
தங்கள்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி ‘ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்புக்குழு’வைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் மதுரையில் கோரிக்கை மாநாடு நடத்தியுள்ளார்கள்
‘ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராடியவர்கள்மீது தமிழகமெங்கும் பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்’ என்ற குரல் நான்கு ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஜனவரி 16-ம் தேதி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வரும் நிலையில், இந்தக் குரலுக்கு அவர்கள் செவிசாய்ப்பார்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஜல்லிக்கட்டுச் செயற்பாட்டாளர்கள்!
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை எதிர்த்து 2017-ல் சென்னை மெரினா, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதிலும், மெரினாவில் நடந்த போராட்டம், சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது தமிழக அரசு. அதே நேரம், போராட்டத்தின் இறுதி நாளில் போராட்டத்தை முன்னெடுத்த பலரும் காவல்துறையினரால் குறிவைத்து தாக்கப்பட்டனர். அப்பாவி மாணவர்கள்மீதும், பெண்கள்மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது சட்டமன்றத்தில் பேசிய அன்றைய முதலமைச்சர் பன்னீர்செல்வம், ‘‘போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்றார்.
காவல்துறையினரின் தாக்குதலை எதிர்க்கட்சிகள் கண்டித்ததைத் தொடர்ந்து, நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது அரசு. சென்னை, மதுரை, கோவையில் 1,600-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, ஓராண்டுக்கு முன்பு விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதேநேரம், ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராடிய 179 பேர் மீது அலங்காநல்லூர், செல்லூர், பெருங்குடி, திலகர் திடல் காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரித்தது. அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களுக்கு அலைந்துவருகிறார்கள். இவை தவிர சென்னை, சேலம், கோவை, பழநி, சிவகங்கை எனப் பல ஊர்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில்தான், தங்கள்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி ‘ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்புக்குழு’வைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் மதுரையில் கோரிக்கை மாநாடு நடத்தியுள்ளார்கள். குழுவின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘அன்றைய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கோரிக்கை நியாயமானது என்பதால்தான், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது அரசு. இப்போதும் தங்களை ஜல்லிக்கட்டு நாயகர்களாகக் கூறிக்கொள்பவர்கள், எங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறாமல் இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த வழக்குகளால் நீதிமன்றங்களில் ஆஜராகிவரும் இளைஞர்கள், வேலைக்குச் செல்ல முடியாமலும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைத் தேட முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்ததற்காக அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்கள் மீதெல்லாம் வழக்கு போட்டு கோர்ட்டுக்கு அலையவிடும் ஆட்சியாளர்கள்தான், இப்போது ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைக்க அலங்காநல்லூர் வருகிறார்கள். எனவே, எங்கள் மீதான வழக்குகளை உடனே ரத்துசெய்ய வேண்டும். நீதியரசர் ராஜேஸ்வரன் ஆணையத்தின் அறிக்கையையும் வெளியிட வேண்டும்’’ என்றார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இன்றுவரை நீதிமன்றத்துக்கு நடையாக நடந்துவருகிறார், அலங்காநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள். அவரிடம் பேசினோம். ‘‘நம்ம பண்பாட்டுப் போராட்டம்கிறதால, நானும் என் மகனும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கலந்துக்கிட்டோம். போராட்டத்தோட கடைசி நாள்ல அமைதியா கிளம்பிக்கிட்டிருந்தோம். அப்ப பார்த்து, திடீர்னு புகுந்த போலீஸ் எங்க மேல தடியடி நடத்துனாங்க. அதோட விட்டாங்களா... என் வீட்டுக்கு வந்தும் அராஜகம் பண்ணினாங்க. போலீஸ்கிட்டருந்து தப்பிக்க நானும் என் மகனும் 15 நாளு தலைமறைவாகி, சோறு தண்ணியில்லாம ரொம்பவே கஷ்டப்பட்டோம். பொறவு, கேஸை வாபஸ் வாங்க அமைச்சர்்கள், எம்.எல்.ஏ-க்கள்னு பலருக்கும் மனு கொடுத்தோம். ஒரு பிரயோஜனமும் இல்லை’’ என்றார் ஆவேசமாக.
‘ஜல்லிக்கட்டு நாயகர்கள்’ என்ன செய்யப்போகிறார்கள்?