அலசல்
சமூகம்
Published:Updated:

மதுரையில் தொடரும் மரணங்கள்... உயிருடன் விளையாடுகின்றனவா ஒப்பந்த நிறுவனங்கள்?

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை

தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலேயே, இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த ஆண்டில் மட்டும் ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். சமீபத்திய பலி சக்திவேல்!

மதுரை, கூடல்புதூர் பகுதியிலுள்ள அசோக்நகரில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த ஏ.கே.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருக்கிறது. கடந்த 7-11-2022 அன்று காலை மழைநீர் தேங்கி நின்ற 15 அடி பள்ளத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். அப்போது குழியின் மேலே பக்கவாட்டில் குவிக்கப்பட்டிருந்த மண் திடீரென சரிய, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் இடுப்பளவு சேற்றுப் புதைகுழிக்குள் சிக்கிக்கொண்டார். உடனிருந்த தொழிலாளர்கள், சக்திவேலை உயிரோடு மீட்க எவ்வளவோ முயன்றும் உடலை மட்டுமே மீட்க முடிந்தது.

மதுரையில் தொடரும் மரணங்கள்... உயிருடன் விளையாடுகின்றனவா ஒப்பந்த நிறுவனங்கள்?

மதுரை இராசாசி மருத்துவமனை மார்ச்சுவரி முன்பு சக்திவேலின் மனைவி ஜெகதா, பேசத் திராணியற்றுக் கிடந்தார். அவரைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த உறவினர்கள், ‘‘சத்தியமங்கலத்தில், கொத்துக்காட்டில் கூலிவேலை செய்துவந்தார் சக்திவேல். அவருக்கு ஜெகதாவுடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் சக்திவேலுக்கு வேலை கிடைத்ததால் மதுரைக்கு வந்தார். அவர் பள்ளத்தில் விழுந்தபோது, தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற ஒரு பம்ப்பிங் மோட்டார்கூட இல்லை. தீயணைப்புப் படையினர் வந்துதான் உடலை மீட்டனர். மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிரிழந்துவிட்டார்’’ என்றனர் சோகமாக.

சக்திவேல்
சக்திவேல்

‘‘கடந்த ஏப்ரலில், பழங்காநத்தம் கழிவு நீரேற்று நிலைய தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் இறந்தனர். ஜூன் மாதம், விளாங்குடியில் பாதாளச் சாக்கடைப் பணியில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அக்டோபர் மாதம், கூடல்புதூரில் குடிநீர்க் குழாய் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியானார். தற்போது சக்திவேல் என மாநகராட்சியின் அலட்சியத்தால் இதுவரை மொத்தம் ஆறு பேர் பலியாகியுள்ளனர். தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலேயே, இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன’’ என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது, “தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றாமல் இருந்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்து வேலை செய்யலாமா, வேண்டாமா என்பதையும் ஆலோசிப்போம்’’ என்றார்.

சிம்ரன் ஜீத்சிங்
சிம்ரன் ஜீத்சிங்

“ஒப்பந்தப் பணியாக இருந்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்வையிட வேண்டும். பாதுகாப்புக் கருவிகளுடன் பணிசெய்ய ஒப்பந்த நிறுவனங்களை அவர்கள் கட்டாயப்படுத்தினால்தான் இது போன்ற இழப்புகளைத் தடுக்க முடியும்” என்கின்றனர் சக்திவேலைக் காப்பாற்ற முயன்ற சக தொழிலாளர்கள். செய்யுமா மாநகராட்சி?