவுமே திட்டப்பணிகள் என்கிற பெயரில் வால்பாறை நகராட்சியில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவு செய்திருக்கிறார்கள்” என்று புகார் எழுந்தநிலையில், நகராட்சி ஆணையரைப் பணியிலிருந்து விடுவித்து, விசாரணையை முடுக்கியிருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள்.

பவுன்ராஜ்
பவுன்ராஜ்

தேர்தலுக்கு முன்னதாக, வால்பாறை தொகுதியின் சி.பி.ஐ வேட்பாளர் ஆறுமுகம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், டெண்டர்கூட விடாமல் ஏராளமான பணிகளைத் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார். இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இப்படி மோசடி செய்த பணத்தைவைத்து

அ.தி.மு.க வேட்பாளர் அமுல் கந்தசாமியை வெற்றிபெறவைக்க முயற்சிகள் நடக்கின்றன. பல ஒப்பந்ததாரர்களை பவுன்ராஜ் மிரட்டி, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்துக்கு நிதியளிக்கச் சொல்கிறார். ‘அ.தி.மு.க வேட்பாளர் அமுல் கந்தசாமி எனது உறவினர்தான். அவருக்கு வாக்களியுங்கள்’ என்று ஓப்பனாகப் பேசுகிறார். அதனால், அவர் திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தை ரத்து செய்து, பவுன்ராஜைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

“ஓட்டுக்கு பணம் கொடுக்கவா திட்டப்பணிகள்?”

“என்னதான் நடந்தது?” வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். “சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிப்ரவரி 26-ம் தேதியன்றே அவசர அவசரமாக வால்பாறை நகராட்சி அலுவலகத்துக்கு ஃபர்னிச்சர் வாங்குதல், ஏற்கெனவே நல்ல நிலையிலிருக்கும் கட்டடங்களுக்கு டைல்ஸ் ஒட்டுதல், பூங்கா உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத

41 பணிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் பவுன்ராஜ். இதற்குத் தேர்தல் ஆணையத்திடமோ, நகராட்சி நிர்வாகத்துறையிடமோ அனுமதி வாங்கவில்லை. நகராட்சியில் டெண்டர் விடப்பட்டதிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. நகராட்சி ஆணையர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எந்தப் பணிக்கும் உத்தரவிட முடியாது. அந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை.

இப்படி சுமார் 15.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. ஒப்பந்ததாரர்களின் பட்டியலில் இல்லாதவர்களுக்குக்கூட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வால்பாறையில் 4.75 கோடி ரூபாயில் படகு இல்லமும், 5.06 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்காவும் கட்டும் பணி நடக்கிறது. இதற்கு மாநில வனத்துறை மற்றும் மத்தியச் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெறவில்லை. சுற்றுலா மேம்பாட்டுத்துறை மூலம் செய்ய வேண்டிய இந்தப் பணிகளை, நகராட்சி மூலம் செய்வதே பணத்துக்காகத்தான். இதனால் பணிகள் தரமில்லாமல் நடக்கின்றன

இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலருக்குப் புகார் சென்றதையடுத்து, துறைரீதியாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் புகாரை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சிக்கின. தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான நாகராஜன், பவுன்ராஜைப் பணியிலிருந்து விடுவிடுத்ததுடன், அவர்மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பவுன்ராஜ் மீது மோசடி வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்” என்றவர்கள், பவுன்ராஜின் பின்னணி குறித்தும் பகிர்ந்துகொண்டார்கள்...

“ஆரம்பத்தில் ஒரு சாதிய அரசியல் கட்சியில் இருந்த பவுன்ராஜ், டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசுப்பணியில் சேர்ந்தார். தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி ஆணையராக இருந்தபோதே வேலை வாங்கித்தருவதாக வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக பவுன்ராஜ் மீது புகார்கள் எழுந்தன. உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு மாற்றப்பட்டவர், பிறகு ஆளுங்கட்சியினரைப் பிடித்து வால்பாறை நகராட்சி ஆணையரானார். அப்போதிருந்தே முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் நபராக மாறிப்போனார் பவுன்ராஜ்.

அமைச்சர் வேலுமணியின் பெயரைச் சொல்லியே சக அதிகாரிகளை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டார். மேலிடத்தில் அரசியல் ஆசி இவருக்கு இருந்ததால், இவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார்கள்.

“ஓட்டுக்கு பணம் கொடுக்கவா திட்டப்பணிகள்?”

நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவரோ, “எங்களிடம் என்.ஓ.சி வாங்காமலேயே நகராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்தார்கள். பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகே நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய விவகாரத்திலும் நகராட்சிப் பணியாளர்கள்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என்றார்.

மேற்கண்ட புகார்கள் தொடர்பாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சரவணகுமார் விசாரணை நடத்திவருகிறார். அவரிடம் பேசியபோது, “பவுன்ராஜ் பணிபுரிந்த காலகட்டத்தில் நடந்த அனைத்துப் பணிகள் மீதும் சிறப்பு தணிக்கை மற்றும் விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிந்ததும், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

பவுன்ராஜிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவரது மூன்று அலைபேசிகளின் எண்களும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. அந்த எண்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப்பில் விளக்கம் கேட்டு, தகவல் அனுப்பியுள்ளோம்.

மக்களுக்காகப் பணிபுரிய வேண்டிய அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்காகப் பணிபுரிவது சட்டவிரோதம். மேற்கண்ட விவகாரத்தில் நேர்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.