Published:Updated:

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

வீட்டுத்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுத்தோட்டம்

தற்போது காய்கறிகள், கீரைகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் வீட்டிலேயே காய்கறிகளை வளர்ப்பதன் மூலம் கணிசமான பணத்தையும் மிச்சப் படுத்த முடியும்

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

தற்போது காய்கறிகள், கீரைகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் வீட்டிலேயே காய்கறிகளை வளர்ப்பதன் மூலம் கணிசமான பணத்தையும் மிச்சப் படுத்த முடியும்

Published:Updated:
வீட்டுத்தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுத்தோட்டம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழல் உண்டானபோது பலர் பல வித்தியாசமான முயற்சிகளைக் கையில் எடுத்தனர். அவற்றில் ஒன்று வீட்டுத்தோட்டம். இது அனைவருக்கும் இயற்கையின் மீது மீண்டும் ஒரு பிணைப்பை உரு வாக்கியதோடு மன அமைதியையும் உற்சாகத்தையும் தருவதாகவும் இருந்தது. மட்டுமல்லாமல் கடைகளில் வாங்கும் காய்கறிகள், கீரைகள் எந்த அளவுக்கு இயற்கை யானவை என்பது தெரியாத நிலையில் வீட்டில் தோட்டம் அமைத்து நம் கையாலேயே விதைத்து, நாமே வளர்த்து அறுவடை செய்து அவற்றைச் சமைத்துச் சாப்பிடும்போது கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே என்று சிலாகிப்பவர்களும் உண்டு.

 அன்பரசு
அன்பரசு

தற்போது காய்கறிகள், கீரைகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் வீட்டிலேயே காய்கறிகளை வளர்ப்பதன் மூலம் கணிசமான பணத்தையும் மிச்சப் படுத்த முடியும். அதேசமயம் வீட்டுத்தோட்டம் வைப்பதில் பலரும் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்ப தாகச் சொல்கிறார்கள். தோட்டத்தை எப்படிப் பராமரிப்பது, விதைகளை, செடிகளை எப்படிப் பார்த்து வாங்குவது, அவற்றை எப்படி விதைப்பது, எப்படி தண்ணீர் ஊற்றுவது, உரம் வைப்பது எப்படி போன்ற விஷயங்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருப்பதில்லை. இதனால் தோட்டம் வைத்த வேகத்திலேயே ‘ஏண்டா வைத்தோம்’ என்ற எண்ணத்துக்குப் போய் விடுகிறார்கள். வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றியும், தோட்டத்தைப் பராமரிப்பது பற்றியும் தெரிந்துகொண்டால் எளிமையாகத் தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

வீட்டுத் தோட்டம் குறித்த முழுமையான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மாதவரம் பண்ணையின் முதன்மை அதிகாரி அன்பரசு.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

இடம் இல்லாவிட்டாலும் தோட்டம் அமைக்கலாம்!

தோட்டம் என்றதுமே அதற்குப் பெரிய இடம் வேண்டும், நிறைய செலவு ஆகும் என்று யோசிக்க வேண்டியதே இல்லை என்பதை ஏற்கெனவே பலரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இட நெருக்கடி அதிகமுள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங் களிலேயே மொட்டை மாடிகளில் தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. வீட்டில் இருக்கிற இடத்திலேயே தோட்டம் அமைப்பதற்கான பல வழிமுறைகள் வந்துவிட்டன. வீட்டைச் சுற்றி இடமிருந்தால் மண்ணிலேயே தோட்டம் அமைக்கலாம். அதற் கான வாய்ப்பு இல்லாதவர்கள் மாடியில் தோட்டம் அமைக்கலாம். இரண்டு வாய்ப்புகளுமே இல்லையெனில் பால்கனியில்கூட அமைக் கலாம். இதற்கும் இடம் இல்லையெனில், வெயில்படும் இடத்தில் தொங்கும் வகையிலான செடிகள் அமைக்கலாம், வீட்டின் கைப்பிடிச் சுவர்களில் சிறிய தொட்டிகள் அமைத்துப் பராமரிக்கலாம். இப்படி நிறைய வழிகள் இருக்கின்றன. காய்கறி, கீரை, பழங்கள், பூச்செடி, மூலிகைச் செடி எனக் கலவையாகத் தோட்டம் அமைத்தால் ஒரு குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

தோட்டம் வைக்க என்ன தேவை?

முதலில் ஆர்வம் தேவை. குழந்தையைப் பெற்று வளர்ப்பது போலத்தான் செடி, கொடி, மரங்களையும் நாம் தினமும் பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டும்.

எனவே, முதலில் தோட்டத்தைப் பராமரிக்க மனதளவில் தயாராக இருக்க வேண்டும். பிறகு எப்படிப்பட்ட தோட்டத்தை அமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். காய்கறித் தோட்டமா, பூக்கள் மட்டும் இருக்கிற தோட்டமா, மூலிகைச் செடிகளா, அலங்கார செடிகளா, இல்லை அனைத்தும் கலந்த கலவையா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதைப் பொறுத்து தேவையான பொருள்களைத் தயார் செய்ய வேண்டும்.

தோட்டம் அமைப்பதற்கான செலவு என்பது அவரவர் பொருளாதார சூழலைப் பொறுத்தது. உங்களால் செலவு செய்ய முடிந்தால் விலை உயர்ந்த அழகான தொட்டிகளை வாங்கி தோட்டம் அமைக்கலாம். தோட்டத்துக்குத் தேவையான எல்லாவற்றையுமே பணம் கொடுத்து வாங்கலாம். ஆனால், செலவு செய்ய முடியாதவர்கள், பணம் கொடுத்து அழகான, விதவிதமான தொட்டிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் வீணாக இருக்கும் குடம், தண்ணீர் கேன், பெயின்ட் டப்பா, பழைய பக்கெட், டயர், ஷூ போன்ற பொருள்களைப் பயன்படுத்தியே செடிகளை வளர்க்க முடியும். குறைந்த விலையில் கிடைக்கும் பயனுள்ள செடிகளை மட்டும் வளர்க்கலாம். அலங்கார செடிகள் போன்ற வற்றைத் தவிர்க்கலாம். காய்கறி விதைகள் 5 ரூபாயிலிருந்து கிடைக் கின்றன. சிறிய அளவில் தோட்டம் அமைக்க அதிகபட்சம் 1,000 ரூபாய் வரைதான் செலவாகும். புதிதாகத் தோட்டம் அமைப்பவர்கள் மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்டப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

மண்ணும் உரமும்...

தோட்டம் அமைப்பதற்கு முன், செடிகள் வளர்ப்பதற்குத் தேவையான மண் கலவையைத் தயார் செய்ய வேண்டும். செடிகள் வளமாக இருக்க வளமான மண் தேவை. செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மண்ணில் இருந்தால்தான் அதில் விளைகிற காய்கறி, பழங்களும் நன்றாக இருக்கும்.

மண்கலவையில் மண், தொழு உரம், தென்னங்கழிவு ஆகிய மூன்றையும் 1:1:1 என்ற விகிதத்தில் சேர்த்து, கலந்து வைத்துக்கொண்டு தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.

அடி உரமாக சாணம், காய்கறிக்கழிவுகள் போன்றவற்றைப் பயன் படுத்தலாம். தயார் செய்த மண் கலவையில் உடனே விதைகளை, செடிகளை வைத்துவிடாமல், தொட்டிகளில் மண் கலவையை நிரப்பி, நான்கு நாள்களுக்கு சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இது மண்ணில் நுண்ணுயிரிகள் உருவாக உதவும். செடிகளின் வளர்ச்சி யும் நன்றாக இருக்கும். மண் கலவையைத் தயார் செய்ய முடியாதவர்கள், அருகிலுள்ள நர்சரிகளில் மண் கலவையை வாங்கிக் கொள்ளலாம். காய்கறிக் கழிவுகள் மூலம் நாமே உரம் தயாரிக்கலாம். ஏதேனும் ஒரு தொட்டியில் கொஞ்சம் மண் போட்டு காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு, பயன்படுத்திய டீத்தூள் எல்லாவற்றையும் போட்டு அதற்கு மேலே கொஞ்சம் மண் போட்டு வைத்துவிட்டு தினமும் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கிளறி விட வேண்டும். சில வாரங்களில் எல்லாம் மட்கி உரமாகிவிடும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

தொட்டிகளைத் தயார் செய்தல்!

மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவது நல்லது. ஏனெனில், அதிகமான தண்ணீரை மண் தொட்டி உறிஞ்சிக்கொள்ளும். மீதமுள்ள தண்ணீர், சிறு துளை வழியாக வெளியேறும். ஆனால், இது மாடியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும்பாலும் எடை குறைவான பிளாஸ்டிக் பைகளையும் தொட்டிகளையும் தேர்வு செய்கிறார்கள். இவற்றில் தண்ணீர் அதிகப்படியாக இருந்தால் அது வேரை அழுகச் செய்து செடி, கொடிகளின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, தண்ணீர் அதிகப்படியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொட்டிகளில் மண் நிரப்பும்போது அதன் விளிம்பு வரை நிரப்பக் கூடாது. தொட்டியில் முக்கால் அளவு உயரத்துக்கு மட்டும் மண்ணை நிரப்பிக்கொள்ள வேண்டும். மண்ணை நிரப்புவதற்கு முன் தொட்டி களில் இருந்து அதிகபட்ச நீர் வெளியேறுவதற்கான துளைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மாடித்தோட்டம் வைக்க விரும்புபவர்கள் மாடியின் தளத்தையும், கட்டடத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மாடியின் மேற்பரப்பில் ரப்பர் கோட் பெயின்ட் அடிப்பது பாது காப்பானதாக இருக்கும். அதிக கனம் இல்லாத தொட்டிகள், ஜாடிகளைத் தேர்வு செய்யலாம். செடிகள் வளர்ப்பதற்கான குரோ பேக்குகள், பிளாஸ்டிக் பைகள், தொட்டிகள் போன்றவற்றிலும் வளர்க்கலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

விதைகளை வாங்குவது எப்படி?

விதைகளை வாங்கும்போது அதன் காலாவதி காலத்தைப் பார்த்து வாங்க வேண்டும். காலாவதி ஆன விதைகளை வாங்கி விதைத்தால் பெரும்பாலும் முளைக்காமல் போகலாம்.

தோட்டம் அமைக்கும் முயற்சியும், நேரமும், பணமும் வீணாகும். தோட்டத்துக்கு ஏற்ப விதைகளை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக்கொள்ளலாம். விதைகளை அதிக அளவில் வாங்கும்போது குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை காலாவதி காலம் இருக்க வேண்டும். விதைகளை வாங்கிய பிறகு, அவற்றைத் தண்ணீரில் போட்டுப் பாருங்கள். மிதந்தால் அந்த விதைகளால் பயனிருக்காது. அவற்றை நீக்கிவிடலாம். தண்ணீரில் மூழ்கும் விதைகளை எடுத்து விதைக்கலாம்.

தோட்டக்கலைத்துறையிலும், விதைத் திருவிழாக்களிலும், அருகில் உள்ள நர்சரிகளிலும் விதைகளை வாங்கலாம். ஏற்கெனவே தோட்டம் வைத்திருப்பவர்கள் செடியிலேயே காய்கறிகளை முற்றும் வரை விட்டுவிட்டு, முற்றிய பிறகு அதிலிருந்து விதைகளை எடுத்து சிறிதளவு சாம்பலுடன் கலந்து வைத்துக்கொள்ளலாம். தேவைப் படும்போது அவற்றை விதைத்துக்கொள்ளலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

விதைக்கும் முறை!

விதைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகவ்யாவில் சில மணி நேரம் ஊற வைக்கலாம். அப்படி ஊற வைப்பதால் விதையின் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும். ரொம்பவும் ஆழமாகத் தோண்டி விதைக்க வேண்டியதில்லை. மேற்பரப்பிலிருந்து ஓரளவுக்கு ஆழத்தில் விதைக்கேற்ப குழி தோண்டி விதைக்க வேண்டும். வெண்டை, கீரை, போன்றவற்றை நேரடியாகத் தொட்டியிலேயே விதைக்கலாம். கத்திரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றை சிறிய குழிகள் உள்ள தட்டுகளில் (முட்டை டிரே) விதைத்து, அவை முளைவிட்டு வளர்ந்த பிறகு, பெரிய தொட்டிகளில் நடவு செய்யலாம்.

பெரும்பாலும் நாட்டுக் காய்கறிகளை விதைப்பது நல்லது. அடுத்தடுத்து அதிலிருந்து விதைகளை எடுத்துப் பயிரிடலாம். ஹைபிரீடு வகையை விதைத்தால் அதிலிருந்து மீண்டும் நாம் செடிகளை விதைத்து மகசூலை எடுக்க முடியாது. சில நேரங்களில் செடி நன்றாக வளர்ந்திருக்கும். ஆனால் காய்க்காது. அவை பெரும்பாலும் ஹைபிரீடு விதைகளில் வளர்ந்த செடிகளாக இருக்கலாம். பழ மரங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவற்றை மண் பரப்பில் நட்டு வளர்ப்பது சிறந்தது. நல்ல பலன் கிடைக்கும். விரும்பினால் மாடித்தோட்டத்திலும் இவற்றை வளர்க்கலாம். ஆனால், அதற்குப் போதுமான இடம் வேண்டும். அவை வளர்வதற்கு ஏற்ப மண் பரப்பு வேண்டும். மாடியில் அப்படி உருவாக்குவது கட்டடத்தை பாதிக்கலாம். மேலும், மாடியில் வளர்க்கும்போது அது சரியான மகசூலைத் தரும் என்றும் சொல்ல முடியாது.

அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைப் பெரிய பை அல்லது வாளிகளில் நடலாம். கொடி அவரை, புடலங்காய், பாகற்காய் போன்ற கொடி காய்களை, பந்தல் அமைத்துப் படரவிட வேண்டும். கொடி வளர ஆரம்பித்தவுடன் இரண்டு மீட்டர் உயரத்தில் பந்தல்கள் அமைக்க வேண்டும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

மாதுளைக்கு 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பை அல்லது டிரம் பயன்படுத்த வேண்டும். முருங்கை, கொய்யா, வாழை போன்றவற்றுக்கு 75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்கள் தேவைப்படும்.

இட்லிப்பூ, செவ்வ‌ரளி, மஞ்சள் அரளி போன்ற பூ மரங்களுக்கு 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பை அல்லது வாளி போதுமானது.

மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி, சம்பங்கி ஆகியவற்றை மீடியமான தொட்டி அல்லது வாளிகளில் வளர்க்கலாம். கொடி வகை பூச்செடிகளை 50 லிட்டர் டிரம்களில் நட்டு, பந்தல் அமைத்து கொடியாகப் படரவிட்டு வளர்க்கலாம். அல்லது கவாத்து செய்து குற்றுச் செடியாகவும் வளர்க்கலாம்.

ரோஜா செடிகளில் எட்வர்டு ரோஸ் (பன்னீர் ரோஸ்), ஆந்திரா ரெட், செவன்டே ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம். இவை எல்லா காலநிலை யிலும் நன்றாக வளரும். சாமந்தியில் வெள்ளை மற்றும் மஞ்சள் இரண்டும் நடலாம். இவை குளிர்ச்சியான காலங்களில் மட்டும் பூக்கும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

கீரை வகைகள்...

கொத்தமல்லி, புதினா, பாலக்கீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங் கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரை ஆகிய கீரை வகைகளை மாடித் தோட்டத்தில் பயிரிடலாம். இவற்றில் கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவற்றை விதைகள் மூலமாகப் பயிரிடலாம்.

புதினா, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றின் தண்டுகளை நடவு செய்து வளர்க்கலாம். வல்லாரைக்கீரையை வேர் பாகத்துடன் கூடியதாக நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் பாய்ச்சுதல்!

செடிகள் செழித்து வளர முறையாகத் தண்ணீர் ஊற்றுவதும் அவசியம். மண் பரப்பு தோட்டம் எனில் தனியாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. பாத்திரம் கழுவும் நீர், துணி துவைக்கும் நீர் போன்றவற்றை செடிகளுக்குச் செல்லும்படி செய்யலாம். தொட்டிச் செடிகளுக்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்றுவது அவசியம். ஆனால், தண்ணீர் வடிய வடிய ஊற்றத் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை ஊற்றினால் போதும். கோடைக்காலத்தில் மட்டும் காலையும் மாலையும் ஊற்றலாம். மழைக்காலத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

சிறிய வாட்டர் பாட்டில், ஷூ, சிறிய கப்புகள் போன்றவற்றில் புதினா, கொத்தமல்லி, அழகு செடிகள், கீரைகள், மூலிகைச் செடிகள் போன்று குறைவாக வேர் படரக்கூடிய செடிகளாக வளர்க்கலாம். குடம், 20 லிட்டர் தண்ணீர் கேன், வாளி போன்றவற்றில் கத்திரி, தக்காளி, எலுமிச்சை போன்ற செடிகளை வளர்க்கலாம். அப்பார்ட்மென்ட் வீடுகளில் மாடியில் தோட்டம் அமைக்க முடியாதவர்கள் பால்கனியில் தொங்கும் விதமான தொட்டிகளைப் பயன்படுத்தி கீரை, அழகு செடிகள், பூச்செடி வகைகளை வளர்க்கலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

செடிகளுக்கு ஊட்டமூட்டும் உரம்!

வீட்டுத்தோட்டம் வைப்பவர்கள் பெரும்பாலும் இயற்கையான உரங்களையே பயன்படுத்த விரும்புகிறார்கள். வீட்டுக்குத் தேவையான அளவு காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்ய இயற்கை உரம் போது மானது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளைப் பெற முடியும். உரத்துக்கு எங்கும் அலைய வேண்டிய தில்லை. வீட்டிலேயே காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடுகள், டீத்தூள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல் அவற்றைத் தனியாக ஒதுக்கி வைத்து உரமாக மாற்றலாம்.

இவை தவிர சாணம், சாம்பல், மண் புழு உரம் போன்றவற்றையும் வாங்கி இடலாம். அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களைத் தொட்டிகளில் சிறிதளவு இட வேண்டும். அசோஸ் பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்கள் தமிழக வேளாண் துறையின் உயிர் உர உற்பத்தி மையங்கள் மற்றும் விற்பனை மையங் களில் கிடைக்கும்.

தொட்டியில் விதை நட்டு 10-15 நாள்களுக்குப் பிறகு சாணம், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை இயற்கை உரமாக இடலாம்.

நடவு செய்த செடிகளில் பிஞ்சுப் பருவம் வரும்போது, ஒவ்வொரு தொட்டியிலும் 50 கிராம் வேப்பம்பிண்ணாக்கு இட வேண்டும். அமுதக் கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைத் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். செடிகள் வாடும்போது பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும்.

பூ பிடிக்கும் பருவம், பிஞ்சுப் பருவத்தில் மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

பூச்சித் தாக்குதலைத் தடுக்க என்ன வழி?

செடிகள் செழித்து வளரவும், மகசூல் சரியாகக் கிடைக்கவும் பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து, வாரம் ஒருமுறை செடிகள் மீது ஸ்பிரே செய்யலாம். இல்லையெனில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்தும் ஸ்பிரே செய்யலாம். பூச்சி, எறும்பு வராமல் இருக்க மாட்டுச் சாண சாம்பலைத் தூவலாம்.

காய்ந்த இலைகள், பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான இலைகளை, செடிகளிலிருந்து உடனே பறித்து விட வேண்டும். அவற்றையும் உரங்களாகப் பயன்படுத்தலாம்.

செடிகளை அவற்றின் மகசூல் தரத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் நீக்கிவிட்டு புதிதாக செடிகளை மாற்றி நடலாம். திரும்ப நடும்போது தொட்டியில் முன்பிருந்த அதே வகையான செடிகளை விதைக்காமல் ரகத்தை மாற்றி நடலாம். வாரம் ஒருமுறை, செடியைச் சுற்றி உள்ள மண்ணைக் கொத்திட விட வேண்டும். கொத்தி விட்ட பின்பு பஞ்சகவ்யா அல்லது உரம் இடலாம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய் சம அளவில் கலந்து அவற்றில் 25 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அவற்றுடன் சிறிதளவு காதிபார் சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.

நிழல்வலைக் குடிலுக்கு மாற்று!

அதிகமாக வெயில்படும் இடங்களில் நிழல்வலைக் குடில் அமைக்கலாம். அதற்கு அதிக செலவாகுமே என்பவர்கள், உங்கள் தோட்டத்தின் நீள அகலத்துக்கேற்ப கடைகளில் நிழல்வலைகளை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரே அளவுள்ள 8 சாக்குப் பைகளில் மணலை நிரப்பி, மூலைக்கு ஒன்றாகவும், இரண்டு மூலைக்கு நடுவில் ஒன்றாக வும் வையுங்கள். அதில், உயரமான கம்புகளை மணல் பையில் ஊன்றி, நிழல்வலைகளைக் கட்டினால் அதிகமான வெயிலில் இருந்து செடி களைப் பாதுகாக்கலாம். சாக்குப்பைகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

கோடைக்காலத்தில் தோட்டப் பராமரிப்பு!

கோடைக்காலத்தில் தண்ணீர் ஊற்றினாலும் செடிகள் அதிக வெப்பம் காரணமாக வாடிவிட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க பழக்கரைசல் தயார் செய்து தெளிக்கலாம். பழக்கரைசல் தயார் செய்ய நன்றாகப் பழுத்த வாழைப்பழம் 2 கிலோ, பப்பாளி 2 கிலோ, கொய்யா 2 கிலோ, மாட்டுச் சிறுநீர் ஒரு லிட்டர், வெல்லம் 2 கிலோ ஆகிய அனைத்தையும் நன்றாகக் கலந்து கூழாக்கி காற்றுப்புகாதவாறு மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை மூடி வைக்கவும். அவ்வப்போது நன்றாகக் கலக்கி விட வேண்டும். அதன் பிறகு, அந்தக் கலவையின் மீது வெள்ளை ஏடு படிந்திருக்கும். அந்தக் கலவையை வடிகட்டி தண்ணீரை மட்டுமே எடுத்து அதனுடன் தண்ணீர் கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம். ஒரு லிட்டர் பழக்கரைசலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கோடைக்காலத்திலும் செடிகள் நன்றாக வளரும்.

செடிகளை செழிப்பாக்கும் தேமோர் கரைசல்!

செடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த தேமோர் கரைசல் உதவுகிறது. செடிகளில் பூ வைக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால் பூக்கள் அதிகமாகப் பூக்கும். இந்தக் கரைசல் தெளித்தால் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு நிழலான இடத்தில் வைத்து தினமும் இந்தக் கரைசலைக் கலக்கி விட வேண்டும். ஒரு வாரத்தில் தேமோர் கரைசல் தயாராகிவிடும். பின்னர், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி அளவு தேமோர் கரைசலைக் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் செடிகள் மீது தெளிக்க வேண்டும். பூக்கள் திரண்ட காய்களாக மாறுவதற்கும் அதிக காய்கள் பெறுவதற்கும் அயல் மகரந்தச் சேர்க்கை வழிதான் சிறந்தது. இந்தக் கரைசல் தேனீக்களைக் கவர்ந்திழுப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவியாக இருக்கும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

வீட்டுத்தோட்டத்துக்கான உரங்கள்!

பைகளில் விதை அல்லது நாற்றுகள் என எது நடுவதாக இருந் தாலும், பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து பிறகு, நட வேண்டும். இது விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்கும். மேலும் இவ்வாறு செய்வது வேர் தொடர்பான நோய்களைத் தடுத்து செடி செழிப்பாக வளர உதவும்.

செடியின் வளர்ச்சிக்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். கடலைப் பிண்ணாக்கு, ஆட்டு எரு, தொழுவுரம் ஆகியவற்றை 15 நாள்களுக்கு ஒரு முறை சரியான விகிதத்தில் கலந்து செடிகளுக்கு இட வேண்டும். தேவைப்படும்போது தலா 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கையும் கொடுக்கலாம். எறும்பு, எலி, வேர்க்கறையான் தாக்குதல்களில் இருந்து செடிகளைக் காப்பாற்ற இது அவசியம்.

மழைக்காலங்களில் செடிகளின் ஈரத்தன்மையைப் போக்க வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும்.

காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த பூண்டுக் கரைசல் பயன்படும்.

புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து, மாட்டுச் சிறுநீருடன் கலந்து ஊறவைத்து, கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், ஆற வைத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப் பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களிலும் செடி நனையும்படி தெளிக்க வேண்டும். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை இந்தக் கரைசல் விரட்டியடிக்கும்.

நொச்சி, வேம்பு, ஆடாதொடை இலை, நிலவேம்பு, பப்பாளி இலை ஆகிய பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து

2 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஒருநாள் முழுக்க ஊறவைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது மாலையில் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இவற்றை பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவத்தில் தெளித்தால் காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் ஆகிய நோய்கள் தாக்காமல் சீரான மகசூலைப் பெறலாம்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

எப்போது அறுவடை?

அவரைக்காய், கத்திரிக்காய் இரண்டையும் காய்கள் மென்மையாக இருக்கும்போதே அறுவடை செய்ய வேண்டும்.

பாகற்காய் விதைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும்.

முருங்கையை விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும்.

மிளகாய் சிவப்பு நிறமாக மாறுவதற்கு முன் பறித்து விட வேண்டும்.

வெண்டை இளம்பிஞ்சுகளாக இருக்கும்போதே பறிக்க வேண்டும்.

தக்காளிப் பழங்கள் சிவப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்போது பறிக்க வேண்டும்.

கீரைகளை நிலப்பரப்பிலிருந்து 5 செ.மீ உயரத்துக்கு விட்டுவிட்டு கிள்ளி எடுக்க வேண்டும்.

சின்ன வெங்காயம் 60-75 சதவிகிதம் தளைகள் காயத் தொடங்கியதும் அறுவடை செய்ய வேண்டும்.

சுரைக்காய், புடலங்காய்களை முற்றுவதற்கு முன் மென்மையாக இருக்கும்போதே பறிக்க வேண்டும்.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

தோட்ட வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்...

காய்கறிச் செடிகளுக்குப் போதுமான சூரிய வெளிச்சம் நிச்சயம் தேவை. பொதுவாக, காய்கறிச் செடிகளுக்கு குறைந்தது 8 மணி நேரம் சூரிய வெளிச்சம் தேவை.

பூச்செடிகள், அலங்காரச் செடிகளுக்கு குறைந்த அளவு சூரிய வெளிச்சம் கிடைத்தால் போதுமானது.

மாடிகளில் தோட்டம் அமைக்கும்போது தொட்டிகளை நேரடியாகத் தரையில் வைத்தால் கட்டடம் பாதிக்கப்படும். எனவே, தொட்டிகளை வைக்கும் முன், அவற்றுக்கு அடியில் கடப்பா கல், மரப்பலகைகள் போன்றவற்றை வைத்து அவற்றின்மீது தொட்டிகளை வைக்கலாம்.

மாடித்தோட்டத்தில் தொட்டிகளுக்கு அடியில் தண்ணீர் தேங்காத அளவுக்கு மட்டும் தண்ணீர் விட்டால் போதுமானது. அப்படி தண்ணீர் தேங்கினால் அது கட்டடத்தையும் பாதிக்கும். தொட்டியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றினால் போதும். பூவாளி கொண்டு தண்ணீர் பாய்ச்சுவது பலன் அளிக்கும். சிறிய கப்புகளில் வளரும் செடிகளுக்கு ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்தால் போதும்.

மண்கலவைக்குப் பதில், தேங்காய் நார்ப் பைகள், தேங்காய் நார்க் கட்டிகள் போன்றவற்றிலும் செடிகளை வளர்க்கலாம்.

இவற்றில் அலங்காரச் செடிகள் வளர்க்கலாம். இவை அதிக நேரம் ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதால் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.

வீட்டுத்தோட்டம்... ஆரம்பிக்கலாங்களா? - விதை முதல் பராமரிப்பு வரை கம்ப்ளீட் கைடு

செடிகளை வளர்க்கும் பை/தொட்டியை நெருக்கமாக வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் டிரம், வாளிகளை நன்றாகச் சுத்தம் செய்த பிறகு, பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான தண்ணீர் செடியில் தங்கினால் செடியின் வேர் அழுக வாய்ப்புள்ளது. ஆகையால், அதிகமான தண்ணீர் வெளியேற டிரம், வாளிகளின் அடிப்பகுதியில் துளைகள் இட வேண்டும்.

மாடியில் காய்கறி பயிரிட மண் அல்லது சிமென்ட் தொட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மட்கிய தேங்காய் நார் கம்போஸ்ட்டை பயன்படுத்தலாம். இவை மண் இறுகுவதைக் குறைப்பதோடு, எடை குறைவாக இருப்பதால் தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும்.

ஊட்டத்துக்கான உரங்களை, குளிர்ச்சியான மாலைவேளை அல்லது அதிகாலை வேளைகளிலும், பூச்சிவிரட்டிக் கரைசலை நல்ல வெயில் பொழுதிலும் பயன்படுத்த வேண்டும்.

வேர்ப்பூச்சிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு இரண்டும் கலந்த கலவையை வைத்து தண்ணீர் விட வேண்டும். புங்கன் பிண்ணாக்கு கிடைக்காத பட்சத்தில் வேப்பம் பிண்ணாக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

தொட்டிகளில் மாடியின் வெப்பம் ஏறாமல் இருக்க அடியில் மரக்கட்டைகள், தெர்மாகூல் ஆகியவற்றை வைக்கலாம். தெர்மாகூல் பெட்டிகளையும் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.

தோட்டத்தில் செடிகளில் உருவாகும் களைகளை இரண்டு வாரங் களுக்கு ஒருமுறை எடுத்து விட வேண்டும்.

தமிழக வேளாண்துறை மானிய விலையில் தோட்டம் அமைப்பதற்கான பொருள்களை வழங்கி வருகிறது. தோட்டம் அமைக்க விரும்பு பவர்கள் தோட்டக்கலைத்துறை பண்ணையை அணுகி அதன் விவரங்களைத் தெரிந்துகொண்டு பயன் அடையலாம். சில தொண்டு நிறுவனங்களும் இலவசமாக செடிகள், மரக்கன்று களை வழங்கி வருகின்றன. அவற்றையும் வாங்கிப் பயன் படுத்தலாம்.

மாடித்தோட்டமும், வீட்டைச் சுற்றி மரங்களும் வளர்த்தாலே வீட்டின் வெப்பநிலை குளிர்ச்சியாக சீராக இருக்கும். மாடித் தோட்டம் அமைப்பதால் பறவைகள், பட்டாம்பூச்சி, அணில் போன்றவையெல்லாம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இது உங்களுடைய வீட்டின் சூழலையே மாற்றிவிடும். இரைச்சலும், மாசும் நிறைந்த நகரத்திலும் மனநிறைவான இனிய அனுபவத் தைப் பெற முடியும். வீட்டிலேயே அடைந்துகிடக்கும் முதி யவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மாடித்தோட்டத்தைப் பராமரிப்பது பொழுதுபோக்காகவும் மனநிறைவைத் தருவதாகவும் இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சகவ்யா தயாரிப்பது எப்படி?

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள்:

* பசுஞ்சாணம் - 5 கிலோ

* பசுமாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர்

* காய்ச்சி ஆறவைத்த பால் - 2 லிட்டர்

* பசுமாட்டுத் தயிர் - 2 லிட்டர்

* பசு நெய் - 500 கிராம்

* நாட்டுச் சர்க்கரை - 1 கிலோ

*இளநீர் - 3 லிட்டர்

*கனிந்த வாழைப்பழங்கள் - 12

* தென்னங்கள் - 2 லிட்டர்

* தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஓர் எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து, ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதைப் பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

* ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்குப் பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

* 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளம் மாலை வேளை களில் பயிருக்குத் தெளிக்க வேண்டும்.

* தெளிக்கப் பயன்படுத்தும்போது கண்டிப்பாகக் கரைசலை வடிகட்டிய பிறகுதான், தெளிக்க வேண்டும்.

* விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

*முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத்திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.

* இந்தப் பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துகளைப் பயிர்களுக்குக் கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாக இருப்பதுடன் நுண்ணூட்டச் சத்துகளை வேர்களுக்கு அள்ளியும் கொடுக்கிறது.

அமுதக்கரைசல்

அமுதக்கரைசலை ‘நிலவள ஊக்கி’ என்பார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும்.

பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்க லாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்து விடலாம்.

தயாரிப்பது எப்படி?

ஐந்து கிலோ மாட்டுச் சாணம், மூன்று லிட்டர் மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் அரை கிலோ வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமுதக் கரைசல் தயார் ஆகிவிடும். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மூலிகை பூச்சிவிரட்டி தயாரிப்பது எப்படி?

* ஊமம், பீநாரி, வேம்பு,சோற்றுக் கற்றாழை, எருக்கு, பப்பாளி, ஆடாதொடை, தும்பை, துளசி, நொச்சி, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக் குமுட்டி, நித்திய கல்யாணி போன்ற செடிகளின் இலைகளைக் கொண்டு பூச்சி விரட்டி தயாரிக்கலாம்.

*இவற்றுடன் நெய்வேலி காட்டாமணக்கு செடி இலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒரு கோணிப்பை அளவுக்கு மேற்சொன்ன இலைகளை சிறு துண்டு களாக நறுக்கி இலைகள் மூழ்கும் அளவுக்கு பெரிய தொட்டியில் அல்லது டிரம்மில் மாட்டுச் சிறுநீருடன் ஊற வைக்க வேண்டும்.

* அவ்வப்போது கலக்கிவிட்டு வர 10 நாள்களில் மூலிகை பூச்சிவிரட்டி தயார். ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும்.

மீன் அமினோ அமிலம் தயாரிப்பது எப்படி?

* ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்றுப்புகாமல் மூடி வைக்க வேண்டும்.

* 40 நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் திரவம் மாறி இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்தத் திரவத்திலிருந்து பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

* இவ்வாறு தயாரான மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

* ஒருமுறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.