Published:Updated:

“இந்தச் சாதியில பொறக்குறது தப்பா..?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊராட்சிகளில் தொடரும் தீண்டாமைக் கொடூரம்
ஊராட்சிகளில் தொடரும் தீண்டாமைக் கொடூரம்

ஊராட்சிகளில் தொடரும் தீண்டாமைக் கொடூரம்... பட்டியலின மக்களின் நீங்கா துயரம்!

பிரீமியம் ஸ்டோரி

‘ஏழையென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்...

மனிதர் யாரும் ஒரு நிகர்

சமானமாக வாழ்வமே!’

ஆயிரமாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக்கு எதிராக, கடந்த நூற்றாண்டில் பாரதி எழுதிய கவிதை இது. இன்னும் இந்தக் கவிதைக்குத் தேவை இருக்கிறது; இந்தச் சமூகம் இன்னும் கீழ்மையான குணங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது என்பது வெட்கத்துக்கு உரியது.

பட்டியல் சமூகத்திலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை, சாதியின் பெயரால் ஒடுக்கு வதுடன், ஊராட்சி மன்றக் கூட்டங்களில் இருக்கைகள் மறுக்கப்பட்டு தரையில் அமரவைக்கப்படும் கொடூரத் தீண்டாமைச் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறிவருகின்றன.

கொடுமை - 1: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், அரியாக்குஞ்சூர் ஊராட்சித் தலைவரான முருகேசன், பழங்குடியின இருளர் பிரிவைச் சேர்ந்தவர். கடந்த ஜூன் மாதம் துக்க வீட்டுக்குச் சென்ற அவர், சவக்குழி தோண்ட வைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. “துக்கத்துக்குச் சென்ற என்னைச் சவக்குழி தோண்டச் சொன்னாங்க!” என்று தொலைக்காட்சிகளில் கதறினார் முருகேசன். எங்கிருந்து, யாரின் அழுத்தம் வந்ததோ... “விருப்பப்பட்டுத்தான் குழி தோண்டினேன்” என்று பிரச்னையை முடித்துக் கொண்டார்.

சிந்துஜா - விசாரணையின் போது...
சிந்துஜா - விசாரணையின் போது...

கொடுமை - 2: திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தம். ‘தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சி மன்றக் கூட்டங்களின்போது இருக்கையில் அமர அனுமதிக்காததுடன், கணக்கு வழக்குகளைப் பார்க்கவிடாமல், சுதந்திரதின விழாவில் கொடியேற்றவிடாமல் ஒடுக்கப்படுவதாக’ புகார் தெரிவித்தார். ‘தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்’ தலையிட்டதன் அடிப்படையில், ஊராட்சிச் செயலர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், ஆட்சியர் மற்றும் எஸ்.பி முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றினார் அமிர்தம்.

கொடுமை – 3: கோவை மாவட்டம், ஜே.கிருஷ்ணாபுரத்தின் பெண் ஊராட்சி மன்றத் தலைவரான சரிதா, ‘தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதிரீதியாகத் துன்புறுத்தப்படுவதுடன், பணி செய்யவிடாமலும் தடுக்கப்படுவதாக’ புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக அரங்கேறிவரும், இப்படியான அருவருக்கத்தக்க அவமதிப்பு சம்பவப் பட்டியல் மிக நீண்டது. அப்படி சமீபத்தில் அவமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ராஜேஸ்வரியும் சுகந்தியும்!

“இந்தச் சாதியில பொறக்குறது தப்பா..?”

கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்டது தெற்கு திட்டை ஊராட்சி. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி போட்டியிட்டு ஊராட்சித் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது, எல்லோரும் இருக்கையில் அமர்ந்திருக்க, தலைவரான இவர் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜேஸ்வரி யிடம் பேசினோம். “எல்லாரும் ஓட்டுப் போட்டுத் தான் நான் தலைவரா ஜெயிச்சேன். அன்னிலருந்தே கஷ்டம்தான். என் சாதியைக் காரணம் காட்டி, துணைத் தலைவர் மோகன்ராஜ் என்கிட்ட அடிக்கடி சண்டை வாங்குவாரு. ஊராட்சிச் செயலராக இருக்குற சிந்துஜாவும் அவருக்கு உடந்தை. நாம இந்தச் சாதியில பொறந்துட்டமேன்னு எல்லார்கிட்டயும் மரியாதையாத்தான் நடந்துக்கிட்டேன். இந்தச் சாதியில பொறக்குறது தப்பா சார்? ஊராட்சிக் கூட்டம் நடக்கறப்போ, எனக்கு சேர் போட மாட்டாங்க. வார்டு மெம்பர்லாம் சேர்ல உக்காந்துக்கிட்டிருக்கும்போது, தலைவரான என்னையும், வார்டு உறுப்பினர் சுகந்தியையும் தரையில உக்காரச் சொல்வாரு மோகன்ராஜ். என்னை ஜெயிக்கவெச்ச ஊர் மக்களுக்காக எல்லாத்தையும் அனுசரிச்சுக்கிட்டுப் போனேன். ‘தரைலதான் நீ உக்காரணும். எல்லா பஞ்சாயத்து வேலைகளையும் நான்தான் பார்ப்பேன். நீ யாருகிட்ட வேணும்னாலும் போ. கலெக்டர்கிட்ட கூடப் போ. உன்னால ஒண்ணும் பண்ண முடியாது’னு சொல்வாரு. என் வீட்டுக்கு வந்து, ‘பஞ்சாயத்தை கூட்டுறியா... இல்லை, நான் கூட்டட்டுமா?’னு சத்தம் போடுவாரு. சுதந்திர தினத்துக்குக்கூட என்னைக் கொடியேத்த விடாம, அவரோட அப்பாவை ஏத்தவெச்சாரு. எல்லாத்தையும் அவருதான் பார்ப்பாருன்னா... ஊராட்சி மன்றத் தலைவரா நாம எதுக்கு இருக்கோம்னு தோணிச்சு. இதையெல்லாம் தாங்கிக்க முடியாமத்தான் அறிவிச்சேன்” என்கிறார் ஆதங்கத்துடன்.

“தீர்மானத்துல கையெழுத்து மட்டும்தான் எங்ககிட்ட வாங்குவாங்க. ஜெய்யிச்சதுலருந்து இதுவரை மூணு கூட்டம் நடந்திருக்கு. எல்லாக் கூட்டத்துலயும் எங்களைத் தரையிலதான் உக்கார வெச்சாங்க” என்று வெடிக்கிறார் பட்டியல் இனத் தைச் சேர்ந்த 1-வது வார்டு உறுப்பினர் சுகந்தி.

ஊடகங்களில் புகைப்படம் வெளியானதை யடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர சாகமுரி மற்றும் மாவட்ட எஸ்.பி அபிநவ் இருவரும் நேரில் சென்று ராஜேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப் படையில், ஊராட்சிச் செயலரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், “முழுமையான விசாரணைக்குப் பிறகு இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சுகுமார் - மோகன்ராஜ்
சுகுமார் - மோகன்ராஜ்

அதுபோலவே துணைத்தலைவர் மோகன்ராஜ், அவருக்குத் துணையாக இருந்த 6-வது வார்டு உறுப்பினர் சுகுமார், ஊராட்சிச் செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஊராட்சிச் செயலர் சிந்துஜா, வார்டு உறுப்பினர் சுகுமார் இருவரும் கைதுசெய்யப் பட்டிருக்கும் நிலையில், மோகன்ராஜ் தலைமறைவாகிவிட்டார்.

சாதியின் பெயரால் ஒடுக்குவது, குறிப்பாகப் பெண்களை ஒடுக்குவது எந்த வகையிலும் ஏற்க முடியாத, மன்னிக்கவே முடியாத குற்றம். ‘இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ’ எனும் சித்தர் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ‘இவன் தாழ்ந்தவன்... இவன் உயர்ந்தவன்...’ என்று மனிதர்களின் தசையில், தோலில், எலும்பில் எழுதப்பட்டிருக்கிறதா என்ன? இந்த நிலத்தில் சாதியின் பெயரால் யார் எங்கு தீண்டாமைக்கு உள்ளாக்கப் பட்டாலும், அது மொத்த நாகரிகச் சமூகத்துக்கும் அவமானம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு