Published:Updated:

“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு?”

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

அடுக்கடுக்கான புகாரில் சிவகங்கை ஆட்சியர்

எழுதுபொருள் அச்சுத்துறையின் இயக்குநராக இருந்தபோது, பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு செய்ததாகப் புகாரில் சிக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியரான ஜெயகாந்தன் மீது, பணி நியமனங்கள் தொடர்பாகவே மீண்டும் அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழக அரசின் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநராக ஜெயகாந்தன் பணியாற்றியபோது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து 27.09.2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ‘அச்சுத்துறையை அச்சுறுத்தும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்?!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரை வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அவர்மீதான புகார்க் கடிதங்கள் நமது அலுவலகத்துக்கு வந்தன. புகார் அனுப்பியவர்களில் ஒருவரான விருத்தாசலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை நேரில் சந்தித்தோம்.

“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு?”

“கடந்த 15.04.2015 அன்று ‘எழுது பொருள் அச்சுத்துறைக்கு 33 பைண்டிங் பணியாளர்கள் தேவை’ என்று துறைசார்ந்த வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் ஜெயகாந்தன். அதில், `அடிப்படைக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி’ என்றும், `ஐ.டி.ஐ-யில் பைண்டிங் பயிற்சி முடித்து, மத்திய அரசால் வழங்கப்படும் என்.டி.சி மற்றும் என்.ஏ.சி சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

ஆனால் வயது வரம்பு, கல்வித்தகுதி என்ற எதையும் கருத்தில்கொள்ளாமல் தகுதியுள்ளவர்கள், தகுதியற்றவர்கள் என விண்ணப்பித்த 1,360 பேருக்கும் 09.01.2016 அன்று எழுத்து தேர்வை நடத்தினார் ஜெயகாந்தன். தவிர, தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதித்தால், பேரம் பேசி பணம் சம்பாதிக்க முடியாது அல்லவா... அதேபோல தொழில்நுட்பப் பணிக்கு தொழில்முறைத் தேர்வு நடத்தாமல், சம்பந்தமே இல்லாமல் பொதுஅறிவு தேர்வை நடத்தினார். பைண்டிங் பணிக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு?

கண்ணன் - சீனுவாசன்
கண்ணன் - சீனுவாசன்

எனவே, ‘தகுதியில்லாதவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கிறீர்கள்?’ என்று 2016, மார்ச் மாதம் அவரிடமே நேரில் முறையிட்டேன். ஆனால், நான் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் எட்டு மாதங்கள் கழித்து என்மீது பொய் வழக்கு போட்டுவிட்டார்” என்றார் கோபத்துடன்.

“33 காலியிடங்கள் என்று விளம்பரப்படுத்தி விட்டு 105 பேருக்கு பணி ஆணை வழங்கியிருக்கிறார் ஜெயகாந்தன். எனக்கு வயது 38. வயதைக் காரணம் காட்டி எனக்கு வேலை இல்லை என்று மறுத்தவர், 45 வயதைக் கடந்த பலருக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறார். தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் சான்றிதழ், கல்வித்தகுதிகளையும் ஆய்வுசெய்தால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” என்கிறார் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விருத்தாசலத்தைச் சேர்ந்த சீனுவாசன்.

“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு?”

இது குறித்து விளக்கம் கேட்க ஜெயகாந்தனின் அலைபேசிக்குப் பலமுறை அழைத்தும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. எனவே, அவருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, அவரது வாட்ஸ்அப்புக்கும் விளக்கம் கேட்டு தகவல் அனுப்பினோம். அவரது அலுவலக எண்ணான 0457 5241466 என்ற எண்ணுக்கு அழைத்தபோது பேசிய பெண் ஊழியர் ஒருவர், “கலெக்டர் பாதுகாவலரிடம் சொல்கிறேன்” என்று நம் எண்ணைப் பெற்றுக்கொண்டார். மறுநாள் அதே எண்ணுக்கு அழைத்தபோது அழைப்பை ஏற்கவில்லை. collrsvg@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு தகவல் அனுப்பியிருக்கிறோம். ஆனால், அதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் நமக்கு வரவில்லை.

அப்பாவி இளைஞர்களின் அழுகுரலுக்குச் செவி சாய்க்குமா தமிழக அரசு?

“சார் ரொம்ப நல்லவருங்க...’’

ஏற்கெனவே ஜூ.வி-யில் வெளியான ‘அச்சுத்துறையை அச்சுறுத்தும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்?!’ கட்டுரை அச்சுக்குப் போகும் கடைசி நிமிடம் வரை, ஜெயகாந்தனின் விளக்கத்தைப் பெற பலமுறை தொடர்புகொண்டோம். அலைபேசி அழைப்பையே அவர் ஏற்கவில்லை. அதுமட்டுமா... “சார் ரொம்ப நல்லவருங்க. அவர்கிட்ட ஒரு விளக்கம் கேட்டிருக்கலாம்...” என அவரது தரப்பிலிருந்து சிலர் நமது அலுவலகத்துக்கு நேரில் வந்தும், அலைபேசியிலும் அறிவுரைகள் வழங்கினர். தற்போது அதே நபர்களைத் தொடர்புகொண்டு, இந்தக் கட்டுரை விஷயமாக ஜெயகாந்தனிடம் பதிலேதும் வராததைக் குறிப்பிட்டு, “அவரிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டோம். “சார் நாங்க ரிட்டயர்டு ஆகிட்டோம். முயற்சி பண்ணிப் பார்க்கறோம் சார்” என்று சொல்லி போனை வைத்துவிட்டனர். அவர்களிடமிருந்தும் எந்தத் தகவலும் வரவில்லை. ஓர் அரசு ஊழியரான மாவட்ட ஆட்சியருக்கு, மக்கள் சார்பில் பத்திரிகைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தார்மிகக் கடமை இருக்கிறது. பத்திரிகைகளுக்கே பதில் தராத ஆட்சியர், எப்படி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்?