Published:Updated:

நெல்லை: `பள்ளிச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி; தரமற்ற கட்டுமானமே காரணம்!’ - ஆட்சியர்

சோகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்
News
சோகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்

நெல்லையில் தனியார் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் பலியான சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. நூற்றாண்டுகள் கடந்த அந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். இன்று இடைவேளை நேரத்தின்போது மாணவர்கள் கழிவறைக்குச் சென்றுள்ளனர்.

சுவர் இடிந்து மாணவர்கள் பலியான பள்ளி
சுவர் இடிந்து மாணவர்கள் பலியான பள்ளி

கழிவறையின் முகப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. அதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி எட்டாம் வகுப்பு பயிலும் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வரஞ்சன் என்ற மாணவனும், ஒன்பதாம் வகுப்பு பயிலும் டவுன் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற மாணவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுத்தமல்லி பழவூர் பகுதியைச் சேர்ந்த சுதிஷ் என்ற ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு ஆறுதல்
காயமடைந்தவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு ஆறுதல்

இந்த விபத்தில் சிக்கிய சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர் சித்திக் அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தினர்.

சோகத்தில் பெற்றோர்
சோகத்தில் பெற்றோர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “பள்ளியில் சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்துள்ளது. பள்ளியில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சிறப்புக்குழு அமைத்து அனைத்துப் பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதற்கிடையே, சாஃப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மூவர் உயிரிழந்தது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை ஞானசெல்வியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின்மீது இந்திய தண்டனைச் சட்டம் 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த இடம்
பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த இடம்

பள்ளிச் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பரிசோதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.