Published:Updated:

செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும் ஜார்ஜ் பொன்னையா...

ஜார்ஜ் பொன்னையா
பிரீமியம் ஸ்டோரி
ஜார்ஜ் பொன்னையா

சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி பற்றி கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன

செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும் ஜார்ஜ் பொன்னையா...

சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி பற்றி கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன

Published:Updated:
ஜார்ஜ் பொன்னையா
பிரீமியம் ஸ்டோரி
ஜார்ஜ் பொன்னையா

‘‘கன்னியாகுமரி மாவட்டத்துல நாங்க மெஜாரிட்டி! நாங்க வளர்ந்துக்கிட்டுதான் இருக்கோம்... நீங்க தடுக்க முடியாது. அதை ரொம்ப எச்சரிக்கையா இந்து சகோதரர்களுக்குச் சொல்ல விரும்புறோம்’’ என்று பேசி, தமிழகத்தில் கொதிநிலையை ஏற்படுத்திய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஜூலை மாதம் 18-ம் தேதி நடந்த சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டத்தில் பாரத் மாதா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. மாநில அமைச்சர்களையும் விட்டுவைக்கவில்லை அவர். ‘‘சேகர் பாபுவுக்கு ஒண்ணு சொல்லுறேன். நீ எத்தன கோயிலுக்குக் குடமுழுக்குக் கொடுத்தாலும்... மனோ தங்கராஜுக்கும் சொல்லுறேன்... நீங்க எத்தன கோயிலுக்குப் போய் துணி உடுக்காம சாமி கும்பிட்டாலும்... உங்களுக்கு ஒருத்தன்கூட ஓட்டுப்போட மாட்டான். மண்டைக்காட்டு அம்மனுங்க பக்தர்களும், இந்துக்களும் ஒரு ஓட்டு தரப் போறதில்லை. நீங்க ஜெயிச்சீங்கன்னா அது கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம்களும் உங்களுக்குப் போட்ட பிச்சைங்கிறதை மறந்துடாதீங்க...’’ என்று வரம்புமீறிய வகையிலான கருத்துகளைக் கக்கியிருந்தார் ஜார்ஜ் பொன்னையா.

செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும்  ஜார்ஜ் பொன்னையா...

பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளிக்கவே, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாகக் கூடுதல், உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் அருமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான ஜார்ஜ் பொன்னையா, தேடுதல் வேட்டைக்குப் பிறகு மதுரையில் கைதுசெய்யப்பட்டு. பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிரியார் பேசிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துமஸ் விழா தலைவர் பஞ்சு ஸ்டீபனும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பின்னணி பற்றி கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. ‘‘கன்னியாகுமரி மாவட்டம் கீழ மூலச்சலைச் சேர்ந்தவரு ஜார்ஜ் பொன்னையா. பாதிரியார் படிப்பு முடிச்ச பிறகு காற்றாடிமலை சர்ச்சுல பாதிரியாரா இருந்தார். அடுத்து, புலியூர்குறிச்சி உள்ளிட்ட சில சர்ச்சுகள்ல பங்குத்தந்தையா இருந்திருக்கார். அதன் பிறகு, பல சர்ச்சுகளை உள்ளடக்கிய முளகுமூடு வட்டார குருகுல முதல்வரா இருந்தார். குருகுல முதல்வரா இருந்தவங்க புரொமோஷன் ஆகி மறை மாவட்டச் செயலாளர், பொருளாளர்னு முக்கியப் பதவிக்கு போவாங்க. இவரோட பேட்சைச் சேர்ந்த பாதிரியார் ஒருத்தர் இப்போ ஆயருக்கு முந்தைய நிலை பொறுப்புல இருக்கார். ஆனா, ஜார்ஜ் பொன்னையாவோட செயல்பாடுகள் சரியில்லாததால, அவரை டீபுரொமோஷன் செஞ்சு, ஒரு சர்ச்சுக்கு பங்குத்தந்தையா நியமிச்சிருக்காங்க. கடந்த நான்காண்டுகளா கருங்கல் அருகேயுள்ள பனவிளை சர்ச் பங்குத்தந்தையா இருக்கார்.

செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும்  ஜார்ஜ் பொன்னையா...

அவர் பங்குத்தந்தையா இருந்த பெரும்பாலான சர்ச்சுகள்ல ரெண்டு கோஷ்டிகளை உருவாக்கி அடிதடியை உருவாக்கிடுவார். தக்கலை அருகேயுள்ள ஒரு கிராமத்துல, ரெண்டு சர்ச்சுகளுக்கு இடையேயுள்ள ஸ்கூல் சம்பந்தமான பிரச்னையைச் சுமுகமாகப் பேசித் தீர்க்காம, ஸ்கூலை இடிச்சு இரண்டு சபை மக்களிடையே விரோதத்தை வளர்த்துவிட்டார். அந்தப் பிரச்னையை விசாரிக்கப்போன பிஷப்பை மக்கள் தாக்குற நிலை ஏற்பட்டதுக்கும் இவரே காரணம். இப்படிப் போற இடத்துலல்லாம் வம்பு வளர்க்குறாரு. நம்ம நாட்டுக்கு இதுவரை வந்த ரெண்டு போப்களும் விமானத்துல வந்து இறங்கினதும், நம் மண்ணை முத்தமிட்டு மரியாதை செலுத்துவாங்க. அப்படிப்பட்ட மண் குறித்து, ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு, போப் ஆண்டவர் கவனத்துக்கும் போயிடுச்சு. கூடிய சீக்கிரமே சபையைவிட்டு அவரை நீக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்குது’’ என்றார்கள்.

ஜார்ஜ் பொன்னையா அரசியல்வாதிகளை வம்புக்கு இழுப்பது புதிதல்ல... ‘‘எலெக்‌ஷன் வந்தாலே ஜார்ஜ் பொன்னையா குஷியாகிடுவார். ‘நாகர்கோவில்ல சுரேஷ்ராஜன்கிட்ட, ‘நாங்க கிறிஸ்தவ வீடுகள்ல ஓட்டு கேக்கட்டா’னு கேட்டேன். அதுக்கு அவர், ‘வேண்டாம், ஒருவேளை இந்து ஓட்டு கிடைக்காமப் போயிடும்’னு சொன்னார். ஆனா, அங்க எம்.ஆர்.காந்தி ஜெயித்தார்’ என்று அந்தக் கூட்டத்தில் ஜார்ஜ் பொன்னையா பேசியதை கவனிச்சிருப்பீங்க. கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பனவிளை சர்ச்ல பங்குத்தந்தையா இருக்குறவர், நாகர்கோவில் தொகுதிக்கு ஓட்டுக் கேட்கப் போகவேண்டிய அவசியமென்ன?

`ஜனநாயக கிறிஸ்தவப் பேரவை’ என்ற பெயர்ல நூறு பிட் நோட்டீஸ் அடிச்சுவெச்சுக்கிட்டு, ‘கிறிஸ்தவ ஓட்டுகளை உங்களுக்கு வாங்கித் தர்றேன்’ என்று காங்கிரஸ், தி.மு.க வேட்பாளர்களிடம் சில லட்சங்களைக் கறந்துவிடுவார். பணம் கொடுக்காம இருந்தா ‘உங்களை எதிர்த்து போட்டியிடுற வேட்பாளர் அதி.மு.க., பா.ஜ.க கூட்டணியா இருந்தாலும், அவர் என் நண்பர்தான். அவருக்கு நான் சப்போர்ட் பண்ணினா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்’ என மிரட்டுவார். அப்படியும் பணியாதவர்களை, அவர் நடத்திவரும் பத்திரிகையில ஏடாகூடமா எழுதி காலி செய்வார். எப்படியும் டார்ச்சர் செஞ்சு பணம் வாங்காமல் விட மாட்டார்.

செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும்  ஜார்ஜ் பொன்னையா...

அவரின் சகோதரர் (பி.டி.எஸ்.மணி) காங்கிரஸ் கட்சியில பொறுப்புல இருக்காரு. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கும் காங்கிரஸ் கட்சியில சீட் வாங்கி எம்.எல்.ஏ அல்லது எம்.பி-யாகணும்னு ஆசை உண்டு. கடந்த தேர்தல்கள்ல அதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதனால்தான், தன்னை கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதிபோல காட்டிக்குறார். அவரின் செயல்பாடுகள் அனைத்தும் பணம், பதவி என சுயநலம் சார்ந்தது’’ என்று நம்மிடம் குமுறினார்கள் சில அரசியல் பிரமுகர்கள்.

பொது மேடைகளில் அதிகாரிகளை மட்டம்தட்டி, தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவாராம் ஜார்ஜ் பொன்னையா. இது பற்றி நம்மிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர், ‘‘அவரின் வீடியோ பேச்சுல, ‘இதுக்கு முன்ன ஒரு அம்மா ஆர்.டி.ஓ-வா இருந்தாங்க. என்னைக்கூட ஒரு விசாரணைக்குக் கூப்பிட்டிருந்தாங்க. நான் இங்கிலீஷ்ல பதில் சொன்னேன். ‘அமெரிக்காவுலயும் கனடாவுலயும் இங்கிலீஷ் படிச்சவன் நான். உன்னைவிட அதிகம் படிச்சவன்’னு ஆர்.டி.ஓ- கிட்ட சொன்னேன்’ என்று சொல்லியிருந்தார். உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பூக்கடைப் பகுதியில கோர்ட் தடையை மீறி ஒரு சர்ச்சில் திருவிழா நடத்துவேன்னு ஜார்ஜ் பொன்னையா பிரச்னை செய்தார். அது சம்பந்தமா அன்னிக்கு பத்மநாபபுரம் சப் கலெக்டரா இருந்த சரண்யா அறி தலைமையில நடந்த பேச்சுவார்த்தையில வாக்குவாதம் செஞ்சதால், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ‘கெட் அவுட்’னு சொல்லிட்டாங்க. அப்போ பேசாம வாய் மூடிக்கிட்டுப் போனவர், இப்ப அதை அப்படியே மாத்தி மேடையில பேசியிருக்காரு’’ என்றார்.

நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான எம்.ஆர்.காந்தியை ஏடாகூடமாக விமர்சித்திருந்தார் ஜார்ஜ் பொன்னையா. அது பற்றி நம்மிடம் பேசிய எம்.ஆர்.காந்தி, ‘‘ஒரு பொறுப்பில இருந்துக்கிட்டு ஜார்ஜ் பொன்னையா இப்படிப் பேசக் கூடாது. ‘நாங்க 62 சதவிகிதத்தைத் தாண்டியாச்சு. கன்னியாகுமரி மாவட்டத்துல 38 சதவிகிதம்தான் இந்துக்கள் இருக்கிறார்கள்’ எனச் சொல்லி இந்துக்களை மிரட்டுறார். இப்ப மதக்கலவரம் வரணும்னு அவர் விரும்புறாரா இல்லை... கன்னியாகுமரி மாவட்டத்தைவிட்டு இந்துக்கள் வெளியேறணும்னு விரும்புறாரானு எனக்குத் தெரியலை. அதுலேயும் பாரத் மாதாவை இழிவுபடுத்திப் பேசியது மிகப்பெரிய தவறு. அதற்கு மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கணும். அவர் அருமனை கூட்டத்துல பேசிய பிறகு ஒரு வீடியோ வெளியிட்டார். அதுல, இந்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதா சாதாரணமா சொல்றார். அவரின் பேச்சுக்கு மன்னிப்புக்கூடக் கேட்கலை’’ என்றார்.

இந்த விவகாரத்தில், “வெறுப்பு பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று சொல்லும் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்குச் சில பிரச்னைகள் இருப்பது உண்மை. அவற்றை உரிய வழியில் தீர்ப்பதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் இந்த அரசு முழுமையான உத்தரவாதத்தைக் கொடுக்கும். எப்போது, யார் பேசினாலும் மற்றவர்களுடைய மனம் புண்படும்படியாகப் பேசுவது ஏற்புடையதல்ல’’ என்றார்.

‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்ற கர்த்தரின் அன்பையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டிய போதகரே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசலாமா?

எம்.ஆர்.காந்தி, மனோ தங்கராஜ்
எம்.ஆர்.காந்தி, மனோ தங்கராஜ்
செல்லுமிடமெல்லாம் வம்பு! - வரம்புமீறும்  ஜார்ஜ் பொன்னையா...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism